பதும் நிசங்க சதம், இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி முன்னிலையில்

244
Sri Lanka U19s vs South Africa U19s

குருணாகலை வெலகெதர மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் மற்றும் தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணிகளுக்கிடையில் நடைபெறும்  இரண்டாவது இளைஞர் டெஸ்ட் போட்டியில் இஸிபத்தன கல்லூரியைச் சேர்ந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்க 152 ஓட்டங்களைப் பெற்றார்.

வலதுகைத் துடுப்பாட்ட வீரரான பதும் 20 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 152 ஓட்டங்களைப் பெற்றதோடு 5ஆவது விக்கட்டுக்காக புனித ஆலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த அஷேன் பண்டாரவுடன்(52*) இணைந்து 182 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் முதல் இனிங்ஸின் 244 ஓட்டங்களுக்குப் பதிலளிக்கும் முகமாக இன்று துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி தமது பத்தாவது ஓவரில் முதலாவது விக்கட்டினை இழந்தது. விஷ்வ சதுரங்க, வியான் முல்டரின் பந்து வீச்சில் விக்கட் காப்பாளர் பூமா டுங்காவின் பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.

முதலாவது விக்கட் இழக்கப்பட்டு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் முல்டர், இலங்கை அணித் தலைவர் அவிஷ்க பெர்னான்டோவின் விக்கட்டைப் பதம் பார்த்தார்.

31 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்காக சம்மு அஷான், பதும் நிசங்கவுடன் இணைந்து 38 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். எனினும் அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் சம்மு அஷான் மற்றும் சஞ்சுல அபயவிக்ரம ஆகியோர் ஆட்டமிழக்க இலங்கை அணி 68/4 என்ற இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஒருபக்கம் விக்கட்டுகள் மளமளவென சரிந்தாலும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய பதும் நிசங்க 17 வயது நிரம்பிய பண்டாரவுடன் இணைந்து மெதுவாக விக்கட்டினைத் தக்கவைத்துக்கொண்டு ஓட்டங்களைப் பெறத் தொடங்கினார். முதலாவது போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த பண்டார 186 பந்துகளை முகம் கொடுத்து 8 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நேர முடிவின் போது இலங்கை 6 விக்கட்டுகள் மீதமிருக்க 7 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும்.

தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் – 91.2 ஓவர்களில் 244 ஓட்டங்கள். ஜோஷுவா வன் ஹீர்டன் 81, ரிகார்டோ வன்கொன்சலஸ் 53, வியான் முல்டர் 63, தமித சில்வா 4/56, திலான் ப்ரஷான் 2/60, சம்மு அஷான் 2/35.

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் – 90 ஓவர்களில் 251/4 ஓட்டங்கள். பதும் நிசங்க 152*, அஷேன் பண்டார 52*, வியான் முல்டர் 2/56, அக்கோனா மியாகா 2/42.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்