19 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளிற்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டியில் மஹாநாம கல்லூரி இசிபதன கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது. இதன்மூலம், இத்தொடரில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெற்றியினை மஹாநாம கல்லூரி அணி பதிவு செய்துள்ளது.

நேற்று BRC மைதானத்தில் ஆரம்பமாகிய குழு B இற்குரிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இசிபதன கல்லூரி அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய அவ்வணி 42.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்சினை நிறைவு செய்துகொண்டது. இசிபதன கல்லூரி அணி சார்பாக ஏனையோர் சரியாக துடுப்பெடுத்தாடாத நிலையில், பதும் நிஸ்ஸங்க மாத்திரம் பொறுப்பாக ஆடி 50 ஓட்டங்களைப் பெற்றார்.   

பந்து வீச்சில், மஹாநாம கல்லூரி அணி சார்பாக மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஹசான் சந்தீப்ப  19  ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், ஹெசான் ஹெட்டியாராச்சி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனை அடுத்து, தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த மஹாநாம கல்லூரி அணி கடந்த போட்டியில் சதம் கடந்த மலிந்து மதுரங்க மற்றும் ஹெசான் ஹெட்டியாராச்சி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன்  86.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்சிற்காக 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் மஹாநாம கல்லூரி சார்பாக மலிந்து மதுரங்க அரைச்சதம் கடந்து 72 ஓட்டங்களை விளாசியதுடன், ஹெசான் ஹெட்டியாராச்சி 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், லஹிரு தில்சான் 65  ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், ஹெசான் பெர்னாந்து 2 விக்கெட்டுக்களையும் இசிபதன கல்லூரி அணி சார்பாக கைப்பற்றினர்.

இதனையடுத்து, 88 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த இசிபதன கல்லூரி அணியினர், மஹாநாம கல்லூரியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர்.

இவ்வாறான நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இசிபதன கல்லூரி அணியின் இறுதி துடுப்பாட்ட வீரர்கள் முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. போட்டி நிறைவடையும்பொழுது 21.4 ஓவர்களிற்கு 84 ஓட்டங்களை மாத்திரமே அவர்களால் பெற முடிந்தது.

இதனால் இசிபதன கல்லூரி அணி மஹாநாம கல்லூரியிடம் இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

ஏனையவர்கள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஹெசான் பெர்னாந்து மாத்திரம் 39 ஓட்டங்களை தனது அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட மஹேல டி சில்வா, ஹசான் சந்தீப்ப, விஹான் முதலிகே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி மஹாநாம கல்லூரி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

போட்டி சுருக்கம்

இசிபதன கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்): 152/10(40.2) – பத்தும் நிசங்க 50, ஹெசான் பெர்னாந்து 21, ஹசான் சந்தீப்ப 4/19, ஹெசான் ஹெட்டியாராச்சி 3/40

மஹாநாம கல்லூரி அணி (முதல் இன்னிங்ஸ்):  240/10(86.2) – மலிந்து மதுவந்த 72, ஹெசான் ஹெட்டியாராச்சி 46, லஹிரு தில்ஷான் 4/65, ஹெசான் பெர்னாந்து 2/34

இசிபதன கல்லூரி அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 84/10(21.2) – ஹெசான் பெர்னாந்து 39, விஷான் முதலிகே 3/13, மஹேல டி சில்வா 3/15, ஹசான் சந்தீப்ப 3/23

போட்டி முடிவு: மஹாநாம கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்களால் வெற்றி