LPL தொடரில் திறமைகளை உலகறியச்செய்த இளம் வீரர்கள்

Lanka Premier League 2021

412

இலங்கையில் நடைபெற்றுவந்த லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்றிருந்தது.

இந்த போட்டித்தொடரில் இலங்கை அணியின் இளம் வீரர்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தன. இதில், சில வீரர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத போதும், கிடைத்த வாய்ப்புகளை சில வீரர்கள் மிகச்சிறப்பாக பயன்படுத்தியிருந்தனர்.

இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

அந்தவகையில், இம்முறை LPL தொடரில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இளம் வளர்ந்துவரும் வீரர்கள் தொடர்பில் பார்வையிடலாம்.

ஜனித் லியனகே – தம்புள்ள ஜயண்ட்ஸ்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்படும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஜனித் லியனகே பார்க்கப்படுகின்றார். இவர், இந்த ஆண்டுக்கான LPL தொடரில் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.

இவர் இம்முறை தொடரில் 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், லியனகேவின் துடுப்பாட்ட திறமை வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. குறிப்பாக, அறிமுகமாகிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைச்சதத்தை பதிவுசெய்ததுடன், 37 பந்துகளில் 51 ஓட்டங்களை குவித்திருந்தார்.

மீண்டும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த இவர்  அணியின் வெற்றியையும் உறுதிசெய்திருந்தார். அதன்மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக சிறந்த இன்னிங்ஸ்களை ஆடக்கூடிய வல்லமையை இவர் கொண்டிருப்பதுடன், போட்டியின் தருணங்களுக்கு ஏற்றவாறு வேகமாகவும், நிதானமாகவும் ஓட்டங்களை பெறுவதற்கான திறனையும் கொண்டிருக்கிறார்.

அத்துடன், மிதவேக ஓவரினை வீசும் திறமையினை ஜனித் லியனகே கொண்டிருந்தாலும், இந்த தொடரில் அவர் பந்துவீசுவதற்கான வாய்ப்பை பெறவில்லை. எவ்வாறாயினும், பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் சிறந்து விளங்கக்கூடிய ஜனித் லியனகே இலங்கை தேசிய அணிக்காக எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஜப்னா கிங்ஸ்

யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்த ஆண்டு LPL தொடரில் அதிக கவனத்தை ஈர்த்திருந்த சுழல் பந்துவீச்சாளராக இருந்தார்.

ஜப்னா கிங்ஸ் அணி தங்களுடைய பிளே-ஓஃப் வாய்ப்பை உறுதிசெய்திருந்த நிலையில், தங்களுடய முன்னணி வீரர்களுக்கு ஓய்வை வழங்கியிருந்ததுடன், வியாஸ்காந்திற்கு இரண்டு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு LPL தொடரில் கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்ட இவர் முதல் விக்கெட்டாக அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

இவ்வாறான நிலையில், இந்த முறை இவருடைய திறமை மேலும் அதிகரித்திருப்பதை காணமுடிந்தது. இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இருந்த இவர், இம்முறை வாய்ப்பு கிடைத்த ஓவரில், இலங்கை அணியின் அனுப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் பெரேராவின் விக்கெட்டினை வீழ்த்தினார்.

தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இவர், இந்த போட்டியில் டொம் பெண்டன் மற்றும் கீமோ போல் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர், இந்த போட்டியிலும் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

வியாஸ்காந்த் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், அவருடைய பந்துவீச்சு பாணி மற்றும் அவர் LPL போன்ற தொடரில் பந்துவீசும் விதம் என்பன அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட்டில் எதிர்பார்க்கப்படும் ஒரு இளம் வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிமேஷ்  விமுக்தி – கண்டி வொரியர்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணியை பொருத்தவரை, இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகரித்து வருகின்றதை பார்க்க முடிகின்றது. லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் வரிசையில் இந்த LPL தொடரில் கண்டறியப்பட்ட வீரர் கண்டி வொரியர்ஸ் அணியின் நிமேஷ் விமுக்தி.

கண்டி வொரியர்ஸ் அணி இம்முறை தொடரிலிருந்து லீக் போட்டிகளிலிருந்து வெளியேறியிருந்தாலும், நிமேஷ் விமுக்தியின் பந்துவீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

பவர் பிளே ஓவர்கள் தொடங்கி, மத்திய ஓவர்களிலும் விக்கெட்டுகளை சாய்த்திருந்த இவர், எதிரணியின் ஓட்டவேகத்தை கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராகவும் இருந்தார். 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், மொத்த தொடரிலும் ஓவருக்கு 6 ஓட்டங்களுக்கும் குறைவாகவே எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்திருந்தார். முக்கியமாக விளையாடிய அனைத்து போட்டிகளிலும், ஒரு விக்கெட்டையேனும் கைப்பற்றியிருந்தார்.

குறிப்பாக இந்த LPL தொடரில் இவருடைய பந்துவீச்சு மிக பலமாக கண்டி வொரியர்ஸ் அணிக்கு அமைந்திருந்ததுடன், துடுப்பாட்டத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் இவரால் பின்வரிசை துடுப்பாட்ட வீரராக செயற்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சச்சிந்து கொலம்பகே – கண்டி வொரியர்ஸ்

இந்த LPL 2021 தொடரில் கண்டறியப்பட்டுள்ள மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் சச்சிந்து கொலம்பகே. எவ்வாறான ஆடுகளத்திலும் அதிகமாக பந்தை சுழல வைக்கக்கூடிய திறமையை கொண்டிருக்கும் இவர், இந்த தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

கண்டி வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், தன்னுடைய முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 27 ஓட்டங்களையும் விளாசியிருந்தார்.

முதல் போட்டியில் மாத்திரம் சிறப்பாக பந்துவீசியது மாத்திரமின்றி, அடுத்து தனக்கு கிடைத்த போட்டிகளில் மிகச்சிறந்த முறையில் பந்துவீசியிருந்தார். இவர், 7 போட்டிகளில் விளையாடி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், ஓவருக்கு 7.28 என்ற ஓட்ட விகிதத்தையும் கொண்டிருந்தார். சரியான நேரங்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய இவரின் திறமை அதிகமாக பேசப்படுவதுடன், இலங்கை கிரிக்கெட்டுக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராகவும் உள்ளார்.

இந்த ஆண்டு LPL தொடரை பொருத்தவரை  பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய திறமைகளை சர்வதேச அரங்கில் நிரூபித்துள்ளனர். ரசிகர்களின் முன்னிலையில் திறமைகளை வெளிக்காட்டிய இவர்களுக்கு, தொடர்ச்சியான வாய்ப்புகள் இலங்கை கிரிக்கெட்டால் வழங்கப்படும் பட்சத்தில், தொடர்ந்து இவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து இலங்கை கிரிக்கெட்டுக்கு வலுசேர்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<