திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதா? உண்மைச் சம்பவம் இதுதான்

2608

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியினர் நேற்று (சனிக்கிழமை) கார்டிப்பில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, சகலதுறை வீரர் திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் எந்தவித பாரிய உபாதைகளுக்கும் உள்ளாகவில்லை.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கைக்கு மற்றுமொரு இழப்பு

இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக நாளை பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள குழு மட்டத்திலாக இறுதி ஆட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கை அணி வீரர்கள் கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டன் அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்போது திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான செய்தி சேகரிப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ள ThePapare.com இன் ஊடகவியலாளர் தமித் வீரசிங்க, சோபியா கார்டன் அரங்கில் இருந்து இந்த விடயம் தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்தார்.

அவர், ”நேற்றைய தினம் இலங்கை வீரர்கள் கார்டிப்பில் தமது முதல் பயிற்சிகளை மேற்கொண்டனர். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்பொழுது பந்து திஸர பேரேராவின் தலையைத் தாக்கியது. எனினும் அதன்மூலம் எந்தவித பாரிய ஆபத்தும் அவருக்கு ஏற்படவில்ல. குறித்த சம்பவத்தின் பின்னரும் அவர் நீண்ட நேரம் வலையில் துடுப்பாட்ட பயிற்சிகளை மேற்கொண்டார்” எனத் தெரிவித்தார்.  

ஏற்கனவே, இலங்கை அணியின் சாமர கபுகெதர உபாதை காரணமாக இந்தியாவுடனான போட்டியில் விளையாடவில்லை. இந்தியாவுடனான போட்டியில் குசல் ஜனித் பேரேரா உபாதைக்குள்ளாகியமையினால், தொடரில் இருந்து நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

புகைப்படங்கள் – கார்டிப்பில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை

இவற்றுக்கு மேலதிகமாக, ஏற்கனவே இரண்டு போட்டித் தடைகளுக்கு உள்ளாகியுள்ள உபுல் தரங்கவும் அணியில் இல்லாததால், அதிகமான இளம் வீரர்களுடனேயே பாகிஸ்தான் அணியுடனான நாளைய போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இறுதியாக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 7 விக்கெட்டுகளால் அபாரமாக வெற்றி கொண்டது. இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்டிப்பில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை