இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தி ஹண்ட்ரட் தொடருக்கான வீரர்கள் வரைவு இன்றைய தினம் (05) நடைபெற்று முடிந்தது. குறித்த இந்த வீரர்கள் வரைவுக்காக இலங்கை அணியின் 22 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.
>>தி ஹண்ட்ரட் வீரர்கள் வரைவில் இலங்கையின் 22 வீரர்கள்
இலங்கை அணியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட வீரர்களிலிருந்து, வனிந்து ஹஸரங்க மாத்திரமே வீரர்கள் வரைவின் மூலம் அணியொன்றுக்காக வாங்கப்பட்டுள்ளார். இதில், வனிந்து ஹஸரங்க தன்னுடைய குறைந்தபட்ச தொகையாக 50,000 பவுண்டுகளை நிர்ணயித்திருந்த நிலையில், ஒரு இலட்சம் பவுண்டுகளுக்கு (3 கோடி 94 இலட்சம் இலங்கை ரூபாய்) மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.
வனிந்து ஹஸரங்க வாங்கப்பட்டுள்ள மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக மே.தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர் அன்ரே ரசல் 125,000 பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டுள்ளார். இவருடன், லோரி எவன்ஸ், பில் சோல்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய முன்னணி வீரர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
தி ஹண்ட்ரட் போட்டித்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் செப்டம்பர் 3ஆம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அணிசார்பில் இந்த தொடரில் விளையாடவுள்ள முதல் வீரர் வனிந்து ஹஸரங்க என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















