த்ரில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி

110

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் இளையோருக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இளையோர் அணி தனது முதல் போட்டியில் சொனால் தினுஷவின் நிதான துடுப்பாட்டத்தின் உதவியுடன்  1 விக்கெட்டினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இங்கிலாந்து இளையோர் அணி, மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி மற்றும் இலங்கை இளையோர் அணிகளின் பங்குபற்றுதலுடன் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமான குறித்த முத்தரப்பு தொடரில் இரு போட்டிகள் நிறைவுற்றிருந்த நிலையில், தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (10) அண்டிகுவாவில் நடைபெற்றது. 

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் அணித்தலைவராக தசுன் ஷானக்க

2019 – 2020 ஆம் ஆண்டுக்கான பங்கபந்து……

குறித்த போட்டியில் இலங்கை இளையோர் அணியும் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணியும் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்திருந்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

இலங்கை இளையோர் அணியில் திலும் சுதீர மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோரும், மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணியில் ரொமென் சிம்மென்ட்ஸ் ஆகிய வீரர்கள் ஒருநாள் அறிமுகத்தை பெற்றுக்கொண்டனர். போட்டி ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி மந்தமான நிலையிலேயே ஆட்டத்தை ஆரம்பித்து மந்தமான நிலையிலேயே 50 ஓவர்களையும் நிறைவு செய்தது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கம் இரு வீரர்களை தவிர ஏனைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிக பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில் ஐந்தாமிலக்க துடுப்பாட்ட வீரர் கொவ்லொன் அண்டர்சன் 70 பந்துகளை முகங்கொடுத்து 1 பௌண்டரியுடன் 43 ஓட்டங்களையும், பந்துவீச்சாளர் ஜெய்டன் ஸீலஸ் 1 சிக்ஸர், 1 பௌண்டரியுடன் 23 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர். மேலும் அஸ்மேட் நீட் 21 ஓட்டங்களையும், கிர்க் மெகின்ஸ் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

SAG கிரிக்கெட்: தங்கப் பதக்கத்தை இழந்த இலங்கை ஆடவர் அணி

தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆடவர்…..

இலங்கை அணியின் பந்துவீச்சில் கவிந்து நதீஷான் 10 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அம்ஷி டி சில்வா 6 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சொனால் தினுஷ மற்றும் அஷேன் டேனியல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் கைப்பற்றினர். 

138 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை இளையோர் அணிக்கு ஆரம்பத்திலிருந்து அதிர்ச்சி ஏற்பட்டது. முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை இளையோர் அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. 17 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது இலங்கை இளையோர் அணி.

ஆறாவது விக்கெட்டுக்கான இணைந்த அணித்தலைவர் நிபுண் தனஞ்சய மற்றும் சொனால் தினுஷ ஜோடி இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்தது. நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் நிபுன் தனஞ்சய 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி தோல்வியின் பக்கம் சென்றது. 

இறுதியில் 112 பந்துகள் மீதமிருக்கின்ற நிலையில் 1 விக்கெட் கைவசமுள்ள நிலையில் இலங்கை அணியின் வெற்றி இலக்கிற்கு 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஏழாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சொனால் தினுஷ இறுதி வரை போராடி ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை 1 விக்கெட்டினால் உறுதி செய்தார். 

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த மேற்கிந்திய தீவுகள்

இந்திய அணியுடனான இரண்டாவது டி20…..

மறுமுனையில் இலங்கை அணியின் வெற்றிக்கு இறுதி விக்கெட்டில் சொனால் தினுஷவுக்கு சிறந்த ஆதரவு வழங்கிய அம்ஷி டி சில்வா 2 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சில் கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய ரொமென் சிம்மென்ட்ஸ் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஜெய்டன் ஸீலஸ் மற்றும் நயீம் யங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும், மெத்யூ போட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இவ்வெற்றியின் மூலம் ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியை பெற்றுக்கொண்ட இலங்கை இளையோர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சில் அசத்திய கவிந்து நதீஷான் தெரிவானார். 

குறித்த முத்தரப்பு தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை இளையோர் அணியும் இங்கிலாந்து இளையோர் அணியும் இன்று (11) இதே மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன. 

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இலங்கை?

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான்…..

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி – 137/9 (50) – கொவ்லொன் அண்டர்சன் 43 (70), ஜெய்டன் ஸீலஸ் 23 (27), கவிந்து நதீஷான் 4/20 (10), அம்ஷி டி சில்வா 3/18 (6)

இலங்கை இளையோர் அணி – 138/9 (40.1) – சொனால் தினுஷ 46 (63), நிபுண் தனஞ்சய 31 (45), ரொமென்; சிம்மென்ட்ஸ் 3/31 (8), ஜெய்டன் ஸீலஸ் 2/23 (10)

முடிவு – இலங்கை இளையோர் அணி 1 விக்கெட்டினால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<