இங்கிலாந்து அணியில் இணையும் ஜேம்ஸ் வின்ஸ்

ICC T20 World Cup – 2021

166
Getty Image

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் உபாதைக்குள்ளாகிய ஜேசன் ரோய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் மாற்று வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை (06) நடைபெற்ற போட்டியில் ஜேசன் ரோய் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை திடீரென காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்கவே முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது உபாதை குணமடைய இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, நாளை மறுதினம் (10) நியூசிலாந்து அணியுடனான முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நிலையில், உபாதை காரணமாக ஜேசன் ரோய் விலகுவதாக இன்று (08) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் ரோய் இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் ஜோஸ் பட்லருடன் இணைந்து இங்கிலாந்து அணிக்கு அதிரடியான ஆரம்பத்தை கொடுத்து அணிக்கு வலுச்சேர்த்திருந்துடன், இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 123 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

எனவே, உபாதை காரணமாக ஜேசன் ரோய் விலகியிருப்பது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கவுள்ளது.

இதேவேளை, ஜேசன் ரோய்க்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் மற்றுமொரு அதிரடி முன்வரிசை வீரரான ஜேம்ஸ் வின்ஸ் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை கிறிஸ் டெட்லி, கிளைவ் ஹிட்ச்காக், ராகுல் டிராவிட், தீரஜ் மல்ஹோத்ரா, சைமன் டவுல் மற்றும் இயென் பிஷப் ஆகியோரைக் கொண்ட ஐசிசியின் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளது.

30 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் வின்ஸ், இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட், 19 ஒருநாள் மற்றும் 13 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முன்னதாக T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முள் அந்த அணியின் சகலதுறை வீரரான சாம் கரண் உபாதை காரணமாக விலகியதுடன், இலங்கை அணியுடனான சுபர் 12 சுற்று லீக் போட்டியின் போது வலது தொடை தசைப்பிடிப்புக்கு உள்ளாகி அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸும் T20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<