இலங்கை அணியின் ஆலோசகராக செயற்பட விரும்பும் முரளிதரன்

1183
Image Courtesy - Geety image

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் வேதனை அளிக்கின்றது என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் விளையாடிய காலத்தில் பணத்துக்காக ஒருபோதும் விளையாடவில்லை எனவும், நாட்டுக்காக விக்கெட்டை வீழ்த்துவதிலும், ஓட்டங்களைக் குவிப்பதிலும் தான் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள இரண்டு….

அத்துடன், இலங்கை அணியின் முழுநேர பயிற்சியாளராக செயல்பட தற்போது தனக்கு நேரமில்லை என தெரிவித்த முரளிதரன், ஆலோசகராக செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அணி, அந்த இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்து தொடரை இழந்தது. அதற்குமுன் நியூசிலாந்துடனான டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடரையும் இலங்கை அணி பறிகொடுத்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகள் குறித்து முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் மார்வன் அத்தபத்து ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் சென்னையில் நேற்று (09) நடைபெறற்ற டி-15 கிரிக்கெட் லீக் அறிமுக விழாவில் கலந்துகொண்டு அளித்த பேட்டியில் இலங்கை அணியின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது,

”நான் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை கிரிக்கெட் சபையுடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி எனக்கு உண்மையில் வேதனை அளிக்கிறது. உலகக் கிண்ணப் போட்டியில் மூன்று தடவைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை கிரிக்கெட் அணி பெருமைக்குரிய கலாசாரத்தை கொண்ட அணியாக விளங்கியது. ஆனால், தற்போதைய இலங்கை அணியின் செயல்பாடு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

புதிய மாற்றங்களுடனான அணித்தெரிவு பற்றி விளக்கும் அசந்த டி மெல்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுப் ….

நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக இருக்கவில்லை. 1990-களில் கிரிக்கெட்டில் பணம் அதிகம் புழங்கவில்லை. விக்கெட்டை வீழ்த்துவதிலும், ஓட்டங்களைக் குவிப்பதிலும் தான் எங்கள் மோகம் இருந்தது. அந்த உத்வேகம் தற்போது மாறியுள்ளது. வீரர்கள் பணத்தை முக்கிய நோக்கமாக நினைத்தால் கிரிக்கெட் ஆட்டத்தின் தரம் வீழ்ந்து விடும். வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து தான் சிந்திக்க வேண்டும். பணத்தை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடாது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் பணமும், அங்கீகாரமும் தானாகவே வந்துசேரும்.

கடந்த 3 முதல் 4 வருடங்களாக இலங்கை அணி போதிய அளவு திறமையான வீரர்களை உருவாக்கவில்லை. திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரிவதில்லை. பயிற்சியாளர்களால் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முடியாது. பயிற்சியாளர்களால் ஆட்டத்தின் அடிப்படைகளை தான் சொல்லிக் கொடுக்க முடியும். தனிநபர்களின் திறமையும், ஆர்வமும் தான் வெற்றியாளர்களை உருவாக்கும். இலங்கை அணியின் முழுநேர ஆலோசகராக செயல்பட தற்போது எனக்கு நேரமில்லை. .பி.எல். போட்டியில் ஈடுபட்டு வருவதால் வேறு எந்த பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.

20 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடிய பிறகு தற்போது எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றேன். எனக்கு வேறு பணிகள் இருப்பதால் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்ற முடியாது. அதேநேரத்தில் இலங்கை அணியினருக்கு ஆலோசனை வழங்க நான் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார்.

இதேநேரம் அவுஸ்திரேலியாவுடனான தோல்வி குறித்து முரளிதரன் கருத்து வெளியிடுகையில், குசல் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் அதிக திறமைமிக்க வீரர்களாக உள்ளனர். ஆனால் அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இது அவர்களின் துடுப்பாட்டம் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

கடந்த 3-4 வருடங்களாக இந்த நிலைமை தொடர்கிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது. சர்வதேச போட்டியில் களமிறங்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற திறன் அவர்களிடம் இல்லை.

தற்போது இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. அதேபோல், அவுஸ்திரேலியாவின் விளையாட்டும் முன்னர் போல் சிறப்பாக இல்லை. எனினும், அவுஸ்திரேலியாவை விட இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடியதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது தொடர்பில் முரளி கருத்து வெளியிடுகையில்,

இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் வியாபிக்கவில்லை. அது கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வறுமையான வீரர் ஒருவர் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும், அவருக்கு கொழும்புக்கு வந்து விளையாட முடியாது. இதனால் ஏனைய மாவட்டங்களில் திறமையான வீரர்களை இழக்க நேரிடுகின்றது. அத்தடன், ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களே, கொழும்புக்கு அருகில் வசிப்பதால் அவர்களுக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் கைப்பற்றுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்த முரளிதரன், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு டி-20, டி-10 போட்டிகள் எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான மார்வன் அத்தப்பத்து, ”இலங்கை அணியின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிடுகையில், எனக்காக மாத்திரம் நான் கதைக்கிறேன். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதேபோல, ஒருவரின் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுவதற்கு நான் விரும்பவில்லை. மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டத்துடனும் எனது கிரிக்கெட்டை விளையாடியிருந்தேன். எனது ஓய்வை நான் மகிழ்ச்சியாகக் களிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<