ஆசியக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவானது இந்தியா

2759
SL vs IND

மொத்தமாக 11 போட்டிகளைக் கொண்ட இந்த வருட ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் 6 போட்டிகள் முடிவுற்றுள்ளன.

இத்தொடரின் 7வது போட்டியில் எஞ்சலோ மெதிவ்ஸ்  தலைமையிலான  இலங்கை அணி, மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணியை  நேற்று (01) பங்களாதேஷ் தலைநகர்  டாக்காவில் அமைந்துள்ள மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் எதிர்த்து விளையாடியது. இன்றைய  இந்தத் தீர்மானம் மிக்க போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி  தமது எதிரணியான  இலங்கை அணியை  முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

இதற்கிணங்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய திலகரத்ன டில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி அன்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியைப் போன்றே இலங்கை அணிக்கு எதிர்பார்த்த சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் SL vs INDகொடுக்கவில்லை. முதல் விக்கட்டுக்காக வெறுமனே 6 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில்  கடந்த இரு போட்டிகளிலும் பிரகாசித்த தினேஷ் சந்திமால் 11 பந்துகளில் 4 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அசிஷ் நெஹ்ராவின் பந்தை வேகமாக அடித்து  ஆட  முனைந்த போது மட்டையின் உள் விளிம்பில்  பட்ட பந்து விக்கட் காப்பாளர் டோனியின் கையினுள் செல்ல ஆட்டமிழந்தார். அதன் பின் வேகமாக ஓட்டங்களைப் பெறும் நோக்கோடு களமிறங்கிய செஹான் ஜயசூரியவும் 5 பந்துகளில் 3 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்க இலங்கை அணி 3.4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து தள்ளாடியது. அதன் பின் 3வது விக்கட்டுக்காக திலகரத்ன டில்ஷான் மற்றும் சாமர கபுகெதர ஆகியோரால்  16 ஓட்டங்கள் பகிரப்பட்டது. அதன் பின் டில்ஸ் ஸ்கூப் மன்னன் திலகரத்ன டில்ஷானும் 16 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் 3 பவுண்டரிகள் அடங்கலாக 19 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் சாமர கபுகெதர மற்றும் அதிரடி ஆட்டக்காரர் மிலிந்த சிறிவர்தன ஜோடி வேகாமாக ஓட்டங்களைக் குவித்து 5வது விக்கட்டுக்காக 31 பந்துகளில் 43 ஓட்டங்களைப்  பகிர்ந்தார்கள். அதன் பின் மிலிந்த சிறிவர்தன 17 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ்சர் அடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய தசுன் சானக Free Hit பந்தில் ரன் அவுட் SL vs INDமுறையில் 4 பந்துகளில் 1 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். பின்பு கடைசி  நேரத்தில் துடுப்பெடுத்தாட வந்த சகலதுறை வீரர் திசர பெரேரா 6 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸ்சர் அடங்கலாக 17 ஓட்டங்களைக் குவித்தார். ஆனால் அவரது ஆட்டமிழப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ரசிகர்களுக்கிடையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஸ்டம்பிங் முறையில் திசர பெரேராவிற்கு ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரது மட்டை மடிப்புக்கோட்டுக்குள் (Crease) தான் காணப்பட்டது. ஆனால் நடுவர் அதை 3வது நடுவரிடம் செலுத்தாமல் நேரடியாக திசர பெரேரா ஆட்டமிழந்த வீரர் என்று முடிவு செய்தார். இது ரசிகர்களுக்கிடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின் இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களை 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை சாமர கபுகெதர பெற்றார். இந்திய அணியின் சார்பில் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், ரவிசந்திரன் அஷ்வின் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின் 139 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியினர் தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சீகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கட்டை 16 ஓட்டங்களுக்குள் இழந்தது. அதன் பின் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரைனா மற்றும் விராத் கொஹ்லி ஆகியோர் 3வது விக்கட்டுக்காக 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். அதன் பின் சுரேஷ் ரைனா 25 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அதன் பின் கொஹ்லியொடு இணைந்த யுவ்ராஜ் சிங் 4வது விக்கட்டுக்காக  51 ஓட்டங்களைப் பகிர்ந்து விட்டு 35 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இறுதியில் 4 பந்துகள் மீதமிருக்க இந்திய அணி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் விராத் கொஹ்லி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் சார்பில் பந்துவீச்சில் நுவன் குலசேகர 21 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்ற திசர பெரேரா, ரங்கன ஹேரத் மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கட்டு வீதம் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக விராத் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார். இந்த ஆசியக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாக, நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வெல்ல வேண்டும். அத்தோடு வெள்ளிக்கிழமை நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி பாரிய வெற்றியை பெறவேண்டும். அவ்வாறு வெற்றி பெரும் பட்ச்சத்தில் இலங்கை அணிக்கு இந்தியாவோடு இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.