அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும், கடைசி டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அணியின் முக்கிய டெஸ்ட் வீரர்களில் ஒருவராகத் வலம்வந்த 39 வயதான உஸ்மான் கவாஜா, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வந்து ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தனது ஓய்வு முடிவு குறித்துப் பேசிய கவாஜா, “கடந்த சில காலமாவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இதுபற்றிப் பேசினேன். 2027இல் நடைபெறும் இந்திய சுற்றுப்பயணம் வரை நான் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், இதுவே விடைபெற சரியான தருணம் என்று நான் உணர்கிறேன்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எனக்கு மிகவும் பிடித்தமான சிட்னி மைதானத்தில், அதுவும் எனது சொந்த முடிவின்படி கண்ணியத்துடன் விடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அடிலெய்ட் போட்டிக்கான தேர்வின் போது ஏற்பட்ட சில சூழல்கள், ‘சரி, இது ஓய்வு பெறுவதற்கான நேரம்’ என்பதை எனக்கு உணர்த்தின.” என்று தெரிவித்தார்.
தான் ஓய்வு பெறாமல் அணியில் நீடித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் கவாஜா பதிலளித்தார். “நான் சுயநலத்துக்காக அணியில் நீடிப்பதாகச் சிலர் விமர்சித்தனர். அது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. ஆனால் உண்மையில், இலங்கைத் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களுக்கு அணியின் தேவை கருதியே பயிற்சியாளர் என்னை விளையாடச் சொன்னார். நான் எனக்காக அணியில் நீடிக்கவில்லை.” என்று விளக்கமளித்தார்.
- ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2025: நான்காவது போட்டியில் முக்கிய ஆஸி. வீரர்கள் ஓய்வு?
- 2026 T20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு
- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து சகலதுறை வீரர்
“நான் எனது குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்தேன். எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இது ஒரு நீண்ட விவாதமாக இருந்தது. எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இதுவே சரியான நேரம் என்று நாங்கள் உணர்ந்தோம்.” என்று அவர் கூறினார்.
“கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்துள்ளது. நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நான் எப்போதும் எனது நாட்டின் கிரிக்கெட் அணிக்காக எனது சிறந்ததை வழங்க முயற்சித்துள்ளேன். எனது பங்களிப்பு ஒருபோதும் மறக்கப்படாது என்று நம்புகிறேன். எனது குடும்பம் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளது. அவர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை,” என்று அவர் தனது குடும்பத்தினரைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார்.
இதேவேளை, தனது ஓய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில் மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும் பேசிய கவாஜா, தனது வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொண்ட இன ரீதியான பாகுபாடுகளைப் பகிரங்கமாகச் சாடினார். குறிப்பாக, அண்மையில் அவருக்கு ஏற்பட்ட முதுகுவலி காயத்தின்போது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் நடந்துகொண்ட விதம் தன்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார். மற்ற வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அவர்கள் மீது அனுதாபம் காட்டும் சமூகம், தனக்குக் காயம் ஏற்பட்டபோது தனது அர்ப்பணிப்பு மற்றும் தனிப்பட்ட குணாதிசயங்களைக் கேள்விக்குள்ளாக்கியது வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கவாஜாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொட் கிரீன்பெர்க் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “கடந்த 15 ஆண்டுகளாகக் களத்தில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியே ‘உஸ்மான் கவாஜா அறக்கட்டளை’ மூலம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்கும் மகத்தானது.” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் கவாஜா தனது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளார். ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யும் அவருக்கு, சக வீரர்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
2011ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவே அறிமுகமான அவர், அதே மைதானத்தில் தனது இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒரு சிறப்பான நிறைவாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்திரேலியாவுக்காக விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் மற்றும் அந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் முஸ்லிம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையுடன், கவாஜா தனது 15 ஆண்டு காலப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 43.39 என்ற சராசரியுடன் மொத்தம் 6,206 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும், 28 அரைச்சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஓட்டங்கள் 232 ஆகும்.
இதனிடையே, 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அத்துடன், அவர் 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 40 ஒருநாள் போட்டிகளிலும், 9 T20I போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















