கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி

2585

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ll) குழு D அணிகளுக்கான ஒரு போட்டியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இப்போட்டியில் நணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்களின் விக்கெட்டுக்களை றோயலின் பந்து வீச்சாளர்கள் விரைவாகத் தகர்த்தெறிந்தனர்.

உதிரிகளாக பெற்ற 17 ஓட்டங்கள், 10ஆம் இலக்க வீரர் அபிலக்சனின் 16 ஓட்டங்கள், அணித் தலைவர் யதுசனின் 12 ஓட்டங்கள் என்பவற்றுடன் 29.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த சென். ஜோன்ஸ் அணியினர் முதல் இன்னிங்சுக்காக  வெறுமனே 65 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

பந்து வீச்சில் இடதுகை லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் மஞ்சுள பெரேரா 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வலது கை வேகப்பந்து வீச்சாளர் கவிந்து பத்திரன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த றோயல் கல்லூரியின் ஆரம்ப விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தப்பட்டன. 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் என்ற நிலையிலிருந்த றோயல் கல்லூரிக்கு 5ஆவது விக்கெட்டிற்காக இணைந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கஜான் திஸ்ஸாநாயக்க மற்றும் கவிந்து சத்துரங்க ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டத்தினை பெற்றிருந்த வேளையில் கவிந்து சத்துரங்க (29) ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே கஜான் திஸ்ஸாநாயக்க (30) ரன் அவுட் முறை மூலம் ஆட்டமிழக்க, றோயல் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றையிலக்கத்தில் ஆட்டமிழக்க, உதிரிகளாக 19 ஓட்டங்களைப் பெற்ற றோயல் கல்லூரி அணி 33.2 ஓவர்களில் 111 ஓட்டங்களைப் பெற்று 46 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

மீள வேண்டிய கட்டாயத்துடன் இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் விக்கெட்டுக்கள் ஒரு முனையில் சரிக்கப்பட்ட போதும், மறுமுனையில் சரோபன் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 6ஆவது  விக்கெட்டிற்காக யதுசன் மற்றும் அபினாஷ் பெற்றுக்கொடுத்த அரைச்சத இணைப்பாட்டத்துடன் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்தது.

அவ்வணிக்காக 9ஆவது இலக்கத்தில் களம்புகுந்த பந்து வீச்சாளர் கபில்ராஜ் 12 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்தார். அவற்றின் நிறைவில் யாழ் தரப்பினர் 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் 3.3 ஓவர்கள் வீசிய கமில் மிஸ்ஸிற 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தருச றுக்ஷான் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து 117 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களம்புகுந்த றோயல் கல்லூரி முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 25 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.

எகன் சச்சித்த 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். கவிந்து சத்துரங்க ஒரு முனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாட, மறுமுனையில் அபினாஷ், கபில்ராஜ், யதுசன் இணை விக்கெட்டுக்களைப் கைப்பற்றினர்.

கவிந்து சச்சித 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து 8ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு விக்கெட்டுக்களும் அபினாஷின் பந்துவீச்சில் விரைவாக வீழ்த்தப்பட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 10 ஓட்டங்களால் வரலாற்று வெற்றிபெற்று தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல்  இன்னிங்ஸ்): 65/10 (29.1) – அபிலக்சன் 16*, யதுசன் 12, மஞ்சுள பெரேரா 4/13, கவிந்து பத்திரன 3/ 17

றோயல் கல்லூரி  (முதல் இன்னிங்ஸ்): 111/10 (33.2) – கஜான் திஸ்ஸநாயக்க 30,  தெவிந்து சேனாரத்ன 29, கபில்ராஜ் 6/ 39

சென் ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 163/10 (34.3) – செரோபன் 37, யதுசன் 32, கபில்ராஜ் 30, அபினாஷ் 29, கமில் மிஷ்ற 5/23, தரூச றுக்ஷான் 2/45

றோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 107/10 (33) – கமில் மிஸாற 17, எகன் சச்சித 28, அபினாஷ் 6/32, யதுசன் 2/30, கபில்ராஜ் 2/ 34  

போட்டி முடிவுசென். ஜோன்ஸ் கல்லூரி 10 ஓட்டங்களால் வெற்றி