மகாராணியார் கோலுக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு

பொதுநலவாய விளையாட்டு விழா - 2022

77

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2 ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) மாலைதீவுகளிலிருந்து இன்று (03) முற்பகல் 11.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்கள் வென்ற பளுதூக்கல் வீரர்களான சிந்தன கீதால் வித்தானகே மற்றும் ஹன்சினி கோமஸ் ஆகியோரால் விமானத்திலிருந்து மகாராணி கோலை பொறுப்பேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்கள் மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்து மகாராணி கோல் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின்னர் ஒலிம்பிக் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

‘பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு முன்னர் மகாராணியின் கோல் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 72 நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். எனவே இலங்கையை இன்று வந்தடைந்த மகாராணி கோல், 3 நாட்களுக்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Photos – Queen’s baton relay – Birmingham 2022

இதன்படி, பிரித்தானிய தூதரகம், பிரித்தானிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு  கொண்டு செல்லப்பட்ட மகாராணியார் கோல், நாளை (04) கண்டி நோக்கி கொண்டு செல்லப்படும்.

அங்கு பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கம், ரனபிம றோயல் கல்லூரி ஆகியவற்றுக்கும் கொண்டு சென்ற பின்னர் ஹந்தானையிலுள்ள இலங்கை தேயிலை நூதனசாலைக்கும் மகாராணியார் கோல் எடுத்துச் செல்லப்படும்.

இது இவ்வாறிருக்க, தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகாராணி கோலை இம்முறை மலையகத்தில் உள்ள சில நகரங்களுக்கு கொண்டு சென்று அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கவுள்ளன.

இதன்படி, ஜனவரி 5 ஆம் திகதியன்று மகாராணியார் கோல், பொகவந்தலாவை, கேர்க்கஸ்வோல்ட் தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கோலின் முக்கியத்துவம் குறித்து தோட்ட அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் விளக்கப்படும். கேர்க்கஸ்வோல்ட் தமிழ் மொழியில் லெட்சுமி தோட்டம் என அழைக்கப்படுகின்றது.

கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திலிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்படும் மகாராணியார் கோல், இரத்மலானையில் உள்ள செவிப்புலன் மற்றும் விழிப்புலனற்றோர் பாடசாலைக்கும், இறுதியாக விளையாட்டுத்துறை அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் பங்களாதேஷுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் சுரேஸ் சுப்ரமணியம்

இதேவேளை, மகாராணி கோல் இலங்கைக்கு வருகை தருவது மகத்தானதும் வரலாற்று முக்கியம் வாய்ந்ததுமாகும். இலங்கையில் மகாராணியின் கோலை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ என தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை பொதுநலாவாய விளையாட்டுத்துறை சங்கத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான மகாராணி கோல் தொடர் ஓட்டம் பேர்மிங்ஹம் மாளிகையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இரண்டாவது எலிஸபெத் மகாராணியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றவரும் இங்கிலாந்து அணி மெய்வல்லுனருமான கதீசா கொக்ஸ் முதலாமவராக மகாராணி கோலை வைபவ ரீதியாக பொறுப்பேற்று தொடர் ஓட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

இதுவரை 24 நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட மகாராணி கோல் இன்று 25 ஆவது நாடாக இலங்கை வந்தடைந்தது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 72 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 294 நாட்கள் பவணியாக கொண்டு செல்லப்படும் மகாராணி கோல், மொத்தம் 140,000 கிலோ மீற்றர்கள் பயணிக்கும்.

ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, கடல்சூழ்நாடுகள் (ஓஷானியா), கரிபியன் தீவுகள், அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கொண்டு செல்லப்படும் மகாராணி கோல், 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவத்தின்போது பேர்மிங்ஹம் அரங்குக்கு ஜுலை 28 ஆம் திகதி கொண்டு செல்லப்படும். அங்கு கோலிலுள்ள செய்தி வெளியில் எடுக்கப்பட்டு 2 ஆம் எலிஸபெத் மகாராணியால் வாசிக்கப்படும்.

 >>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<