குசல் பெரேராவின் இரண்டாவது அரைச்சதத்துடன் முடிவடைந்த பயிற்சிப் போட்டி

1572

cஇலங்கை கிரிக்கெட் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையில் நடைபெற்று வந்த மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி சமநிலையில் முடிந்திருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் இந்த மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ட்ரினிடாட் நகரின் பிரேன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த புதன்கிழமை (30) ஆரம்பமாகியிருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தினேஷ் சந்திமாலின் அபார சதத்தின் உதவியோடு முதல் இன்னிங்சுக்காக 428 ஓட்டங்களினைக் குவித்த பின்னர், பதிலுக்கு தமது முதல் இன்னிங்சில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பதினொருவர் அணி கெய்ரோன் பவல், ஜோன் கெம்பல் ஆகியோரின் அரைச்சதங்களுடன் 60 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது இரண்டாம் நாளுக்கான ஆட்டம் கடந்த வியாழக்கிழமை (31) நிறைவுக்கு வந்திருந்தது. களத்தில் ரஹ்கீம் கொன்வால் 26 ஓட்டங்களுடனும், ஜொமேல் வொர்ரிகன் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

பயிற்சிப் போட்டியில் சகலதுறைகளிலும் திறமையினை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்

நேற்று (01) தொடர்ந்த போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளில், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை முன்னெடுத்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர்  பதினொருவர் அணி 77 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 272 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணித் தரப்பு சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹ்கீம் கொன்வால் பெறுமதிமிக்க அரைச்சதம் ஒன்றினை விளாசி மொத்தமாக 54 ஓட்டங்களினைக் குவித்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக அகில தனஞ்சய, லஹிரு குமார மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர், 134 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை அணி ஆரம்பித்தது. இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்திருந்த குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகிய இருவரும் அரைச்சதம் விளாசினர்.

இதில் முதலாவதாக அரைச்சதம் பெற்ற குசல் பெரேரா, 7 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக மொத்தமாக 50 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டத்தில் இருந்து ஓய்வினை எடுத்துக் கொண்டிருந்தார். இது குசல் பெரேரா இந்தப் பயிற்சிப் போட்டியில் இரண்டாவது அரைச்சதமாகவும் அமைந்திருந்தது. இதற்கு முன்னர் இப்போட்டியின் முதல் இன்னிங்சுக்காக பெரேரா 65 ஓட்டங்களினை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் முதல் இன்னிங்சில் ஓட்டம் எதனையும் பெறத் தவறிய குசல் மெண்டிஸ் இம்முறை ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். இவர்களின் துடுப்பாட்டத்தின் துணையோடு இலங்கை அணி 33 ஓவர்களுக்கு 135 ஓட்டங்களினை குவித்திருந்த போது, மூன்றாம் நாளுக்கான ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டியும் சமநிலை அடைந்தது. குசல் பெரேராவின் ஓய்வுக்குப் பிறகு துடுப்பாட களம்நுழைந்த ரோஷென் சில்வா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

ஒரு நாள் தரவரிசையில் இணைந்து கொள்ளும் நான்கு புதிய கிரிக்கெட் அணிகள்

இந்தப் பயிற்சிப் போட்டி சமநிலை அடைந்திருந்தாலும் மூன்று நாட்களிலும் இலங்கை அணியே ஆதிக்கம் செலுத்தியதை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் இலங்கையின் இளம் அணிக்கு இந்த பயிற்சிப் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நல்ல அனுபவமாகவும் அமைகின்றது.

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி வரும், வியாழக்கிழமை (06) போர்ட் ஒப் ஸ்பெயின் நகரில் ஆரம்பமாகின்றது.

ஸ்கோர் விபரம்

முடிவு – போட்டி சமநிலையில் முடிந்தது.