IPL இன் பிரதான அனுசரணையாளராக ‘TATA’ ஒப்பந்தம்

144

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் புதிய பிரதான அனுசரணையாளராக (Title Sponsor) சீனாவின் விவோ நிறுவனத்துக்குப் பதிலாக டாடா குழுமம் (TATA Group) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வலம்வரும் டாடா குழுமத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ மற்றும் IPL நிர்வாகக் குழு நேற்று (11) வழங்கியுள்ளது.

IPL தொடரில் 14 பருவங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள 15ஆவது பருவத்தில் கூடுதலாக 2 அணிகள் இணைத்துக் கொள்ளப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த பருவத்துக்கான ஏலம் மெகா ஏலமாக பெப்பரவரி மாதம் இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த IPL தொடரில் லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் இந்த பருவத்திலிருந்து IPL இன்னும் பிரம்மாண்டமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டிலிருந்து IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக இருந்துவந்த விவோ நிறுவனம் தற்போது ஒப்பந்தத்தை நிறைவுசெய்து IPL இல் இருந்து விலகியுள்ளது.

இதில் 2018 – 2021 வரை IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக இருந்த விவோ நிறுவனம் ரூ.2200 கோடி பிசிசிஐக்கு வழங்கியது. எனினும், 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்சினை பூதாகரமாக வெடித்ததால், 2020 ஆம் ஆண்டு IPL பருவத்தில் மாத்திரம் விவோ நிறுவனம் பிரதான அனுசரணையாளராக செயல்படுவதில் இருந்து விலகிவிட்டு, மீண்டும் 2021ஆம் ஆண்டு பிரதான அனுசரணையாளராக இணைந்து கொண்டது.

இதனிடையே, 2021ஆம் ஆண்டுடன் விவோ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த நிலையில், அந்த நிறுவனம் விலகிக்கொண்டது

இதையடுத்து IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக இந்திய முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழுமம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு IPL தொடர்களின் பிரதான அனுசரணை உரிமத்தை டாடா குழுமம் பெற்றிருப்பதாக IPL தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்த உரிமம் மாற்ற நடவடிக்கையின் மூலம் 2022-23 காலகட்டத்துக்காக பிசிசிஐ-க்கு ரூ.1,124 கோடி வருவாய் கிடைக்கிறது.

அதேபோல, அனுசரணையாளர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக விவோ நிறுவனம் ரூ.454 கோடியும், 2 ஆண்டு அனுசரணையாளர் உரிமத்தை பெற்றுக்கொண்டதற்காக டாடா குழுமம் ரூ.670 கோடியும் பிசிசிஐக்கு வழங்கவுள்ளன.

இதில் அனுசரணை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் தொகையில் 50 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும் பிசிசிஐ, எஞ்சிய தொகையை 10 IPL அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<