சிம்பாப்வேயிற்கு 2 ஓட்டங்களால் வெற்றி

396
Zimbabwe India Cricket
AP Photo

இந்தியா- சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார். இந்திய அணியில் சாஹல், ரிஷி தவான், மந்தீப் சிங், லோகேஷ் ராகுல் மற்றும் உனத்கட் ஆகிய ஐந்து பேர் புதுமுகங்களாக அறிமுகமானார்கள்.

இதற்கிணங்க சிம்பாப்வே அணி சார்பாக சிபாபா, மசகட்சா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாபா 19 பந்துகளில் 20 ஓட்டங்களையும் , மசகட்சா 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்று நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தனர். சிறந்த தொடக்கத்தைத் தொடர்ந்து 4ஆவது வீரராக வந்த ஷிகந்தர் ரசா 18 பந்துகளில் 20 ஓட்டங்களையும், வொலர் 21 பந்துகளில் 30 ஓட்டங்களையும் சேர்த்து ஓட்ட வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

7ஆவது வீரராக களம் இறங்கிய சிகும்புரா அதிரடி வானவேடிக்கை நடத்தினார். அவர் சிக்ஸர் மழை பொழிந்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டார். கடைசி ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் 2ஆவது மற்றும் 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து அரைச்சதம் கடந்தார். இவரது அரைச்சதத்தால் சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்துள்ளது. சிகும்புரா 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் பும்ப்ரா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

171 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தமது இனிங்ஸைத்  தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை டிரிபானோ வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் கிளீன் போல்டானார்.

2ஆவது விக்கெட்டுக்கு மந்தீப் சிங்குடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இவர் 19 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டம் இழந்தார். மந்தீப் சிங் தன் பங்கிற்கு 27 பந்துகளில் 31 ஓட்டங்களைச்  சேர்த்தார்.

அடுத்து மணீஷ் பாண்டேவுடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். பாண்டே நிலைத்து நின்று விளையாடினார். ஜாதவ் 13 பந்துகளில் 19 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டம் இழந்தார்.

அப்போது இந்தியா 12.2 ஓவர்களில் 90 ஓட்டங்களை  எடுத்திருந்தது. இந்தியாவின் வெற்றிக்கு 46 பந்துகளில் 81 ஓட்டங்கள்  தேவைப்பட்ட நிலையில்  டோனி களம் இறங்கினார். டோனி ஒரு பக்கம் நிதானமாக விளையாட, மணீஷ் பாண்டே அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 18ஆவது ஓவரில் பாண்டே ஆட்டம் இழந்தார். அவர் 35 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸருடன் 48 ஓட்டங்களைச் சேர்த்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 16 பந்துகளில் 28 ஓட்டங்கள் தான் தேவைப்பட்டது.

அடுத்து அக்சார் பட்டேல் களம் இறங்கினார். கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் பட்டேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் அந்த ஓவரில் 13 ஓட்டங்கள்  பெறப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மட்சிவா வீசினார். முதல் பந்தில் டோனி ஒரு ஓட்டம்  எடுத்தார். அடுத்த பந்தில் அக்சார் பட்டேல் ஆட்டம் இழந்தார். 3ஆவது பந்தில் டோனி ஒரு ஓட்டம்  எடுத்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 4ஆவது பந்தை ரிஷி தவான் சந்தித்தார். இதில் ஓட்டம்  ஏதும் எடுக்கவில்லை. அடுத்த பந்தில் வைட் மூலம் ஒரு ஓட்டம்  கிடைத்தது.

இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் ரிஷி தவான் ஒரு ஓட்டம்  எடுத்தார். இதனால் கடைசிப் பந்தில் பவுண்டரி தேவைப்பட்டது. இந்தப் பந்தை டோனி சந்தித்தார். ஆனால், டோனியால் ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சிம்பாப்வே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. டோனி 17 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 19 ஓட்டங்கள்எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல்  இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சிம்பாப்வே 1-0 என முன்னிலையில் உள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்