ஒலிம்பிக் கிராமத்தில் 2 கால்பந்து வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று

Tokyo Olympic - 2020

115
Two athletes test positive for COVID

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த தென்னாபிரிக்கா கால்பந்து அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, ஒலிம்பிக்கில் பங்குபற்ற வருகை தந்த 3 வீரர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்

>> டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று

போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. PCR பரிசோதனைக்குப் பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த அதிகாரி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். அவர் யார் என்ற தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிடவில்லை

இதனிடையே, ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகிய இரண்டு வீரர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விபரத்தை ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினர் வெளியிடவில்லை.

ஆனால், தென்னாபிரிக்கா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்தியின் படி அந்த அணியைச் சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற உகண்டா நாட்டு வீரர் மாயம்

இதனையடுத்து தென்னாபிரிக்கா கால்பந்து அணியைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் அனைவரும் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அணியின் முகாமையாளர் எம்ஸ்கொலிசி சிபெம் தெரிவித்துள்ளார்

இம்முறை ஒலிம்பிக்கில் தென்னாபிரிக்கா அணி, தமது முதல் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளது. எனவே, தற்போது அந்த அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால்  குறித்த போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுஇவ்வாறிருக்க, ஒலிம்பிக் கிராமத்துக்கு வெளியே வேறொரு இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) வெளியான மற்றொரு வீரரினது கொரோனா அறிக்கையும் நேர்மறையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க வந்த மூன்று வீரர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான தென்கொரியாவைச் சேர்ந்த முன்னாள் மேசைப்பந்து ஒலிம்பிக் சம்பியனான ரையு சியங் மின் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டமை நேற்று உறுதி செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

>> அற்புதமான டோக்கியோ ஒலிம்பிக் தொடரினை ThePapare.com உடன் இணைந்து இரசியுங்கள்

அதுமாத்திரமின்றி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்ற வந்த ஒலிம்பிக் அகதிகள் அணியைச் சேர்ந்தவரும், அந்த அணியின் முன்னாள் பிரதானியுமான டெக்லா லொரூப் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்

இதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை வரை ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்களில் 10 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இதில் போட்டி அதிகாரிகள் ஐவர், விளையாட்டு வீரர்கள் மூவர், பத்திரிகையாளர் ஒருவர், ஒப்பந்தப் பணியாளர்ருவர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போட்டி நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

தற்போது வரை ஒலிம்பிக் பணியில் இருக்கும் 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் நிர்வாக குழு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பலர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<