தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உமர் அக்மல்

147

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) ஒழுக்காற்று குழு விதித்துள்ள மூன்று வருட தடைக்கு எதிராக அந்நாட்டு வீரர் உமர் அக்மல், மேன்முறையீடு செய்துள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உமர் அக்மலுக்கு அடுத்த 3 வருடங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாதவாறு தடைவிதித்திருந்தது. இந்தநிலையில், அதற்கு எதிராக தற்போது உமர் அக்மல் மேன்முறையீடு செய்துள்ளார்.  

இம்ரான் கான் போல அணியினை வழிநடாத்த விரும்பும் பாபர் அசாம்

உமர் அக்மலின் மேன்முறையீட்டினால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சட்டக்கோவையின் 37வது பிரிவு அடிப்படையில் 15 நாட்களுக்குள் சுயாதீன நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியமிக்கப்படும் புதிய சுயாதீன நீதிபதி உமர் அக்மலுக்கான தீர்ப்பு குறித்து ஆராயவுள்ளார். 

இந்த ஆண்டுக்கான (2020) பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 தொடர் நடைபெறும் முன்னர், உமர் அக்மலினை சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக தகவல்கள் வெளியாகின. இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தானின் கிரிக்கெட் சபை உமர் அக்மலிடம் விளக்கம் கோரியிருந்தது. 

எனினும், அக்மலிடம் இருந்து இது தொடர்பில் பூரண ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதுதொடர்பான விளக்கம் வழங்க அக்மலுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கும் அக்மல் சரியான பதில் ஒன்றை வழங்க தவறியிருந்தார். இவ்வாறான நிலையிலையே அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அடுத்த 3 வருடங்களிலும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதித்திருக்கின்றது.  

உமர் அக்மல் தொடர்பான விடயம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவினால் விசாரணை செய்யப்பட்டிருந்ததோடு, ஊழல் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான நீதிபதி பஷால்-ஈ-மீரான், இந்த விடயத்தில் உமர் அக்மலினை குற்றவாளியாக இனம்கண்டு 3 வருட போட்டித் தடையினை வழங்கியிருந்தார்.  

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பிரகாசித்துவந்த உமர் அக்மல், கடந்த சில ஆண்டுகளாக பிரகாசிக்க தவறிவந்ததுடன், அணிக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாக இருந்தார். இவர், இறுதியாக பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<