ஆசிய மற்றும் சாப் கால்பந்து போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

1130

இலங்கை தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியும், இலங்கை 23 வயதுக்குட்பட்ட ஆடவர் கால்பந்தாட்ட அணியும் 2019ஆம் ஆண்டின் முதலாவது சர்வதேச கால்பந்து போட்டிகளாக நேபாளம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள தொடர்களில் ஆடவுள்ள நிலையில்,  இதற்கான இலங்கைக் குழாம்கள் அறிவிக்கப்பட்டள்ளன.

Photo Album : AFC U23 Qualifiers & SAFF Women’s Championship 2019 | Press Conference

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் (SAFF) 5ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சாப் கிண்ண தொடர் இன்று (12) முதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை நேபாளத்தின் சஹிட் ரங்கசலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.   

இதன்படி, இம்முறை மகளிருக்கான சாப் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, நேற்றுமுன்தினம் (10) நேபாளம் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இம்முறை நடைபெறவுள்ள சாப் கிண்ண கால்பந்து தொடரில் நடப்புச் சம்பியனான இந்தியா மற்றும் மாலைத்தீவுகள் இடம்பெற்றுள்ள பி குழுவில், இலங்கை அணி இடம்பிடித்துள்ளது. அதேநேரம், குழுவில் போட்டிகளை நடாத்தும் நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பிடித்துள்ளன.   

இவ்விரண்டு குழுக்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகுவதுடன், தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.

இதேநேரம், சாப் சம்பியன்ஷிப் கால்பந்து போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை முன்னெடுத்திருந்த இலங்கை அணி, கடந்த டிசம்பர் மாதம் பஹ்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தேசிய கால்பந்தாட்ட அணியுடன் மூன்று சிநேகபூர்வ போட்டிகளில் விளையாடியிருந்தது.

சாப் சம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகும் இலங்கை மகளிர் அணி

இலங்கை தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி, நேபாளத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி தொடக்கம் …..

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் திலக் அபோன்சுவின் வழிகாட்டலின் கீழ் கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை முன்னெடுத்திருந்த 20 வீராங்கனைகள் இம்முறை சாப் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, இம்முறை சாப் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் அணியின் தலைவியாக எரந்தி குமுதுமாலவும், உப தலைவியாக ருஷானி குணவர்தனவும் செயற்படவுள்ளனர்.

இந்த நிலையில், சாப் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் அண்மையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.  

இதில், சாப் சம்பியன்ஷிப் போட்டிக்கான ஆயத்தம் குறித்து இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் திலக் அபோன்சு கருத்து வெளியிடுகையில்,

இம்முறை போட்டித் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள அணி குறித்து மிகவும் திருப்தியடைகிறேன். நாங்கள் சில மாதங்களாக பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டோம். அதேபோல, ஒருசில சிநேகபூர்வ போட்டிகளிலும் விளையாடினோம். இம்முறை போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதிபெறுவது தான் எமது குறிக்கோளாகும். அதன்படி, மேலும் திட்டங்களை வகுத்து போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  

இதேநேரம், தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, அடுத்த வாரம் பஹ்ரெய்ன் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது.   

AFC 23 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை B குழுவில்

தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ……

எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இந்த தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 44 அணிகள் மேற்கு மற்றும் கிழக்கு என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன.   

இதன் பி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி, பஹ்ரைன், பங்களாதேஷ் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளுடன் மோதவுள்ளது.

இதன்படி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களை தெரிவுசெய்வதற்கான தெரிவுகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டது.  

இதன்மூலம் 32 வீரர்கள் உத்தேச அணிக்காக தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களுக்கான வதிவிட பயிற்சிகள் பெத்தகானவில் உள்ள தேசிய கால்பந்து பயிற்சி நிலையத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட வீரர்களில் யாழ்ப்பாணம் (5), கொழும்பு (7), கிண்ணியா (3), மன்னார் (2), மாவனல்லை (1), அநுராதபுரம் (1), மட்டக்களப்பு (1) மற்றும் காலி (1) உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போதைய தேசிய கால்பந்து அணியில் உள்ள 5 வீரர்கள் இக்குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் வீரர்களும் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில் அணியின் ஆயத்தம் குறித்து தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலி கருத்து வெளியிடுகையில், எமது வீரர்களுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் கிடையாது. ஆனாலும், எமது அணியில் உடல்ரீதியாக வலுப்பெற்ற, திறமையான பல வீரர்கள் உள்ளனர். இவர்களுக்காக குறுகியகால பயிற்சி முகாம்களை நடத்தியிருந்தாலும், இம்முறை போட்டிகளில் எதிரணிக்கு பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். அத்துடன், இந்த அனுபவம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவிலும் அந்த வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்” என அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்காக தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் 32 பேரிலிருந்து, குறித்த தொடரில் பங்குபற்றவுள்ள இறுதி குழாம், அடுத்த வாரத்துக்குள் பெயரிடப்படும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<