ஹர்ஷிதாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி

Women’s T20 Asia Cup 2026

105
Women’s T20 Asia Cup 2026

துபாயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (06) நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அந்;த அணி சார்பில் சோபனா மோஸ்தரி 34 ஓட்டங்களையும், டிலாரா அக்தர் 26 ஓட்டங்களையும், ஜுஐரியா பிர்தௌஸ் 14 ஓட்டங்னகளையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய இடதுகை சுழல்பந்து வீச்சாளர் சமோதி பிரபோதா 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு பதிவாகும் மற்றொரு இடதுகை சுழல்பந்து வீச்சாளரான சுகந்திகா குமாரி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றி சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இதனையடுத்து 115 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி, முதல் 10 ஓவர்களுக்குள் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

இருப்பினும், நெருக்குதலான சூழலில் உறுதியுடன் களத்தில் நின்ற ஹர்ஷிதா சமரவிக்ரம, இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைக் குவித்த அவர், அணியின் கடினமான வெற்றிக்கு வித்திட்டார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மருஃபா அக்தர் அக்தர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகியாக ஹர்ஷிதா சமரவிக்ரம தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றது.

போட்டிச் சுருக்கம்

பங்களாதேஷ் மகளிர் அணி – 114/8 (20 ஓவர்கள்) சோபனா மோஸ்தரி 34, டிலாரா அக்தர் 26. சமோதி பிரபோதா 3/21, சுகந்திகா குமாரி 2/22

 

இலங்கை மகளிர் அணி – 115/6 (19.2 ஓவர்கள்) ஹர்ஷிதா சமரவிக்ரம 48*, மருஃபா அக்தர் 3/21

 

முடிவு – இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<