சங்கக்கார, சச்சினின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்

163
Steve Smith Surpasses Sangakkara
@AFP

குமார் சங்கக்கார, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு 150 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் நிறைவடைய, மூன்றாவதும், கடைசியுமான டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 391 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா (91), கெமருன் கிரீன் (79), அலெக்ஸ் கெரி (67), ஸ்டீவ் ஸ்மித் (59) அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட்டில் முறையே 78 மற்றும் 72 ஓட்டங்களை விளாசினார்.

தற்போது லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்று வரும் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் (59) விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல் ஒன்றை ஸ்மித் நிலைநாட்டினார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள ஸ்மித், 7,993 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் 150 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அதிக ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் இருந்த இலங்கை வீரர் குமார் சங்கக்கார (7,913 ஓட்டங்கள்), இந்திய வீரர்

சச்சின் டெண்டுல்கர் (7,869 ஓட்டங்கள்) ஆகியோரை பின்தள்ளி ஸ்மித் முதலிடம் பிடித்தார்.

இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் வீரேந்திர சேவாக் (7,694 ஓட்டங்கள்), ராகுல் டிராவிட் (7,680 ஓட்டங்கள்) ஆகியோர் உள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<