அரையிறுதி பயணத்துக்கான முக்கிய மோதலில் தென்னாபிரிக்காவை சந்திக்கும் இலங்கை

ICC Men’s T20 World Cup 2021

422

ஐசிசி T20 உலகக் கிண்ணத்தின் மிக முக்கியமான சுபர் 12 சுற்றுப் போட்டியில், சனிக்கிழமை (30) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் சுபர் 12 சுற்றில் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், களம் காணுகின்றன.

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் தோல்வி

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடந்த கால மோதல்களில், தென்னாபிரிக்க அணி வலுவான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறது. மொத்தமாக 16 T20I போட்டிகளில், இலங்கை அணி 5 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி 10 வெற்றிகளை பெற்றுள்ளது. இதில், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

இறுதியாக இலங்கையில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I தொடரில், 3-0 என தென்னாபிரிக்க அணி இலகுவான வெற்றியையும் பதிவுசெய்திருந்தது.

அதேநேரம், T20 உலகக் கிண்ணங்களில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 3 தடவைகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில், 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்ததுடன், 2014ம் ஆண்டு இலங்கை அணி வெற்றியை தக்கவைத்திருந்தது.குறிப்பாக இறுதியாக நடைபெற்ற போட்டிகளின் பிரகாசிப்புகளை பார்க்கும் போது, தென்னாபிரிக்க அணி ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது. இறுதியாக நடைபெற்ற 5 T20I போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றியை பெற்றிருக்கின்றது.

இலங்கை அணி

T20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பத்திலிருந்து வெற்றிகளை மாத்திரம் குவித்துவந்த இலங்கை அணி, கடைசியாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

சுபர் 12 சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை மிகச்சிறப்பான முறையில் வீழ்த்தியிருந்த போதும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கை அணியை பொருத்தவரை, முதல் சுற்று போட்டிகளில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசித்துவந்த நிலையில், முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறிவந்தனர்.

தற்போது, சுபர் 12 சுற்றின் முதலிரண்டு போட்டிகளில், முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் சோபித்துவரும் நிலையில், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களில் அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹஸரங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோர் பிரகாசிக்க தவறிவருகின்றனர். இவர்களுடன், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சும் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தவறுகளை திருத்திக்கொண்டு தயாராகுவதற்கு இலங்கை அணிக்கு காலம் குறைவாகவே உள்ளது. எனவே, அடுத்த போட்டியில் இலங்கை அணி மாற்றுத்திட்டங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெறுவதால், மேலதிக சுழல் பந்துவீச்சாளர் ஒருவருடன் களமிறங்கவும் இலங்கை அணிக்கு அதிகமான வாய்ப்புள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்

இலங்கை அணியின் எதிர்பார்ப்பு வீரராக மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க மாறியுள்ளார். இவர் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் மிகசச்சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள சார்ஜா மைதானத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக 80 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டதுடன், ஆஸி. அணிக்கு எதிராக 35 ஓட்டங்களை பெற்றுள்ளார். எனவே, மீண்டும் இலங்கை அணிக்காக சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

தென்னாபிரிக்கா அணி

தென்னாபிரிக்க அணியை பொருத்தவரை மிக பலம் வாய்ந்த அணியாக T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கியுள்ளது. மே.தீவுகள், அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி T20 உலகக் கிண்ணத் தொடரில் நுழைந்திருந்தது.

அதுமாத்திரமின்றி, பயிற்சிப் போட்டியில் தற்போது உலகக் கிண்ணத்தில் பலமான அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் வெற்றியை பெற்றிருந்தது. தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தாலும், மே.தீவுகளை வீழ்த்தி பெற்ற வெற்றியுடன் இலங்கை அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

மே.தீவுகளுக்கான போட்டியின் போது, அனைத்து தரப்பிலும் சிறப்பாக பிரகாசித்து, ஒரு பலமான வெற்றியுடன் தயாராகியிருக்கும் தென்னாபிரிக்க அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை நோக்கி இலங்கைக்கு எதிராக களமிறங்குகிறது.

எதிர்பார்ப்பு வீரர்

தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக், மே.தீவுகளுக்கு எதிரான போட்டியில் நிறவெறி சர்ச்சைகள் காரணமாக விளையாடாவிட்டாலும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர் தென்னாபிரிக்க அணிக்காக T20I போட்டிகளில், ஜேபி டுமினிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளதுடன், இலங்கை அணிக்கு எதிராகவும் 10 போட்டிகளில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 260 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஓட்டங்களை தாண்டியும் அவருடைய அனுபவம் மற்றும் விக்கெட் காப்பு என்பன தென்னாபிரிக்க அணிக்கு மேலும் பலத்தை கொடுக்கும்.

தென்னாபிரிக்கா குழாம்

டெம்பா பவுமா (தலைவர்), குயிண்டன் டி கொக், பியோன் போர்டியூன், ரீஷா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, என்ரிச் நோக்கியா, டுவைன் பிரிட்டோரியர்ஸ், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் ஷம்ஷி, ரஸ்ஸி வென் டர் டஸன்

இறுதியாக…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் கடந்தகால பிரகாசிப்புகள் எவ்வாறு இருந்தாலும், இந்த போட்டியானது இரண்டு அணிகளுக்கும் மிகவும் அழுத்தமான போட்டியாகும். சுபர் 12 சுற்றில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளன.

எனவே, தங்களுடைய அரையிறுதிக்கான பயணத்தில் இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. எனவே, மிகவும் அழுத்தமான போட்டியில், கடந்தகால பெறுபேறுகள் முக்கியமானதல்ல. குறித்த அழுத்தத்தை மீறி தங்களுடைய பிரகாசிப்பினை வழங்கும் அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, எந்த அணி வெற்றிபெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<