இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து மெதிவ்ஸ் ராஜினாமா

1609
Mathews

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இருந்து அஞ்சலோ மெதிவ்ஸ் ராஜினாம செய்திருப்பதாக தெரியவருகிறது.

சூரியவெவ மைதானத்தில் திங்கட்கிழமை (10) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரையும் 3-2 என இழந்த நிலையிலேயே மெதிவ்ஸ் கொழும்பு திரும்பிய பின் தனது ராஜினாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை (11) வழங்கியுள்ளார். தொடரை இழந்த பின் கருத்து வெளியிட்ட மெதிவ்ஸ், தனது கிரிக்கெட் வாழ்வில் இது மோசமான தருணம் என்றும் இதனை ஜீரணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

”இது எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணங்களில் ஒன்று. இதனை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. நாணய சுழற்சி தொடக்கம் ஆடுகளத்தின் தன்மைகளை ஊகிப்பது வரை எல்லாம் எமக்கு எதிராக இருந்தது. ஆட்ட முடிவில் அவர்களை வீழ்த்த நாம் சிறந்த நிலையில் இல்லை என்பதால் எந்த நியாயங்களும் கூறமுடியாது. அவர்கள் சிறந்த முறையில் விளையாடினார்கள்” என்று மெதிவ்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டு இலங்கை அணியின் இளம் டெஸ்ட் தலைவராக தனது 25ஆவது வயதில் தேர்வான மெதிவ்ஸ் 34 டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்பட்டு 13 வெற்றி மற்றும் 15 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். முன்னாள் புனித ஜோசப் கல்லூரி மாணவனான மெதிவ்ஸ், 2012 இல் தனது முதல் ஒருநாள் தலைமைப் பொறுப்பை வகித்தது தொடக்கம் 98 போட்டிகளில் தலைமை வகித்து 47 போட்டிகளிலேயே அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றுள்ளார். 45 சந்தர்ப்பங்களில் மெதிவ்ஸின் தலைமையில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் மெதிவ்ஸ் தலைமையில் இலங்கை அணி வெறும் 4 போட்டிகளிலேயே வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்ட மெதிவ்ஸின் தலைமைப் பதவியில் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை 3-0 என வைட் வொஷ் செய்தது முக்கிய தருணமாக கருதப்படுகிறது.   

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஜூலை மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள ஜிம்பாப்வே உடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தலைவராக செயற்பட வாய்ப்பு இருப்பதோடு உபுல் தரங்க இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் மெதிவ்ஸின் ராஜினாமாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் உறுதி செய்யவில்லை.