டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று (28) இடம்பெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

14ஆவது முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வந்த ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த 223 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய துடுப்பாடிய இந்திய அணி, பந்துகள் ஏதும் மீதமில்லாத நிலையில் அந்த வெற்றி இலக்கை 7 விக்கெட்டுக்களை இழந்து த்ரில்லரான முறையில் அடைந்ததுடன், ஆசியக் கிண்ணத் தொடரில் 7ஆவது தடவையாகவும் சம்பியன் நாமம் சூடியது.

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில்

இதேநேரம், இந்திய அணிக்கு தமது பந்துவீச்சுதுறை மூலம் கடும் சவால் தந்த பங்களாதேஷ் அணி, 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை தோற்று தொடரை நிறைவு செய்திருக்கின்றது.

முன்னதாக, பெரும் திரளான ரசிகர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களோடு தொடங்கியிருந்த ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பங்களாதேஷ் அணிக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, பங்களாதேஷ் அணி வழக்கமாக பின்வரிசையில் துடுப்பாடும் மெஹிதி ஹஸன் மற்றும் லிடன் தாஸ் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

புதிய ஜோடி ஒன்றை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இறுதிப் போட்டியில் முயற்சி செய்த பங்களாதேஷ் அணி, அதில் வெற்றியும் கண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டுக்காக 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக மெஹிதி ஹஸன் 32 ஓட்டங்களுடன் கேதர் ஜாதவ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், பங்களாதேஷ் அணி லிடன் தாஸின் அதிரடி அரைச்சதத்தோடு தொடர்ந்தும் வலுப் பெற்றது.

மெஹிதி ஹஸனை அடுத்து வந்த பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டனர். எதிர்பார்ப்பு வீரர்களான இம்ருல் கைஸ், முஸ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். இப்படியான தொடர்ச்சியான விக்கெட்டுக்களினால், 120 ஓட்டங்களுக்கு எந்தவித விக்கெட்டுக்களையும் பறிகொடுக்காத பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.  எனினும், லிடன் தாஸ் தனது கன்னி ஒரு நாள் சதத்துடன் பங்களாதேஷ் அணிக்கு தொடர்ந்தும் நம்பிக்கை தந்தார்.

தொடர்ந்து, சந்தேகத்திற்கு இடமான ஸ்டம்பிங் ஒன்றின் மூலம் லிடன் தாஸின் விக்கெட்டும் பறிபோனது. தாஸை அடுத்து பங்களாதேஷ் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் அவ்வணிக்கு செளம்ய சர்க்கர் மட்டுமே ஆறுதலாக இருந்தார்.

ஒருநாள் போட்டியில் 257 ஓட்டங்களை விளாசிய அவுஸ்திரேலிய வீரர்

முடிவில், 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 222 ஓட்டங்களை குவித்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் லிடன் தாஸ் 12 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 117 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 121 ஓட்டங்கள் பெற்றிருக்க, செளம்ய சர்க்கர் 33 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 223 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த சிக்கர் தவான் 15 ஓட்டங்களுடன் ஏமாற்றம் தந்தார். இதனை அடுத்து, களம் வந்த அம்பதி ராயுடுவும் 2 ஓட்டங்களுடன் வெளியேற அணித்தலைவர் ரோஹித் சர்மா சிறப்பான முறையில் செயற்பட்டு தனது தரப்பிற்கு நம்பிக்கை தந்தார்.

தொடர்ந்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டும் பறிபோனது. ஆட்டமிழக்கும் போது 55 பந்துகளை எதிர்கொண்ட சர்மா 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் பின்னர், தினேஷ் கார்த்திக் மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் இந்திய அணிக்கு பொறுமையான இணைப்பாட்டம் ஒன்றை வழங்கி வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 54 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டினை அடுத்து முடிவுக்கு வந்தது. தினேஷ் கார்த்திக் மஹ்மதுல்லாஹ்வினால் LBW முறையில் வீழ்த்தப்பட்டு 37 ஓட்டங்களுடன் தனது இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

கார்த்திக்கின் விக்கெட்டை அடுத்து, சிறிது நேரத்தில் டோனியின் விக்கெட்டும் 36 ஓட்டங்களுடன் பறிபோனது. டோனியின் விக்கெட்டை அடுத்து பந்துவீச்சில் திறமை காண்பிக்கத் தொடங்கிய பங்களாதேஷ் அணியினர் போட்டியின் வெற்றி வாய்ப்பு சாதக நிலைமையை தமக்கு சொந்தமாக்கினர். ஒரு கட்டத்தில், 11 பந்துகள் மாத்திரமே போட்டியில் எஞ்சியிருக்க 214 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியதுடன், ஆட்டமும் விறுவிறுப்பின் உச்சத்தை அடைந்தது.

தொடர்ந்து வெற்றிக்கு இறுதி ஓவருக்கு ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணிக்காக, அந்த வெற்றி ஓட்டங்களை கேதர் ஜாதவ் – குல்தீப் யாதவ் ஜோடி பெற்றுத் தந்தது. இதன்படி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் இந்திய அணி 223 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்திலிருந்து மொஹமட் ஆமீர் நீக்கம்

சிறுபங்களிப்பு என்ற போதிலும், இந்திய அணிக்காக இறுதிவரை போராடிய கேதர் ஜாதவ் 23 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் ரவீந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார் ஆகியோரும், பங்களாதேஷ் அணியின் பக்கம் போட்டி சென்றுவிடாமல் தமது துடுப்பாட்டத்தின் மூலம் பாதுகாத்திருந்தனர்.

இதேநேரம் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக, முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ருபெல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி போட்டியின் இறுதிவரை இந்திய அணிக்கு அழுத்தங்கள் பிரயோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக, பங்களாதேஷ் அணியின் லிடன் தாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு  தொடர் நாயகன் விருது, இந்திய அணியின் சிக்கர் தவானிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ஸ்கோர் விபரம்

 

முடிவு – இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க