கடைசி நிமிட கோல் மூலம் அரையிறுதிக்கு நுழைந்த புனித ஜோசப் கல்லூரி

312

ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய புனித ஜோசப் கல்லூரி புனித பேதுரு கல்லூரிக்கு எதிரான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

சுகததாச அரங்கில் இன்று (24) நடைபெற்ற புனிதர்களின் சமராக மாறிய போட்டியில் நட்சத்திர வீரர் ஷபீர் ரசூனியாவின் அபார கோல் மூலம் புனித பேதுரு கல்லூரி முன்னிலை பெற்றபோதும் இரண்டாவது பாதியில் இரண்டு கோல்களைப் பெற்று புனித ஜோசப் கல்லூரி வெற்றியை உறுதி செய்து கொண்டது.

த்ரில் ஆட்டத்தில் கம்பளை ஸாஹிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஹமீட் அல் ஹுஸைனி

போட்டி ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே புனித பேதுரு கல்லூரியின் நட்சத்திர முன்கள வீரர் ஷபீர் ரசூனியா பந்தை கடத்திச் சென்று எதிரணியின் பெனால்டி எல்லையின் வலது பக்க மூலையில் இருந்து உதைத்த பந்து அச்சுறுத்தும் வகையில் கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது. இதனைத் தொடர்ந்து ஆடுத்த மூன்று நிமிடங்களிலும் புனித பேதுரு வீரர்கள் புனித ஜோசப் கல்லூரியின் கோல் எல்லையை ஆக்கிரமிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தனது நட்சத்திர வீரர் அசேல மதுசங்க இன்றி காலிறுதிப் போட்டியில் களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி எதிர்பாராத விதமாக போட்டியில் ஆக்கிரமிப்பு செலுத்த ஆரம்பித்தது. மதுசங்க காயம் காரணமாகவே இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது.

நான்காவது நிமிடத்தில் வைத்து போட்டியில் முதல் முறை கோலை நோக்கி புனித ஜோசப் கல்லூரி உதைத்த பந்தை புனித பேதுரு கல்லூரியின் கோல்காப்பாளர் மிதுர்ஷன் தடுத்தார். தொடர்ந்து 5 ஆவது நிமிடத்தில் எதிரணி கோல்கம்பத்திற்கு நெருக்கமாக கிடைத்த பந்தை கோலாக்க புனித ஜோசப் கல்லூரி வீரர்களால் முடியாமல் போனது.

எனினும் ரசூனியா கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோல் போட கடுமையாக போராடினார். 11 ஆவது நிமிடத்தில் வைத்து மைதானத்தின் பாதித் தூரத்தில் இருந்து உதைத்த பந்து கோலுக்குள் செல்லாமல் கம்பத்தில் பட்டு வெறியேறியது.

மறுபுறம் பந்தை அதிக நேரம் தமது கால்களில் வைத்திருந்த புனித ஜோசப் வீரர்களின் பல கோல் வாய்ப்புகளும் அதிர்ஷ்டம் இன்றி தவறிப்போனது. 12 ஆவது நிமிடத்தில் அதேபோன்றதொரு வாய்ப்பு நழுவியதோடு புனித பேதுரு கல்லூரி கோல்காப்பாளர் 20 ஆவது நிமிடத்தில் வைத்து அடுத்தடுத்து இரு வாய்ப்புகளை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்தார்.

எவ்வாறாயினும் மீண்டும் செயற்பட ஆரம்பித்த ரசூனியா 21 ஆவது நிமிடத்தில் பந்தை கடத்திச் சென்று எதிரணி கோலுக்கு அருகில் தவறவிட்டபோதும் இதனைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் தனது அணிக்கு நெருக்கடி இன்றி கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் பதில் கோல் பெற அவசரம் காட்டிய புனித ஜோசப் கல்லூரி அடுத்தடுத்து புனித பேதுரு கல்லூரி கோல் எல்லையை ஆக்கிரமிப்பதை காண முடிந்தது. எனினும் புனித பேதுரு கல்லூரி முதல் பாதியின் கடைசி 15 நிமிடங்களில் அதிகம் தற்காப்பு ஆட்டத்திலேயே நாட்டம் காட்டியது.

41 ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் வீரர்கள் கோனர் கிக் மூலம் கோலை நோக்கி பந்தை செலுத்த முயன்றபோதும் புனித பேதுரு கோல்காப்பாளர் அபாரமாக உயரப் பாய்ந்த அந்த வாய்ப்பை தடுத்தார்.

மகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில

முதல் பாதியின் மேலதிக நேரத்தில் புனித பேதுரு கல்லூரியின் நட்சத்திர வீரர் ரசூனியா இழைத்த தவறு ஒன்று நடுவரிடம் அட்டை பெறாமல் தப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி: புனித பேதுரு கல்லூரி 1 – 0 புனித ஜோசப் கல்லூரி

முதல் பாதியில் முன்னிலை பெற்றபோதும் புனித பேதுரு கல்லூரி அணி போட்டியில் ஆதிக்கம் சொலுத்த அதிகம் போராட வேண்டி ஏற்பட்டது. புனித ஜோசப் கல்லூரி வசமே பந்து அதிக நேரம் இருந்தது. 49 ஆவது நிமிடத்தில் பேதுரு கல்லூரி கோல் எல்லையில் வைத்து ஜோசப் வீரர்கள் பந்தை கட்டுப்படுத்தியபோதும் முறையாக பந்தை பரிமாற்ற தவறியதால் பதில் கோல் ஒன்றை பெறும் வாய்ப்பு தவறிப்போனது. தொடர்ந்து 50 ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு மற்றொரு கோல் வாய்ப்பு தவறியது.

இந்நிலையில் தவறிழைத்த புனித ஜோசப் வீரர் சச்சித் சத்சர போட்டியின் முதல் மஞ்சள் அட்டையை பெற்றார்.

61 ஆவது நிமிடத்தி புனித பேதுரு கல்லூரிக்கு கோல் ஒன்று பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஜோசப் கல்லூரியின் தற்காப்பு அரணில் யாரும் இல்லாமல் பந்தை கடத்திச் சென்று இலகுவான கோல் ஒன்றை போட ரசூனியா முயன்போதும் கோல்காப்பாளருக்கு காயம் ஏற்பட்டதால் புனித ஜோசப் கல்லூரி பதில் கோல்காப்பாளர் சசிந்து ஜயசிங்கவுடனேயே எஞ்சிய நேரத்தை ஆட வேண்டி ஏற்பட்டது.

பதில் கோல் ஒன்றை பெறுவதற்கு கடுமையாக போராடிய புனித ஜோசப் கல்லூரிக்கு கடைசியில் செனால் சந்திஷ் கைகொடுத்தார். 67 ஆவது நிமிடத்தில் அவர் புகுத்திய கோல் மூலம் அந்த அணி போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

இந்நிலையில் போட்டியின் கடைசி 15 நிமிடங்களும் விறுவிறுப்பு அதிகரித்தது. 76 ஆவது நிமிடத்தில் ஜேசப் பெர்னாண்டோ புனித பேதுரு கல்லூரி கோல் எல்லைக்குள் எதிரணி தற்காப்பு வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அபாரமாக பந்தை கடத்திச் சென்று கோல் போட எடுத்த முயற்சி துரதிஷ்டவசமாக தவறியது.

மேற்கிந்திய தீவுகளை சுழலால் சுருட்டிய பங்களாதேஷ்

எவ்வாறாயினும் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் மாத்திரம் இருக்கும்போது சலன பிரபந்த தொலைவில் இருந்து பரிமாற்றிய பந்தை கட்டுப்படுத்திய பதில் வீரராக வந்த கிவ்னோய ரூபசிங்க கோலாக மாற்றி புனித ஜோசப் கல்லூரிக்கு வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

முழு நேரம்: புனித பேதுரு கல்லூரி 1 – 2 புனித ஜோசப் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித பேதுரு கல்லூரி – ஷபீர் ரசூனியா 21′

புனித ஜோசப் கல்லூரி – செனால் சந்திஷ் 67′, கிவ்னோய ரூபசிங்க 89′     

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க