புனித ஹென்றி கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் 19 வயதுதிற்குக்கீழான இலங்கை குழாமிற்குத் தெரிவு

536

இளவாலை புனித ஹென்றி கல்லூரி கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு 19 வயதுக்குக்கீழான இலங்கை கால்பந்து அணிக்கான தெரிவுக்குழாமில் இடம் பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது .

எதிர்வரும் ஆசிய பாடசாலைகளுக்கான கால்பந்து போட்டித்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேர் கொண்ட குழாமில் ஜூட் சுபன், A.மதுஷன் மற்றும் அந்தனி ரமேஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சுபன் மற்றும் மதுஷன் இருவரும் சென்ற வருடம் சீனாவில் இடம் பெற்ற ஆசிய பாடசாலைகளுக்கான கால்பந்து போட்டித்தொடர் தகுதி காண் போட்டிகளில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. சுபன் தற்போது இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஞானரூபன் வினோத்தின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவ் இரண்டு அனுபவ வீரர்களுடன், நடந்து முடிந்த அகில இலங்கை ரீதியாக இடம் பெற்ற பாடசாலைகளுக்கான கால்பந்து போட்டித்தொடரில் சிறப்பான திறமையை வெளிக்காட்டிய ரமேஷிற்கும் குழாமில் இடம் பெறும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

சுபன் மற்றும் மதுஷன் இருவரும் கழகக் கால்பந்து விளையாடும் வீரர்களாவர். இருவரும் 2014இல் டயலொக் சம்பியன்ஸ் லீக்கினை வெற்றி பெற்ற அனுராதபுரம் சொலிட் கால்பந்தாட்டக் கழகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பாடசாலை கால்பந்து உலகில் தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள புனித ஹென்றி கல்லூரி சமீப காலமாக தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளை தம் வசப்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சொக்ஸ் 19 வயதுக்குக்கீழான கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு வெற்றியாளர்களான கொழும்பு சஹிரா கல்லூரியை 3-1 எனும் கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.