இலங்கை மகளிர் அணிக்கு மீண்டும் ‘வைட்வொஷ்’ தோல்வி

170

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் 108 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை 0-3 என முழுமையாக பறிகொடுத்தது.

[rev_slider LOLC]

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி தொடர்ச்சியாக இரண்டாவது ஒருநாள் தொடரில் வைட்வொஷ் (Whitewash) செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஒக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் தொடரிலும் இலங்கை மகளிர் அணி முழுமையான தோல்வியை சந்தித்தது.

2021ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிகாண் சுற்றாக ICC மகளிர் சம்பியன்சிப் தொடரின் ஓர் அங்கமாகவே இலங்கையில் பாகிஸ்தான் அணியுடனான இந்த ஒருநாள் தொடர் நடைபெற்றது. எனினும் எட்டு அணிகள் பங்கேற்றிருக்கும் இந்த சம்பியன்சிப் தொடரில் இலங்கை மகளிர் அணி தனது 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து எந்த புள்ளியும் இன்றி கடைசி இடத்தில் காணப்படுகிறது. எனினும் இளம் அணியுடன் களமிறங்கியிருக்கும் பாகிஸ்தான் அணி இந்த புள்ளிப்பட்டியலில் 6 போட்டிகளில் நான்கை வென்று 3ஆவது இடத்தில் உள்ளது.

Photos: Sri Lanka vs Pakistan – ICC Women’s Championship – 3rd ODI

Photos of Sri Lanka vs Pakistan – ICC Women’s Championship – 3rd ODI

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இன்று (24) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

ஆரம்ப வீராங்கனை நஹ்தியா கான் சிறப்பாக ஆடி 46 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச் சேர்த்தார். ஆரம்ப வரிசையில் ஜவேரியா கான் (30) மற்றும் அணித்தலைவி மிஸ்பாஹ் (26) ஓட்டங்களை அதிகரிக்க பங்களிப்புச் செய்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்த 215 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமா காஞ்சனா 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோன்று அனுபவ வீராங்கனை ஷஷிகலா சிறிவர்தனவும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்காக ஆரம்ப வீராங்கனைகளான நிபுனி ஹன்சிகா மற்றும் சாமரி பொல்கம்பொல ஆகியோர் 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றனர். எனினும் நஷ்ரா சன்து வீசிய 14ஆவது ஓவரின் முதல் பந்தில் சாமரி 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வீச வந்த சானா மிர் 35 ஓட்டங்களுடன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிபுனி ஹன்சிகாவை ஆட்டமிழக்கச் செய்ததோடு அடுத்து வந்த ரெபெக்கா வென்டோர்டையும் பூஜ்யத்திற்கு வெளியேற்றினார்.

தொடர்ந்து அடுத்த ஓவரை வீச வந்த சன்து இலங்கை அணித்தலைவி சாமரி அத்தபத்துவை ஓட்டம் எடுக்கும் முன்னரே போல்ட் செய்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 49 ஓட்டத்தில் இருந்து மேலும் ஒரு ஓட்டத்தை பெறுவதற்குள் 12 பந்துகள் இடைவெளியில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனால் அடுத்து வந்த வீராங்கனைகளாலும் நின்றுபிடித்து ஆட முடியாமல்போனது. ஷஷிகலா சிறிவர்தன (03) மற்றும் ஹாசினி பெரேரா (08) ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். பிரசாதினி வீரக்கொடி 47 பந்துகளுக்கு முகம்கொடுத்து 15 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை மகளிர் அணியின் ஏழு வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்துடனேயே ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இலங்கை மகளிர் அணியுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

சுற்றுலா பாகிஸ்தான் மகளிர் அணி…

இதன்போது பாகிஸ்தான் மகளிர் அணிக்காக அபாரமாக பந்து வீசிய சானா மிர் தனது 10 ஓவர்களுக்கும் 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். நஷ்ரா சன்து 8.3 ஓவர்களை வீசி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பகிஸ்தான் மகளிர் அணி 2015 ஒக்டோபரில் கராச்சியில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என வென்ற பின் ஒருநாள் தொடர் ஒன்றை கைப்பற்றுவது இது முதல் முறையாகும்.

இலங்கைபாகிஸ்தான் மகளிர் அணிகள் அடுத்து மூன்று T20 போட்டிகளில் ஆடவுள்ளன. இதன் முதல் போட்டி கொழும்பு, SSC மைதானத்தில் மார்ச் 28 ஆம் திகதி நடைபெறும்.