அபார சதத்தின் மூலம் காலி அணிக்கு வெற்றி தேடித்தந்த தரங்க

1130

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (11) நடைபெற்றன. இதில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் கண்டி பல்லேகலையில் நடைபெறும் எட்டுநாள் பயிற்சி முகாமில் பங்கேற்றிருப்பதால் இன்றை போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

கொழும்பு எதிர் தம்புள்ளை

‘சுப்பர் 4’ தொடரில் பலம்கொண்ட அணியாக களமிறங்கிய கொழும்பு அணி, தம்புள்ளை அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தன் மூலம் அது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து பின்தங்கி இருந்த தம்புள்ளை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதோடு கொழும்பு அணி 8 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தம்புள்ளை அணித்தலைவர் குசல் பெரேரா தேசிய அணிக்கு திரும்பியதால் அஷான் பிரியன்ஜன் அந்த அணிக்கு தலைமை வகித்ததோடு இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு பதில் கொழும்பு அணிக்கு திசர பெரேரா மீண்டும் தலைவராக செயற்பட்டார்.

இளம் வீரர் சதீரவின் அதிரடி சதத்தால் கொழும்பை வீழ்த்திய காலி

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஷ்மிக்க டில்ஷான் தனது கன்னி முதல் தர போட்டியாக தம்புள்ளை அணிக்கு ஆட களமிறங்கினார்.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும் அணிக்கு ஆரம்பத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்ஷான் முனவீர டக் அவுட் ஆனதோடு கடந்த போட்டிகளில் சோபித்த ஷெஹான் ஜயசூரிய 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய வரிசையில் லசித் அபேரத்ன (49), கமிந்து மெண்டிஸ் (33) மற்றும் அஞ்செலோ பெரேரா (33) அணியின் ஓட்டங்களை அதிகரிக்க போராடினாலும் அவர்களால் நின்றுபிடித்து ஆட முடியாமல் போனது.

இதனால் கொழும்பு அணி 39.4 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன் போது தம்புள்ளை அணி சார்பில் அதன் தலைவர் அஷான் பிரியன்ஜன் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய தம்புள்ளை அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ரவிந்து குணசேகர ஓட்டமேதும் பெறாமல் வெளியேறினார். எனினும் மறுமுனையில் சிறப்பாக துடுப்பாடிய சந்துன் வீரக்கொடி தம்புள்ளை அணி இலகு வெற்றி ஒன்றை பெறுவதற்கு உதவினார். 83 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 96 ஓட்டங்களை குவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்பம் எப்படி இருந்தது?

இதன் மூலம் தம்புள்ளை அணி 36.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

 

கண்டி எதிர் காலி

காலி அணித்தலைவர் உபுல் தரங்கவின் அபார சதத்தின் உதவியோடு அந்த அணி கண்டி அணியுடனான போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மாகாணங்களுக்கு இடையிலான சுப்பர் 4 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

காலி அணி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று மொத்தம் 13 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு அஞ்செலோ மெதிவ்ஸின் கண்டி அணி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தூரமாக்கிக்கொண்டது.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்திற்காக உத்தேச அணி பயிற்சி முகாமில் பங்கேற்றிருப்பதால் மெதிவ்ஸ் பங்கேற்கவில்லை. இதனால் கண்டி அணிக்கு அனுபவ வீரர் ஜீவன் மெண்டில் தலைவராக செயற்பட்டார்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் திறமையான சகலதுறை வீரரான காலி ரிச்மண்ட் கல்லூரியின் தனஞ்சய லக்ஷான் தனது கன்னி முதல்தர போட்டியில் ஆட காலி அணிக்கு களமிறங்கினார்.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியின் முதல் விக்கெட்டை லக்ஷானால் வீழ்த்த முடிந்தது. தனுஷ்க குணதிலக்க 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ அடுத்த ஓவரிலேயே 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். சரித் அசலங்க 55 ஓட்டங்களை பெற்றதோடு பின் மத்தியவரிசை வீரர்கள் பொறுப்புடன் ஆடி கண்டி அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர்.  

வன்னிச் சமரில் சம்பியனாகிய வவுனியா இந்துக் கல்லூரி

குறிப்பாக விக்கெட் காப்பாளர் மினோத் பானுக்க மற்றும் அணித்தலைவர் ஜீவன் மெண்டிஸ் 6ஆவது விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று கண்டி அணியின் மொத்த ஓட்டங்கள் 200ஐ தாண்ட உதவினர். இதில் பானுக்க 83 பந்துகளில் 82 ஓட்டங்களையும் மெண்டிஸ் 63 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதியில் கண்டி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது. அனுபவ சுழல் பந்துவீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தொடரில் மொத்தம் 9 விக்கெட்டுகளை பதம்பார்த்து முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில் 273 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய காலி அணிக்கு உபுல் தரங்க ஆரம்பம் தொட்டு பெறுப்புடன் ஆடி பலம் சேர்த்தார். காலி அணி முதல் விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றபோதும் அந்த அணி மேலும் 26 ஓட்டங்களை பெறுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றம் கண்டது.

எனினும் ஒருமுனையில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிக்காட்டிய தரங்க A நிலை போட்டிகளில் 23ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 121 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் அவர் தொடரில் மொத்தம் 215 ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் காணப்படுகிறார்.

மத்திய வரிசையில் ஷம்மு அஷான் பெற்ற அரைச்சதமும் காலி அணிக்கு கை கொடுத்தது. எனினும் கடைசி நேரத்தில் சற்று நெருக்கடியை சந்தித்தபோது 8ஆவது விக்கெட்டுக்கு வந்த சீக்குகே பிரசன்ன 16 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களை பெற்று காலி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் காலி அணி 47.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

காலி அணி எதிர்வரும் திங்கட்கிழமை (14) தம்புள்ளை அணியுடன் மோதவுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு காலி அணியால் முன்னேற முடியுமாக இருக்கும்.