குறைந்த விலையில் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண டிக்கெட்டுகள்

ICC Women’s Cricket World Cup 2025

122
ICC Women's world cup

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்தியாவில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிசு நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்துள்ளது. முதல் கட்ட விற்பனையில் டிக்கெட்டின் விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைதானங்கள் முழுமையாக நிரம்புவதற்காகவும், மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் வளர்ச்சிக்காகவும், மிக குறைந்த விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. அன்றைய தினமே டிக்கெட்டுகளை பெற விரும்பும் ரசிகர்கள் பதிவுசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<