வொஷிங்டன் சுந்தருக்கு கொவிட்-19 தொற்று

148
Washington Sundar

பந்துவீச்சு சகலதுறைவீரரான தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தரிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர், இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. 

>> இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.  

இந்த சுற்றுப்பயணத்தில் தற்போது டெஸ்ட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வொஷிங்டன் சுந்தர், தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதனால் தென்னாபிரிக்கா செல்வது தடைப்பட்டிருப்பதுடன், ஒருநாள் தொடரிலும் பங்கெடுப்பது சந்தேகம் என இந்திய கிரிக்கெட் செய்திச்சேவையான CricBuzz இணையதளம் குறிப்பிட்டிருக்கின்றது.

கடைசியாக 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் ஆடியிருந்த வொஷிங்டன் சுந்தர் அதனையடுத்து தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக தனது தாயகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை இழந்திருந்தார். 

எனினும் உபாதைகளிலிருந்து மீண்ட பின்னர் விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் தமிழக அணிக்காக பிரகாசித்திருந்த வொஷிங்டன் சுந்தர், அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். தற்போது இந்த வாய்ப்பு கொவிட்-19 வைரஸ் காரணமாக வொஷிங்டன் சுந்தருக்கு இல்லாமல் போகும் நிலை உருவாகியிருக்கின்றது.

>> லெஜண்ட்ஸ் தொடரில் விளையாடவுள்ள 7 இலங்கை வீரர்கள்!

அதேநேரம், வொஷிங்டன் சுந்தர் இல்லாமல் போகும் நிலையில் அவருக்கான பிரதியீட்டு வீரர் தொடர்பில் விரைவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<