கேசரவின் அதிரடிப் பந்துவீச்சினால் கிண்ணத்தை வென்ற புனித செர்வதியஸ் கல்லூரி  

146
U17 Finals - St.Antony's vs St. Servatius

பதினேழு வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் I) பாடாசாலை அணிகளுக்கு இடையிலான ‘சிங்கர் கிண்ண’ மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி அணியினை 209 ஓட்டங்களால் வீழ்த்திய மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி இந்தப் பருவகாலத்திற்கான சம்பியனாக முடிசூடியுள்ளது.

கொழும்பு சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த தீர்மானமிக்க இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்த புனித செர்வதியஸ் கல்லூரி அணி அரையிறுதியில் நாலந்த கல்லூரியினையும், புனித அந்தோனியார் கல்லூரி அணி றோயல் கல்லூரியினையும் தோல்வியடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

துல்ஷானின் சகல துறை ஆட்டத்தினால் புனித செர்வதியஸ் அணி இறுதிப் போட்டியில்

பதினேழு வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு (டிவிஷன் -I) இடையிலான …

இறுதி ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செர்வதியஸ் கல்லூரி அணியின் தலைவர் கேசர நுவான்த தமது அணிக்காக முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

தொடர்ந்து துடுப்பாட்டத்தை தொடங்கிய செர்வதியஸ் கல்லூரி அணி போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டினை பறிகொடுத்தது. இதனால் மலையக கல்லூரியான புனித அந்தோனியர் கல்லூரிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்று கிடைத்தது.

மோசமான ஆரம்பத்தினால் தடுமாற்றம் அடையாத செர்வதியஸ் கல்லூரியின் இளம் வீரர்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த புஷ்பித தில்ஷான் அரைச் சதம் கடந்து 86 பந்துகளிற்கு 56 ஓட்டங்களைப் பெற்றார்.

அதேபோன்று, மத்திய வரிசையில் ஆடிய சஷிக துல்ஷானும் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் சேர்த்து பெறுமதியான 45 ஓட்டங்களைப் பெற்று அணியினை வலுப்படுத்தினார்.

அதோடு இறுதி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களமிறங்கிய தத்தசார சில்வா வானவேடிக்கை காட்டி அணியினைப் பலப்படுத்த 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த புனித செர்வதியஸ் கல்லூரி தரப்பு எதிரணிக்கு சவால் தரும் வகையில் 278 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

செர்வதியஸ் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் இறுதியில் அசத்திய தத்சார சில்வா வெறும் 17 பந்துகளை மாத்திரம் சந்தித்து 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களினைக் குவித்திருந்தார்.

புனித அந்தோனியார்  கல்லூரி அணியின் பந்து வீச்சில் சசித் ஹிருதிக்க 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் நவோத்ய விஜயகுமார 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட கடினமான 279 ஓட்டங்களினைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய புனித அந்தோனியார் கல்லூரியினர் சிறப்பான ஆரம்பத்தினையே காட்டியிருந்தனர்.

தமது முதல் விக்கெட்டினை 41 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது பறிகொடுத்த கண்டி வீரர்கள், அதற்கடுத்து எதிரணியின் பந்து வீச்சினை சமாளிப்பதில் மிகவும் சிரமத்தினை எதிர்கொண்டனர்.

இதனால் தமது எஞ்சிய அனைத்து விக்கெட்டுக்களையும் வெறும் 28 ஓட்டங்களிற்குள் பறிகொடுத்த புனித அந்தோனியார் கல்லூரி அணியினர் 22.3 ஓவர்களில் 69 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் 209 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தனர்.

மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அந்தோனியர் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் இரண்டு வீரர்களால் மாத்திரமே இரு இலக்க  ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன. அதில், அதிகபட்சமாக அணியின் தலைவர் தீக்ஷன குணசிங்க 22 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

போட்டியின் போக்கினை முழுவதுமாக மாற்றி தமது அணியினை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்ற செர்வதியஸ் கல்லூரியின் தலைவர் கேசார நுவான்த 10 ஓட்டங்களினை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, சகல துறை ஆட்டத்தினை காட்டிய சஷிக துல்ஷானும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றியிற்கு தன்னால் முடிந்த பங்களிப்பினை வழங்கி சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வதியஸ் கல்லூரி  – 278 (47.1) புஷ்பித தில்ஷான் 56, தத்சார 48,  சஷிக துல்ஷான் 45, சசித் ஹிருதிக்க 42/3, நவோத்ய விஜயகுமார 36/2

புனித அந்தோனியர் கல்லூரி69 (22.3) தீக்ஷன குணசிங்க 22, கேசார நுவான்த 10/5, சஷிக துல்ஷான் 5/3

போட்டி முடிவுபுனித செர்வதியஸ் கல்லூரி 209 ஓட்டங்களால் வெற்றி