இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன தசை உபாதைக்கு முகம் கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக காணப்பட்டு வரும் தீக்ஷன நெதர்லாந்து அணியுடனான போட்டியின் போது தசை உபாதை ஆபத்தினை எதிர் கொண்டிருந்தார்.
2023 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி
இந்த நிலையில் தீக்ஷனவின் உடல் நிலை குறித்து உறுதிப்படுத்துவதற்கும் அவர் அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியில் பங்கெடுப்பது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கும் MRI பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் MRI பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் தீக்ஷன உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மோதலில் பங்கெடுப்பது சந்தேகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷ பதிரன உபாதைக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் தீக்ஷனவின் செய்தி, இலங்கை கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி தரும் விடயமாக மாறியிருக்கின்றது.
நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத்தில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் விளையாடும் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள நிலையில் தீக்ஷனவின் உடல்நிலை தொடர்பிலான முடிவுகள் ஓரிரு நாட்களில் தெரியவரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீக்ஷன உபாதைச் சிக்கல்கள் காரணமாக இதற்கு முன்னரும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் போட்டியில் விளையாடாமல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணி நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ண மோதலில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















