LPL தொடரை ஆக்கரமித்த பந்துவீச்சாளர்கள்

187

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் இரண்டாவது அத்தியாயம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு LPL தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களினால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.  

இதுஇவ்வாறிருக்க, LPL தொடரில் இம்முறை மொத்தம் 306 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதில் அதிகபட்சமாக கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் சமித் படேல் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணியின் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

எனினும், எந்தவொரு பந்துவீச்சாளரும் ஹெட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஜெப்ரி வெண்டர்சே 6 விக்கெட்டுகளையும், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் நுவன் துஷார 5 விக்கெட் பிரதியையும் பதிவு செய்தனர்.

>>இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

அத்துடன், 13 ஓட்டமற்ற ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டு இருந்தன. இதில் ஜப்னா கிங்ஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தனன்ஜய டி சில்வா ஆகிய இருவரும் தலா 2 ஓட்டமற்ற ஓவர்களை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களில் 7 வேகப் பந்துவீச்சாளர்களும், 3 சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் 7 உள்நாட்டு வீரர்களும், 3 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதுடன், முதல் 5 இடங்களில் உள்ள 3 வீரர்கள் LPL தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், இந்த ஆண்டு LPL தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்த பந்துவீச்சாளர்கள் யார்? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சமித் படேல் (கோல் கிளெடியேட்டர்ஸ்)

இம்முறை LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தகுதிபெற சமித் படேலின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரும் இவர் தான்.

ஜப்னா கிங்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணிக்காக பந்துவீச்சில் ஒரு விக்கெட்டினையும், துடுப்பாட்டத்தில் 22 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்திருந்தார்.

>>WATCH – LPL 2021: விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்!

எனினும், அதே ஜப்னா கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற இந்த ஆண்டு LPL தொடரின் முதல் போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் 42 ஓட்டங்களையும் எடுத்து அந்த அணியின் வெற்றியின் முக்கிய பங்காற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இம்முறை LPL தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய அவர், 2 போட்டிகளைத் தவிர மற்றைய 8 போட்டிகளில் 5.76 என்ற சராசரியுடன் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்தார்.

மஹீஷ் தீக்ஷன (ஜப்னா கிங்ஸ்)

இவரது கட்டுக்கோப்பான, நெருக்கடியளிக்கும் பந்துவீச்சு ஜப்னா கிங்ஸ் அணிக்கு இம்முறை LPL தொடரில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தது.

இதில் அவர் 6.87 என்ற பந்துவீச்சு சராசரியுடன், 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

அத்துடன், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இம்முறை LPL தொடரில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், அண்மையில் நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத்தில் பிரகாசித்து இலங்கையின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை இந்தத் தொடர் மூலம் மீண்டும் நிரூபணமானது.

ஜெய்டன் சீல்ஸ் (ஜப்னா கிங்ஸ்)

ஜப்னா கிங்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கிய வேகப் பந்துவீச்சாளர் தான் ஜெய்டன் சீல்ஸ். 20 வயதுடைய வலதுகை மித வேகப் பந்துவீச்சாளராக இவர் விளங்கியதுடன், அந்த அணிக்காக முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இம்முறை LPL தொடரில் ஆரம்பத்தில் இருந்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த வந்த இவர், ஒரேயொரு போட்டியைத் தவிர மற்றைய 6 போட்டிகளிலும் 7.81 என்ற சராசரியுடன் குறைந்தபட்சம் ஒன்று மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தார்.

இதில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

>>இளம் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை கொடுத்த LPL 2021

அதிலும் குறிப்பாக, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தீர்மானமிக்க எலிமினேட்டர் போட்டியில், 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் விளையாடிய 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இம்ரான் தாஹிர் (தம்புள்ள ஜயண்ட்ஸ்)

உலகின் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரரான இம்ரான் தாஹிர், இம்முறை LPL தொடரில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கி மிகச்சிறப்பாக பந்துவீசி எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்.

இம்முறை LPL தொடரில் கண்டி வொரியர்ஸ் அணிக்கெதிரான தீர்மானமிக்க இறுதி லீக் போட்டியில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியை பிளே-ஒப் சுற்றுக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

அதேபோல, இவர் விளையாடிய 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

சீக்குகே பிரசன்ன (கொழும்பு ஸ்டார்ஸ்)

இலங்கையின் அனுபவமிக்க சகலதுறை வீரர்களின் ஒருவரான சீக்குகே பிரசன்ன, இம்முறை LPL தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி பந்துவீச்சைப் போல, துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார்.

குறிப்பாக, இம்முறை LPL தொடரில் ஆரம்பத்தில் இருந்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த வந்த இவர், விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் 6.54 என்ற சராசரியுடன் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்தார்.

இதில் ஜப்னா கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

அதிலும் குறிப்பாக, கண்டி வொரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில், 6 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்கமால் 32 ஓட்டங்களைப் பெற்று கொழும்பு ஸ்டார்ஸ் அணியினை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அத்துடன், குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

>>LPL தொடரில் திறமைகளை உலகறியச்செய்த இளம் வீரர்கள்

இந்த ஆண்டு LPL தொடரில் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய சீக்குகே பிரசன்ன, அதிக விக்கெட்டுக்கள் எடுத்த பந்துவீச்சாளர்களில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 6 முதல் 10 இடங்கள் வரை முறையே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துஷ்மந்த சமீர (13 விக்கெட்), கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் நுவன் துஷார (12 விக்கெட்), கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஜெப்ரி வெண்டர்சே (11 விக்கெட்), ஜப்னா கிங்ஸ் அணியின் வனிந்து ஹஸரங்க (11 விக்கெட்) மற்றும் கண்டி வொரியர்ஸ் அணியின் நிமேஷ் விமுக்தி (10 விக்கெட்) ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<