டயலொக் ரக்பி லீக் இன் 4ஆவது வாரத்தில் CH & FC அணியை எதிர்கொண்ட ஹெவலொக் அணி 48-05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

ஹெவலொக் அணியின் பயிற்றுவிப்பாளரான ஜொனி இப்ராஹிம் தமது அணி வீரர்களான சுதர்ஷன முததந்திரி, ஷாரோ பெர்னாண்டோ மற்றும் அஷான் டார்லிங் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கி இருந்தார்.  மேலும் சென்ற வாரப் போட்டியில் தவறான முறையில் விளையாடியமைக்காக மிதுன் ஹபுகொட இப்போட்டியில் விளையாடத் தகனம் செய்யப்பட்டிருந்தமையால் அவரும் ஹெவலொக் அணி சார்பாக இப்போட்டியில் விளையாடவில்லை.

சீரற்ற காலநிலையால் சீர்குலைந்து காணப்பட்ட மைதானத்திலேயே போட்டி ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பலமிக்க ஹெவலொக் அணியானது தாமதிக்காது 2 ஆவது நிமிடத்திலேயே தமது முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. ஆரம்ப உதையின் பின் பந்தை கைப்பற்றிக்கொண்ட ஹெவலொக் அணியானது பந்தை பரிமாறி கெவின் டிக்சன் மூலமாக முதல் ட்ரையை வைத்தது. இந்த லீக் தொடரில் சிறப்பான உதைக்கும் திறனை வெளிக்காட்டி வரும் துலாஜ் பெரேரா இந்த உதையையும் தவறவிடவில்லை. (CH & FC 00 – ஹெவலொக் 07)

Photos: Havelock SC v CH & FC – Dialog Rugby League 2016/17

Photos of the Havelock SC v CH & FC – Dialog Rugby League 2016/17

போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எதிரணி ட்ரை வைத்தாலும் மொஹமட் ரிஸ்வான் மூலமாக சிறப்பாக செயற்பட்ட CH & FC  அணி பந்தை சிறப்பாக முன் நோக்கி நகர்த்தியது. ஒரு சில கட்டங்களின் பின் எதிரணியில் இடைவெளியைக் கண்ட ரிஸ்வான், கசுன் ஸ்ரீநாத்திற்கு பந்தை பரிமாற்ற, கசுன் ஸ்ரீநாத் 20 மீட்டர்கள் ஓடி CH & FC அணி சார்பாக ட்ரை வைத்தார். ஜனித் சந்திமால் உதையை தவறவிட்டார். (CH & FC 05 – ஹெவலொக் 07)

ஹெவலொக் அணியின் நட்சத்திர வீரர் துலாஜ் பெரேரா, எதிரணியின் பல வீரர்களை கடந்து ஓடிச் சென்று ஹெவலொக் அணி சார்பாக 2 ஆவது ட்ரை வைத்தார். எனினும் அவரால் உதையை வெற்றிகரமாக உதைய முடியவில்லை. (CH & FC 05 – ஹெவலொக் 12)

ஹெவலொக் அணியில் ஹுகர் நிலையில் விளையாடும் பிரசாத் மதுசங்க தனது பலத்தை பயன்படுத்தி சிறிய நேர இடைவெளிக்குள் இரண்டு ட்ரை வைத்து அசத்தினார். இதன் மூலம் இந்த லீக் போட்டியில் அதிக ட்ரை வைத்து முன்னிலையில் இருந்த தனுஷ்க ரஞ்சனை பின் தள்ளி முன்னிலை பெற்றார். மேலும் ஹெவலொக் அணியின் வீரர் விமுக்தி ராகுல அவரது வேகத்தை பயன்படுத்தி ஹெவலொக் அணி சார்பாக மற்றுமொரு ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா 3 உதைகளில், 2 உதைகளை வெற்றிகரமாக கம்பத்தின் நடுவே உதைந்து  4 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CH & FC 05 – ஹெவலொக் 31)

முதற் பாதி : (CH & FC 05 – ஹெவலொக் 31)

இரண்டாம் பாதியை உதைத்து ஆரம்பித்து வைத்த CH & FC அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உதையில் இருந்து பந்தை பெற்ற ஷெனால் டயஸ், CH & FC அணி வீரர்களைக் கடந்து ஓடி சென்றி செனால் டீலகவிற்கு பந்தைப் பரிமாற, செனால் டீலக ஹெவலொக் அணி சார்பாக ட்ரை வைத்தார்.  துலாஜ் பெரேரா கடினமான உதையை தவறவிட்டார். (CH & FC 05 – ஹெவலொக் 36)

அதன் பிறகு பந்தை தனது அருகே வைத்து விளையாட ஆரம்பித்தது ஹெவலொக் அணி. இதனால் லிஸ்டன் பிளேட்னே கம்பங்களின் அடியில் ஹெவலொக் அணி சார்பாக 7ஆவது ட்ரையை வைத்தார். துலாஜ் பெரேரா இந்த இலகுவான உதையை தவறவிடவில்லை. (CH & FC 05 – ஹெவலொக் 43)

இறுதியாக விமுக்தி ராகுல ஹெவலொக் அணி சார்பாக தனது 2ஆவது ட்ரையை வைத்தார். கடினமான உதையை துலாஜ் பெரேரா தவறவிட ஹெவலொக் அணி 48-05 என இலகுவாக போட்டியை வென்றது.

ஹெவலொக்ஸ் அணியானது இப்போட்டியை இலகுவாக வென்றாலும், போட்டியில் செய்த தவறுகளைப் பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் . ஹெவலொக் அணியானது 14 முறை பந்தை கையில் இருந்து தவறவிட்டது  குறிப்பிடத்தக்க விடயமாகும். மோசமான மற்றும் ஈரத்தன்மை கொண்ட மைதானத்தில் பந்து கையை விட்டு நழுவ கூடும், என்றாலும் CH & FC அணி 6 முறை மட்டுமே பந்தை தவறவிட்டது என்பது ஹெவலொக் அணி சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயமாகும். ஹெவலொக் அணி பந்தை பரிமாறி விளையாட முனைந்தமையும், ஆனால் CH & FC அணியானது பந்தை அருகில் வைத்து விளையாடியமையும் இதற்கு காரணமாக அமையலாம்.

முழு நேரம் : CH & FC 05 – ஹெவலொக் 48

இரு அணிகள் சார்பாகப் புள்ளிகளைப் பெற்றோர்

ஹெவலொக் அணி – 48

கெவின் டிக்சன் – 1T

துலாஜ் பெரேரா – 1T, 4C

விமுக்தி ராகுல – 2T

பிரசாத் மதுசங்க – 2T

செனால் டீலக – 1T

CH & FC – 05

கசுன் ஸ்ரீநாத் – 1T