மழையினால் கைவிடப்பட்ட இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி

1446
CRICKET-ZIM-SRI

இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கு கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியான இன்றைய ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியை சமநிலையில் நிறைவு செய்த ஜிம்பாப்வே அணி, தொடரில் நிலைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமான போட்டியாகக் கருதப்பட்ட இன்றைய இலங்கை அணியுடனான போட்டியை எதிர்கொண்டது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம் கிரிமர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். ஆரம்பத்திலேயே மழை தூறல் இருந்ததன் காரணமாக போட்டி ஏழு நிமிடங்கள் தாமதமாகவே ஆரம்பமாகியது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, மழை பெய்ததனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

கடும் மழையின் பின்னரும் மைதானம் உகந்த நிலையில் காணப்படாமையினால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

அணி போட்டி வெற்றி தோல்வி சமநிலை முடிவற்ற போட்டி புள்ளிகள் ஓட்ட விகிதம்
மேற்கிந்திய தீவுகள் 2 1 1 7 +0.620
இலங்கை 3 1 1 1 7 +0.485
ஜிம்பாப்வே 3 0 1 1 1 4 -1.420

போட்டி கைவிடப்பட்டமை குறித்து போட்டி நடுவர் மைக்கல் கௌப் கூறுகையில், ”மழையின் பின்னர் நாங்கள் மூன்று மணித்தியாலயங்கள் பொறுமையோடு காத்திருந்தோம். சில இடங்களில் வழுக்கும் தன்மை காணப்பட்டது. ஓவர்களை குறைத்து போட்டியை ஆரம்பித்திருந்தாலும் மைதானம் போட்டிக்கு உகந்த நிலையில் காணப்படவில்லை” என்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெறும் பட்சத்தில், அவ்வணிக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.