2022ஆம் ஆண்டின் முதல் சவாலினை சமாளிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி??

721
Sri Lanka vs Zimbabwe ODI Series 2022

2022ஆம் ஆண்டானது ஆரம்பித்திருக்கின்றது. இந்த ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியிலும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாற்றங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் சவாலாக ஜிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைகின்றது. 

அடுத்த ஆண்டில் (2023) நடைபெறவுள்ள ஒருநாள்  உலகக் கிண்ணத் தொடருக்குரிய நேரடி அணிகளை தெரிவு செய்யும், ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்குள் வருகின்ற ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இந்த ஞாயிற்றுக்கிழமை (16) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

ஜிம்பாப்வே – இலங்கை ஒருநாள் போட்டிகள் வரலாறு

1992ஆம் ஆண்டில் இருந்து இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றன. அன்றிலிருந்து இன்று வரை இரண்டு அணிகளும் 57 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருப்பதோடு குறித்த போட்டிகளில் இலங்கை 44 போட்டிகளில் வெற்றியினையும், ஜிம்பாப்வே 11 போட்டிகளில் வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது. இதேவேளை இரண்டு போட்டிகளில் வெற்றி தோல்வி ஏதுமின்றிய முடிவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

>> ஓய்வு அறிவிப்பை மீளப் பெற்றார் பானுக்க ராஜபக்ஷ

கடந்த காலத்தின் தரவுகள் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆதிக்கம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் முழுமையாக இருந்ததது என்பதனைக் காட்டுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணி 

2021ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்ற இறக்கங்களை காட்டியிருந்த ஒரு ஆண்டாக இருந்தது என்பது திண்ணம். ஏமாற்றங்கள் சில இருந்த போதும், 2015ஆம் ஆண்டின் பின்னர் 2021ஆம் ஆண்டில் எதிர்பாராத வளர்ச்சி ஒன்றினையும் இலங்கை கிரிக்கெட் அணி காட்டியிருந்தது. எனவே, புதிதாகப் பிறந்திருக்கும் ஆண்டு இந்த வளர்ச்சியின் விருத்தியினைக் காட்டப்போகின்ற ஒரு ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் முதல் தொடராக ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டிகள் அமைகின்றன. ஆனால், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஜிம்பாப்வே அணியுடனான தொடர் மூலம் 2022ஆம் ஆண்டினை ஆரம்பிக்க முடியாத நிலையும் உருவாகியிருக்கின்றது. 

>> ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

குறிப்பாக அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹஸரங்க, குசல் ஜனித் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ மற்றும் தனன்ஞய டி சில்வா போன்ற வீரர்களுக்கு ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் விளையாடுவது இயலாத விடயமாக மாறியிருக்கின்றது. 

முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி இளம் வீரர்களான கமில் மிஷார (துடுப்பாட்டவீரர்), ஜனித் லியனகே (சகலதுறைவீரர்) மற்றும் கலன பெரேரா (பந்துவீச்சாளர்) போன்ற வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கிய போதும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு பல்வேறு காரணங்களுக்காக இல்லாமல் போயிருக்கின்றது. 

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு ஒரு புரட்சிக்கு காரணமாக இருந்த போட்டித்தடையினைப் பெற்ற குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகிய வீரர்களும் தடை நீங்கிய பின்னர் இலங்கை அணியில் மீண்டிருக்கின்றனர். இவர்கள் தவிர அனுபவ வீரரான  தினேஷ் சந்திமாலுக்கும் இலங்கை ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

எனவே இலங்கை ஒருநாள் அணியின் தலைவரான தசுன் ஷானக்கவிற்கு எந்த வீரர்களை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மோதல்களின் போது முதல் பதினொருவர் அணியில் இணைப்பது என்பது ஒரு சவாலாகவே காணப்படும். இதேநேரம் இந்த ஜிம்பாப்வே தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியானது தற்காலிக பயிற்சியாளரான சம்பக்க ராமநாயக்க மூலம் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

>> கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிடும் கமில் மிஷார

மறுமுனையில் ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகள் அனைத்திலும் கட்டாய வெற்றியினைப் பெற வேண்டிய நிலையிலும் இலங்கை கிரிக்கெட் அணி காணப்படுகின்றது. ஏனெனில், தற்போது ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்கான புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்தில் காணப்படும் இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளில் வெற்றி பெறுவதனால் 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திற்குரிய வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ள முடியும். 

இலங்கை குழாம்

தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக்க/நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, ஜெப்ரி வன்டர்செய், நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மன்த சமீர, சாமிக்க குணசேகர, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், சிரான் பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ்

ஜிம்பாப்வே அணி 

உண்மையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இறுதியாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததனை இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் எவருக்கும் இலகுவில் மறந்துவிட முடியாது. கடந்த 2017ஆம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அப்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரினை கைப்பற்றி வரலாறு படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் வைத்து ஒருநாள் தொடர் ஒன்றினை ஜிம்பாப்வே கைப்பற்றியது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாரிய வடுவொன்றினை ஏற்படுத்தியிருந்ததோடு, மீண்டும் அதே மாதிரியான வடுவொன்றினை ஏற்படுத்தும் ஆளுமை கொண்ட வீரர்களோடு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

அண்மைய போட்டிகளை நோக்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போன்ற பலமிக்க கிரிக்கெட் அணிகளுக்கு அதிர்ச்சியளித்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. அதோடு அவ்வணியிலும் பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, நடைபெறப்போகும் ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே அணி இலங்கை அணிக்கு சவால் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

கிரைக் ஈர்வின் தலைமையில் இலங்கையை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே குழாத்தில் இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் துடுப்பாட்டவீரர்களாக இருக்கும் தகுத்ஸ்வனாஷே கைதானோ மற்றும் கிளைட் மடாண்டே ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு பலம் தரும் முன்னணி வீரர்களாக இருக்கின்றனர்.

மறுமுனையில் சிக்கந்தர் ரஷா, சோன் வில்லியம்ஸ் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு பெறுமதி சேரக்கின்றனர்.

>> வெற்றியுடன் இளையோர் உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்த இலங்கை

இதேவேளை வேகப்பந்துவீச்சாளர் ப்ளஸ்ஸிங் முசரபனியின் தலைமையில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

ஜிம்பாப்வே குழாம்

கிரைக் ஈர்வின் (தலைவர்),  பர்ல் ரயன், சகப்வா  ரெஜிஸ், டெண்டாய் சதாரா, ஜாங்வே லுக், கைடானோ டகுட்ஸ்வானாஷே, கிளைட் மடாண்டே, மெதெவர் வெஸ்லி, வெலிங்டன் மஷகட்ஷா, டினோ முடோம்போட்ஸி, ப்ளஸ்ஸிங் முசரபானி, என்கிரவா ரிச்சட், சிகண்டர் ரஷா,  சோன் வில்லியம்ஸ்

தொடர் அட்டவணை

  • ஜனவரி 16 – முதல் ஒருநாள் போட்டி – கண்டி
  • ஜனவரி 18 – இரண்டாவது ஒருநாள் போட்டி – கண்டி
  • ஜனவரி 21 – மூன்றாவது ஒருநாள் போட்டி – கண்டி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<