19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டிகளில் திரித்துவக் கல்லூரி, ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இலகு வெற்றியை சுவீகரித்தன. இசிபதன கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் புனித பேதுரு கல்லூரி அணி முதல் இன்னிங்சில் வெற்றியை பெற்றுக் கொண்டது.

திரித்துவக் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் திரித்துவக் கல்லூரியை எதிர்த்து தர்மராஜ கல்லூரி போட்டியிட்டது. அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியை வென்ற திரித்துவக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அணித்தலைவர் சண்முகநாதன் ஷனோகீத் (136) மற்றும் ஹசித போயகொட (109) சதங்கள் விளாச, திரித்துவக் கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து 422 ஓட்டங்களைக் குவித்தது. பந்து வீச்சில் நிவந்த ஹேரத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய தர்மராஜ கல்லூரி, திசரு டில்ஷானின் அசத்தல் பந்து வீச்சின் காரணமாக 90 ஓட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணி சார்பாக நிவந்த ஹேரத் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். திசரு டில்ஷான் 31 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

332 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட திரித்துவக் கல்லூரி, எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி இரண்டாவது இன்னிங்சில் சற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், தர்மராஜ கல்லூரி 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்படி திரித்துவக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களினால் சுலபமாக வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் தர்மராஜ கல்லூரி சார்பில் தேஷான் குணசிங்க 70 ஓட்டங்களையும் உதந்த அமரகோன் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சுஹைப் 3 விக்கெட்டுகளையும் திசரு டில்ஷான் மற்றும் சண்முகநாதன் ஷனோகீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 422/6 (72) – சண்முகநாதன் ஷனோகீத் 136, ஹசித போயகொட 109, நிவந்த ஹேரத் 66/4

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 90 (29.5) – நிவந்த ஹேரத் 30, திசரு டில்ஷான் 31/8

தர்மராஜ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்)214 (65.4) – தேஷான் குணசிங்க 70, உதந்த அமரகோன் 47, மொஹமட் சுஹைப் 21/3, திசரு டில்ஷான் 23/2, சண்முகநாதன் ஷனோகீத் 29/2

முடிவு: திரித்துவக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களினால் வெற்றி


ஆனந்த கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டி ஆனந்த கல்லூரிக்கும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் வெஸ்லி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி சார்பாக அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஹன் சுரவீர (118) மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை அணி வீரர் சம்மு அஷான் (106) ஆகியோர் சதம் கடந்தனர்.

மேலும், துஷான் ஹெட்டிகே 89 ஓட்டங்களையும், அசேல சிகர ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, ஆனந்த கல்லூரி 60.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லி கல்லூரி 32.3 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்லி கல்லூரி சார்பில் சகுந்தக லியனகே அதிகபட்சமாக 52 ஓட்டங்களைக் குவித்தார். ஆனந்த கல்லூரி சார்பாகப் பந்து வீச்சிலும் அசத்திய சம்மு அஷான் 66 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திலீப ஜயலத் 3 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.

224 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட ஆனந்த கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது. அதன்படி ஆடுகளம் பிரவேசித்த வெஸ்லி கல்லூரியானது தனது இரண்டாவது இன்னிங்சிற்காக 214 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் மொவின் சுபசிங்க அரைச்சதம் கடந்தார். மேலும், ஹெலித  பம்பரந்த 48 ஓட்டங்களையும் திசுரக்க அக்மீமன 45 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் அசத்திய திலீப ஜயலத் 6 விக்கெட்டுகளையும், சம்மு அஷான் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதன்படி ஆனந்த கல்லூரி இனிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களினால் இலகு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 377/4d (60.5) – சஹன் சுரவீர 118, சம்மு அஷான் 106, துஷான் ஹெட்டிகே 89, அசேல சிகர 51*

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 153 (32.3) – சகுந்தக லியனகே 52, சம்மு அஷான்66/5, திலீப ஜயலத் 28/3

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) –  214 (65.2) – மொவின் சுபசிங்க 51, ஹெலித  பம்பரந்த 48, திசுரக்க அக்மீமன 45, திலீப ஜயலத் 86/6, சம்மு அஷான் 78/3

முடிவு: ஆனந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களினால் வெற்றி


நாலந்த கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி

இத்தொடரின் குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் நாலந்த கல்லூரியும் புனித மேரிஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாலந்த கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித மேரிஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

எனினும் அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 24.4 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனியொருவராக போராடிய மாஸ் ரஹீம் 78 ஓட்டங்களைக் குவித்தார். நாலந்த கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் சுஹங்க விஜேவர்தன மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நாலந்த கல்லூரி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. டில்ஹார பொல்கம்பொல (80) மற்றும் மலிங்க அமரசிங்க (60) ஆகியோர் அரைச்சதம் விளாச, நாலந்த கல்லூரி அணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய புனித மேரிஸ் கல்லூரி 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சந்தரு சிரியஷாந்த அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றார். நாலந்த கல்லூரி சார்பாக லக்ஷித ரசஞ்சன 4 விக்கெட்டுகளையும் உமேஷ்க டில்ஷான் 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் 69 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய நாலந்த கல்லூரி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டது. தசுன் செனவிரத்ன 33 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித மேரிஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126 (24.4) – மாஸ் ரஹீம் 78, சுஹங்க விஜேவர்தன, 48/3, கலன பெரேரா 31/3

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 260/4d (62) – டில்ஹார பொல்கம்பொல 81, மலிங்க அமரசிங்க 60, லக்ஷித ரசஞ்சன 49*, லசித்த உடஹகே 59/2

புனித மேரிஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 202 (77.3) – சந்தரு சிரியஷாந்த 48, சஜீவ ரஞ்சித் 32, மாஸ் ரஹீம் 33, உமேஷ்க டில்ஷான் 44/3, லக்ஷித ரசஞ்சன 59/4

நாலந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 74/2 (15.1) – தசுன் செனவிரத்ன 33

முடிவு: நாலந்த கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி


இசிபதன கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மற்றுமொரு கிரிக்கெட் போட்டியொன்றில் இசிபதன கல்லூரியும் புனித பேதுரு கல்லூரியும் மோதிக் கொண்டன. புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இசிபதன கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இசிபதன கல்லூரி அணி சார்பில் அயன சிறிவர்தன 53 ஓட்டங்களையும், சஞ்சுல அபேவிக்ரம 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். புனித பேதுரு கல்லூரி சார்பில் பந்து வீச்சில் சிறப்பித்த மொஹமட் அமீன் 4 விக்கெட்டுகளையும், சதுர ஒபேசேகர 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இசிபதன கல்லூரி 190 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அடுத்து களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி சார்பாக அனுஷ்க பெரேரா (80) மற்றும் மானெல்க டி சில்வா (54) அரைச்சதம் கடந்தனர். மேலும், ரன்மித் ஜயசேன 42 ஓட்டங்கள் பெற்றுக் கொடுக்க புனித பேதுரு கல்லூரி அணி 254 ஓட்டங்களைக் குவித்தது. அற்புதமாக பந்துவீசிய அயன சிறிவர்தன 7 விக்கெட்டுகளை சுவீகரித்தார்.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த இசிபதன கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவ்வணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க 77 ஓட்டங்ளைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சச்சின் சில்வா, சதுர ஒபேசேகர மற்றும் மொஹமட் அமீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 190 (43.1) – அயன சிறிவர்தன 53, சஞ்சுல அபேவிக்ரம 44, மொஹமட் அமீன் 37/4, சதுர ஒபேசேகர 53/3

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 254 (76.5) அனுஷ்க பெரேரா 80, மானெல்க டி சில்வா 54, ரன்மித் ஜயசேன 42, அயன சிறிவர்தன 74/7

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 239/9 (65) – பெதும் நிஸ்ஸங்க 77, ஹர்ஷ ரத்நாயக்க 35*, சச்சின் சில்வா 21/2, சதுர ஒபேசேகர 68/2 மொஹமட் அமீன் 76/2

முடிவு: இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.