எந்த தோல்வியுமின்றி இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதியில் இலங்கை

1561

பங்களாதேஷில் நடைபெற்று வருகின்ற, இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (02) முதல் சுற்று லீக் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. இன்று நிறைவுற்ற போட்டி ஒன்றில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை 23 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.  

ஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

ஆசியக் கிரிக்கெட் பேரவை (ACC)…

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், ஆப்கானிஸ்தான் என எட்டு நாடுகளின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் இந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த வாரம்  வாரம் ஆரம்பாகியிருந்தது. தொடரில் பங்குபெறும் அணிகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெற்று வந்தன.  

இதில் குழு B இல் இடம்பெற்ற இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி தமது முன்னைய போட்டிகளில் பங்களாதேஷ், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு எதிராக அதிரடி வெற்றிகளை பதிவு செய்த வண்ணம் பாகிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை இன்று சிட்டகொங் MA. அஸீஸ் மைதானத்தில் எதிர்கொண்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் 19 வயதின் கீழ் அணித்தலைவர் ரோஹைல் நாசிர், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கைக்கு வழங்கினார்.

இதன்படி நிசான் மதுஷ்க மற்றும் நவோத் பராணவிதான ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி ஆரம்பித்தது. ஆரம்ப வீரர்கள் இருவரும் 63 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்து சீரான ஆரம்பத்தை தந்தனர். இந்நிலையில் நவோத் பராணவிதான முதல் விக்கெட்டாக 26 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதன் பின்னர், சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப வீரரான நிஷான் மதுஷ்கவும் தனது விக்கெட்டை 19 ஓட்டங்களுடன் பறிகொடுத்தார்.

ஆரம்ப வீரர்கள் இருவரினையும் அடுத்து, இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்சாத் இக்பாலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடியது. எனினும், நான்காம் இலக்கத்தில் ஆடிய கலன பெரேரா தனது போராட்ட துடுப்பாட்டம் மூலம் அணியினை அரைச்சதம் ஒன்றுடன் மீட்டெடுத்தார்.

தொடர்ந்து, கலன பெரேராவின் விக்கெட்டும் அர்சாத் இக்பாலின் வேகத்திற்கு இரையானது. அர்சாத்தினால் போல்ட் செய்யப்பட்ட பெரேரா 61 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

இதன்பின்னர், மீண்டும் அபாரம் காட்டிய அர்சாத்தின் பந்துவீச்சு காரணமாக இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 200 ஓட்டங்களையே குவித்தது.

இலங்கையின் இளம் வீரர்களில், துடுப்பாட்டத்தில் கலன பெரேராவையடுத்து அணித்தலைவர் நிப்புன் தனன்ஞய மாத்திரம் 33 ஓட்டங்களை குவிக்க, ஏனைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அபாரம் காட்டிய அர்சாத் இக்பால் 34 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தோடு, பிலால் ஜாவேத்தும் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இதன்பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 201 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தானின் இளம் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

டில்ஷானின் மாஸ் யுனிசெலா அணிக்கு இலகு வெற்றி

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான…

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில், 43 ஓட்டங்களை குவித்த அவைஸ் சபார் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்ததோடு, அவ்வணியின் ஏனைய வீரர்களில் ஒருவர் கூட 30 ஓட்டங்களை தாண்டியிருக்கவில்லை.

இலங்கை இளம் அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லால்கே, நவோத் பராணவிதான மற்றும் கல்ஹான செனரத்ன ஆகியோர்  தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, இளையோர் ஆசியக் கிண்ணத்தின் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு B அணிகளின் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து  தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.  

மறுமுனையில், இலங்கையோடு தோல்வியடைந்துள்ள பாகிஸ்தானின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறுகின்றது.

இதேவேளை, இலங்கையோடு சேர்த்து இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகளும் லீக் போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.  

ஸ்கோர் விபரம்

 

முடிவு – இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி 23 ஓட்டங்களால் வெற்றி  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க