இலங்கை மற்றும் இந்தியாவில் கூட்டாக நடைபெறவுள்ள 2026 ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை நேற்று (11) மாலை முதல் ஆரம்பமாகியது. இதற்கான முதல் நுழைவுச்சீட்டை நேற்று நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது T20I போட்டியின் போது இந்திய அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி வழங்கினார்.
அதில், இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மும்பையில் விளையாடும் முதல் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதேபோன்று தென்னாப்பிரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகள் மோது போட்டிக்கான நுழைவுச்சீட்டை தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் ஏய்டன் மார்க்கரமுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பை அதிகமான மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் நுழைவுச்சீட்டு விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டின் ஆரம்ப விலையானது ரூ.100 ஆகவும், இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டின் ஆரம்ப விலையானது ரூ. 1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய அணிகள் விளையாடும் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையிலும், 2026 T20 உலகக் கிண்ணத் தொடரைக் கண்டுகளிக்கும் வகையில் குறைந்த விலையில் நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பமாகியுள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சஞ்சய் குப்தா, “எங்களுடைய கொள்கை என்பது மிகவும் தெளிவானது. நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, அனைவருக்குமே மைதானத்தில் வந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை தர வேண்டும். இதற்காகத்தான நுழைவுச்சீட்டு விலையை 100 ரூபாயிலிருந்து ஆரம்பித்து இருக்கின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.
>>2026 T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற 20 அணிகளும் அறிவிப்பு<<
இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையே பெப்ரவரி 8ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியின் நுழைவுச்சீட்டுகள் 1,000, 3,000, 5,000 மற்றும் 7,500 ரூபா என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையே பெப்ரவரி 12ஆம் திகதி பல்லேகலையில் நடைபெறும் போட்டியின் நுழைவுச்சீட்டுகள் 1,000, 4,000 மற்றும் 5,000 ரூபா என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெறும் போட்டியும் பல்லேகலையில் நடைபெறும், அந்த போட்டியின் நுழைவுச்சீட்டுகளும் 1,000, 4,000 மற்றும் 5,000 ரூபா என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.
இலங்கைக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையேயான போட்டி பெப்ரவரி 19ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். அந்தப் போட்டியின் நுழைவுச்சீட்டுகள் 1,000, 3,000, 5,000 மற்றும் 7,500 ரூபா என்ற விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.
வiஉமநவள.உசiஉமநவறழசடனஉரி.உழஅ என்ற இணையதளம் மூலம் ரசிகர்கள் நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்ய முடியும். முதல் கட்டத்தில் இரண்டு மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படவுள்ளன, இரண்டாவது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
2026 ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளது. 20 அணிகள் பங்குபற்றுகின்ற இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் 40 லீக் போட்டிகள், ‘சுப்பர் 8’ சுற்றில் 12 போட்டி உட்பட மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டியிலும் போட்டிகள் நடைபெறுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















