இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமாகும் இளம் வனிந்து ஹசரங்க!

176

இலங்கை கிரிக்கெட் அணியின் கடந்தகால தொடர் தோல்விகளை மறக்கடித்திருந்த தொடர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாஹூரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T20I  தொடர். 

சரியான பதினொருவர் வரிசையொன்றை கட்டியழுப்பத் தவறிவந்த இலங்கை கிரிக்கெட் அணி அதிகமாக விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. ஒரு சில போட்டிகளில் திடீரென இலங்கை அணி எழுச்சி பெற்றிருந்தாலும், தொடர் வெற்றியென்பது இலங்கை அணிக்கு எட்டாக்கணியாகவே இருந்தது.

பாகிஸ்தானை வென்ற இலங்கை அணிக்கு 145,000 டொலர்கள் பணப்பரிசு

பாகிஸ்தான் அணியுடனான T20i கிரிக்கெட் தொடரை வெல்லக்….

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, ஒரு சில முன்னேற்றங்கள் இருந்தாலும், ஒருநாள் மற்றும் T20I  போட்டிகளில் தொடர் வெற்றியென்பது இலங்கை அணிக்கு சுவைக்க முடியாத கனியான இருந்தது. எனினும், ஜிம்பாப்வே, பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற அணிகளை வீழ்த்திய இலங்கை அணிக்கு தொடர் வெற்றி கிட்டியிருந்தாலும், பலம் வாய்ந்த அணிகளுக்கு சவால் கொடுக்க தடுமாறியிருந்தமை பெரும் பின்னடைவாகவே இருந்தது.

குறிப்பாக, கடைசியாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தமை அணியின் பலவீனத்தை தெளிவாக காட்டியிருந்தது.

இப்படி, தொடர் தோல்விகளுக்கு மத்தியில் பலவீனமாக இருந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணிக்கு எதராக, அதுவும் T20I  தரவரிசையில் முதல் இடத்தை பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியை 3-0 என வீழ்த்தி வரலாற்று வெற்றியுடன் நாட்டை வந்தடைத்திருக்கிறது. இதில், பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்திற்கொண்டு முன்னணி வீரர்கள் தொடருக்கு செல்ல மறுக்க, இளம் வீரர்களுடன் சென்றிருந்த இலங்கை அணி இந்த வரலாற்றை படைத்திருந்தது இலங்கை ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தமாகும்.  

பாகிஸ்தானில் விளையாடியிருந்த இளம் வீரர்களை கொண்டிருந்த இலங்கை அணி ஒருநாள் போட்டிகளிலும்  பிரகாசித்திருந்தது. ஆனால், அவர்களால் வெற்றியை மாத்திரமே பெறமுடியவில்லை. இப்படி பாகிஸ்தானில் சாதனை படைத்த இலங்கை அணியில் விளையாடிய அத்தனை இளம் வீரர்களும் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி, அடுத்தடுத்த தொடர்களுக்கான இடத்தை தக்கவைத்திருக்கின்றனர்.

ஆனால், இந்த தொடரில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த இளம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, இலங்கை அணியின் எதிர்காலம் என வர்ணிக்கப்பட்டு வருகின்றார். அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I  உலகக் கிண்ணத்தில் அணிக்கு முக்கியமான சுழல் பந்துவீச்சாளராகவும் இவர் இருப்பார் என்ற நம்பிக்கையும் இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கடந்த காலங்களில் இலங்கை அணி அதிக வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள். எந்தவொரு ஆடுகளத்திலும் நுணுக்கமாக பந்துவீசி எதிரணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு, எதிரணிக்கு அழுத்தத்தையும் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர்கள். 

பாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க

உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக….

அதற்கு முக்கிய உதாரணமாக முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத் மற்றும் துடுப்பாட்ட வீரர்களாகவும் இருந்த சனத் ஜயசூரிய, அரவிந்த டி சில்வா என வீரர்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், கடந்த சில வருடங்களாக இலங்கை அணியில் முன்னணி சழல் பந்துவீச்சாளருக்கான இடைவெளி நீண்டுக்கொண்டுதான் போகிறது.  

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I என எந்தவகை கிரிக்கெட் போட்டியென்றாலும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய, எதிரணிக்கு சவால் விடுக்கக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை. அதிலும், தற்போதைய காலத்தில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. காரணம், துடுப்பாட்ட வீரர்கள் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறி வருகின்றனர்.

அப்படி, சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறி வருவதை அறிந்த இலங்கை கிரிக்கெட் அணி, பல்வேறு புதிய வீரர்களுக்கும், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த அனுபவம் மிக்க வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால், உள்ளூர் போட்டிகளில் பிரகாசிக்கும் சுழல் பந்துவீச்சாளர்கள் சர்வதேச அளவில் ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.

 ஆனால், இளம் சுழல் பந்துவீச்சாளரான அகில தனன்ஜய அணிக்குள் நுழைந்ததும், இந்த இடைவெளி சற்று குறையத் தொடங்கியது. அகில தனன்ஜயவின் நேர்த்தியான பந்துவீச்சும், அவரது மணிக்கட்டு சுழலும் இலங்கை அணிக்கு ஒரு புது தெம்பினை வழங்கியிருந்தது. காரணம், அவர் விளையாடிய போட்டிகளில் சரியான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியும், எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்தும் வந்தார்.

அகில தனன்ஜயவுடன், மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளராக லக்ஷான் சந்தகன் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். இவர், இலங்கை கிரிக்கெட்டில் முதலாவது சைனமன் சுழல் பந்துவீச்சு பாணியை கொண்ட வீரராக அடையாளம் காணப்பாட்டார். திறமை வாய்ந்த வீரர் என்றாலும், அவரது பந்துவீச்சானது ஒரு நேர்த்தியற்றதாக இருந்தமை இலங்கை அணிக்கு அதிகம் சவாலாக விளங்கியது. 

குறிப்பாக பந்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது, சரியான இடத்தில் பந்தினை பதிப்பது மற்றும் தொடர்ச்சியாக பந்தினை ஒரே இடத்தில் பதிப்பது என்ற விடயங்களில் இவர் இலங்கை அணிக்கு ஏமாற்றம் வழங்கினார். ஆனாலும், இவர் மீது நம்பிக்கை வைத்த இலங்கை அணி அவருக்கும் மேலும் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. 

பாகிஸ்தானில் பிரகாசித்த இளம் வீரர்களுக்கு ஆஸி. தொடரில் இடம் கிடைக்குமா? Cricket Kalam 33

பாகிஸ்தானில் இளம் இலங்கை அணி பெற்ற வரலாற்று தொடர்….

இப்படி, அகில தனன்ஜய மற்றும் லக்ஷான் சந்தகன் என்ற இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து இலங்கை அணி நகர்ந்துக்கொண்டிருந்த போது, ஐசிசியினால் அகில தனன்ஜயவுக்கு விதிக்கப்பட்ட ஒருவருட பந்துவீச்சு தடை இலங்கை அணிக்கு மற்றுமொரு தடைக்கல்லாக மாறியது. பந்துவீச்சு முறையற்றது என முதல் தடவை ஐசிசி அறிவுறுத்திய போது, மீண்டும் சரிசெய்த அகில தனன்ஜய, இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பிடிபட்டார். 

அகில தனன்ஜயவின் ஒருவருட தடையானது அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்கு தாக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கிறது. இதற்கான உடனடியான தீர்வினை இலங்கை கிரிக்கெட் அணி எடுக்கவேண்டிய சூழ்நிலையில், முதல் ஆயுதமாக இருந்தவர் லக்ஷான் சந்தகன்.

அவரை தயார்செய்யும் நோக்கில் இலங்கை அணி புறப்பட்டாலும், அவரது பந்துவீச்சின் சீரற்ற தன்மை கேள்வியை எழுப்பியிருந்தது. ஆனால், அவரையும், சேர்த்து சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவையும் இலங்கை அணி பரீட்ச்சிக்க தொடங்கியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் முதன்முறையாக விளையாடிய வனிந்து ஹசரங்க, மூன்று போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுகளை விடவும், இக்கட்டான தருணங்களில் வனிந்து பந்துவீசிய விதம் அவர் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கியது.  

அதனைத் தொடர்ந்து முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுக்க, வனிந்து ஹசரங்கவுக்கான இடம்  இலகுவாக கிடைத்தது. அணிக்குள் இடம் இலகுவாக கிடைத்துவிட்டாலும் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், நடைபெற்ற T20I தொடரில் அணியில் தன்னுடைய இடத்தை தக்கவைப்பதற்கான அனைத்து விடயங்களையும் வனிந்து ஹசரங்க செய்துமுடித்தார்.

மூன்று போட்டிகளிலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர், முக்கியமான தருணங்களில் போட்டியை மாற்றக்கூடிய வகையில் பந்தவீசியிருந்தமை இவரின் மீதான கவனத்தை மேலும் அதிகப்படுத்தியிருந்தது. குறிப்பாக, இரண்டாவது போட்டியில் தனது ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியமை, மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறிக்கும் வகையில் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை சாய்த்தமை என்பன இவரை ஒரு முழுமையான ஒரு சுழல் பந்துவீச்சாளராக காட்டியது. 

அதிலும், முதல் நிலை சுழல் பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன் பந்தினை சரியான இடத்தில் பதிப்பதற்கு தடுமாறியிருந்த போதும், வனிந்து ஹசரங்வின் பந்துவீச்சில் உள்ள கட்டுப்பாடும், நேர்த்தியும் அனைவரையும் இரசிக்க வைத்தது. அதேநேரம், சகலதுறை வீரராக இருந்தாலும், இவரது பந்துவீச்சில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் அவரின் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற  எண்ணமும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

குறிப்பாக அவரது மணிக்கட்டு இடதுகை சுழல் பந்துவீச்சை விடவும், அவருடைய கூக்ளி பந்துகள் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களை தினறச்செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனவே, தற்போது முழுமையான சுழல் பந்துவீச்சாளராக மாறியிருக்கும் வனிந்து ஹசரங்க இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு துறையை தன்னகத்தே கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

மாலிங்க ஓய்வு பெற்றால் தசுன் ஷானக்க தலைவராகலாம்

சர்வதேச T20 அரங்கிலிருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றால்….

அகில தனன்ஜய விட்டுச்சென்ற இடத்தை வனிந்து ஹசரங்க ஒரு சகலதுறை வீரராக ஈடு செய்வாராயின், இலங்கை அணிக்கு இதுவொரு பாரிய பலமாக அமையும். ஏனெனில் பாகிஸ்தான் சென்று முதல் நிலை T20I அணியின் துடுப்பாட்ட வீரர்களை பந்துவீச்சாளராக தினறச்செய்தது மாத்திரமின்றி, இவரது துடுப்பாட்டமும், களத்தடுப்பும் மிகச்சிறப்பாகவே இருந்தது. 

துடுப்பாட்டத்தில் ஓரிரு பந்துகளை எதிர்கொண்டாலும், அவரால் துடுப்பெடுத்தாட முடியும் என்ற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் தோற்றுவித்திருக்கிறார். அதேநேரம், அவரது களத்தடுப்பு அதனை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மைதானத்தில் அவரிடம், செல்லும் ஒவ்வொரு பந்துகளும் நொடிப்பொழுதில் விக்கெட் காப்பாளரை அடைவதும், பௌண்டரி எல்லையை கணப்பொழுதில் கவனிப்பதும், பிடியெழுப்புகளை இலாவகமாக எடுப்பதும் என ஒரு முற்றுமுழுதான இளம் சகலதுறை வீரர்  ஒருவராக வனிந்து ஹசரங்க இலங்கை அணிக்கு கிடைத்துள்ளார்.

எனவே, இத்தனை திறமைகள் உடைய வனிந்து ஹசரங்க, தொடர்ந்தும் தனது திறமைகளை வெளிக்காட்டி, மேலும் திறமைகளை வளர்த்து, இலங்கை அணியின் முதன்மை சுழல் பந்துவீச்சாளரின் இடைவெளியை போக்கி, இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே எமது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க