ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணம் புனித பத்திரிசியார் கல்லூரி வசம்

138
St.Patrick's college vs Jaffna College

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிரான 28 ஆவது ராஜன் கதிர்காமர் சவால் கிண்ண ஒருநாள் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி 69 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணித் தலைவர் எம். சிந்துயன் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். 

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி…

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை மளமளவென்று பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஈ. டிலக்ஷன் ஒரு முனையின் பொறுப்புடன் துடுப்பாடிய நிலையில் மறுமுனையில் விக்கெட்டுகள் பறிபோயின. 

இதனால் புனித பத்திரிசியார் கல்லூரி 64 ஓட்டங்களை பெறுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து சிறப்பாக துடுப்பாடி வந்த டிலக்ஷன் 54 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்க புனித பத்திரிசியார் கல்லூரி நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. 

ஒரு சந்தர்ப்பத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி 77 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது 9 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பீ. காஸ்டோ மற்றும் ரவிந்து பிஸ்மித் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டனர்.

இருவரும் இரு முனைகளிலும் அபாரமாக துடுப்பெடுத்தாடி கடைசிவரை களத்தில் இருந்து 146 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதன்போது பீ. காஸ்டோ 106 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 74 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் ரவிந்து பிஸ்மித் 76 பந்துகளில் 5 பௌண்ரிகள் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை விளாசினார்.

இவர்கள் இருவரதும் துடுப்பாட்டத்தின் மூலம் புனித பத்திரிசியார் கல்லூரி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றது. யாழ்ப்பாணக் கல்லூரி சார்பில் சிறப்பாக பந்துவீசி ஆரம்பத்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பி. பெதன்தோன் மற்றும் விஷ்ணுகாந்த் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெற்றி இலக்கை நெருங்க முடியாமல்போனது. யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மதூஷன் 33 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை தந்தபோதும், மறுமுனையில் வேகமாக துடுப்பாடிய லவகீசன் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த இரு வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.

ராகம கழகத்துக்காக சதம் பெற்ற தேசிய வீரர் ரொஷேன் சில்வா

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரிவு A உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான..

மத்தியவரிசையில் வந்த கௌசீகன் சிறப்பாக துடுப்பாடியபோதும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. கௌசீகன் 63 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த பின் யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் கடைசி எதிர்பார்ப்பு சிதறியது.

இறுதியில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி 45.3 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் டிலக்ஷன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு எஸ். கீர்த்தன் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பத்திரிசிரியார் கல்லூரி – 230/9 (50) – பீ. காஸ்டோ  74, டி. ரவிந்து பிஸ்மித் 70*, ஈ. டிலக்ஷன் 33, பி. பெதன்தோன் 4/27, விஷ்ணு காந்த் 4/32   

யாழ்ப்பாணக் கல்லூரி – 161 (45.3) – கௌசீகன் 40, மதூஷன் 33, டிலக்ஷன் 3/23, எஸ். கீர்த்தன் 2/22

முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 69 ஓட்டங்களால் வெற்றி    

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<