மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஆப்கானிஸ்தான்

632
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஆப்கானிஸ்தான்

ஐ.சி.சி 20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் 30ஆவது போட்டி இன்று நாக்பூரில் அமைந்துள்ள விதர்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குழு ஒன்றின் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டெரன் சமி தலைமையிலான பலமான மேற்கிந்திய தீவுகள் அணி குழு ஒன்றின் அணிகளின் தரவரிசையில் கடைசியில் தரப்படுத்தப்பட்டிருக்கும் அஸ்கர் ஸ்டனிக்சாய் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

ஏற்கனவே குழு ஒன்றில் மேற்கிந்திய தீவுகள்  இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள நிலையில் இந்தப் போட்டி  முக்கியம் வாய்ந்த போட்டியாக அமையவில்லை. ஆனாலும் ஆறுதல் வெற்றியைப் பெரும் நோக்குடன் இன்சமாம் உல் ஹக்கின் பயிற்சிவிப்பின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. இப்போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

இன்றைய போட்டியில் விளையாடிய அணிகளின்  விபரம்

மேற்கிந்திய தீவுகள் அணி :

டெரன் சமி (தலைவர்) , என்டர் ப்லெச்சர், எவின் லெவிஸ், ஜொன்சன் சார்ல்ஸ், மார்லன் செமுவல்ஸ், டினேஷ் ராம்டின், டுவேயின் ப்ராவோ, என்டர் ரசல், கார்லஸ் பரத்வைட், சாமுவேல் பத்ரி, சுலிமன் பென்

ஆப்கானிஸ்தான் அணி  :

அஸ்கர் ஸ்டனிக்ஸாய் (தலைவர்),  முகமது ஷாஸத், உஸ்மான் கனி, முகமது நபி, குலாப்டின் நயிப், சம்யுல்லாஹ் ஷென்வாரி, நஜிபுல்லாஹ் சத்ரன், சபீகுல்லாஹ், ரசீத் கான், அமீர் ஹம்சா, ஹமீத் ஹசன்.

நடுவர்கள் : ப்ரூஸ் ஒக்சன்போர்ட் மற்றும் அலீம் டார்

டெரன் சமியின் தீர்மானத்தின் படி ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உஸ்மான் கனி மற்றும் முஹமத் ஷசாத் ஆகியோர் களம் இறங்கினர். ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி மன்னன் முஹமத் ஷசாத் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 24 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் பொறுமையாக விளையாடி 22 பந்துகளில் 1 சிக்ஸர் அடங்கலாக 16 ஓட்டங்களோடு சாமுவேல் பத்ரி வீசிய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சொற்ப ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து வெளியேரினாலும் மறுமுனையில் தனி மரமாக நின்று போராடிய நஜிபுல்லாஹ் சத்ரன் மட்டும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அதிக பட்ச ஓட்டமாக 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 48 ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் அணியை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில்  சாமுவேல் பத்ரி நான்கு ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும், என்டர் ரசல் 2 விக்கட்டுகளையும் தலைவர் டெரன் சமி  மற்றும் சுலிமன் பென் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதமும் வீழ்த்தினார்கள்.

இதன் பிறகு 124 ஓட்டங்களைப்  பெற்றால்  வெற்றி என்ற சிறிய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான  க்றிஸ் கெயிலிற்கு பதிலாக அணியில் இணைக்கபட்ட எவின் லெவிஸ் மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். அறிமுக வீரர் எவின் லெவிஸ்  ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார். அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜொன்சன்  சார்ல்ஸ் 15 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்ற நிலையில்  ஹமித் ஹசன் வீசிய பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

அடுத்து களமிறங்கிய என்டர் ப்லெச்சர் பாதியில் காயம் காரணமாக 11 ஓட்டங்களோடு வெளியேறினார். கடந்த தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில்  ஆட்டநாயகன் விருது வென்ற மார்லன் செமுவல்ஸ்  5 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து பெரும் ஏமாற்றம் அளித்தார். சகலதுறை வீரர் டுவேயின்  பிராவோ சற்று  நிலைத்து நின்று விளையாடி 29 பந்துகளில்  28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முகமத் நபி வீசிய  பந்து வீச்சில் எல்.பி.டப்ளியு முறையில் ஆட்டம் இழந்தார்.

அதன் பின் தலைவர் டெரன் சமியும் 6 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க  ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. அடுத்து களமிறங்கிய கார்லஸ்  பார்த்வெயிட் 19ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாச போட்டியின் கடைசி ஓவரில்  மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை முகமத் நபி வீச முதல் பந்தில் சாமுவேல் பத்ரி 1 ஓட்டத்தை எடுக்க அடுத்த பந்தில் பார்த்வெயிட் அடித்த பந்தை நஜிபுல்லா அற்புதமாக பிடியெடுக்க போட்டி ஆப்கானிஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது. கடைசி இரு பந்தில் 9 ஓட்டங்கள்  தேவைப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களால்  2 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆப்கான் அணி  6 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியைத் தோல்வி அடையச் செய்தது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக நஜிபுல்லா தெரிவு  செய்யப்பட்டார். வலுவான அணியான மேற்கிந்திய தீவுகள் அணி ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் பின் குழு ஒன்றின் அட்டவணையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. குழு ஒன்றின் அணிகள் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இடத்திலும் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் காணப்படுகிறது.