சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று (23) பர்படோஸில் ஆரம்பமாகியிருந்தது. ஆட்டத்தின் முதல் நாளில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்தன.
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் ஜெப்ரி வன்டர்செய்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம்…
இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு பந்தின் தன்மையை மாற்றல் குற்றச்சாட்டில் இந்த டெஸ்ட்டில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட காரணத்தினால் இலங்கை அணியினை வழிநடாத்தும் பொறுப்பு அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, லக்மால் இலங்கையின் டெஸ்ட் அணியினை வழிநடாத்தும் 16 ஆவது தலைவராக மாறியிருந்தார்.
அதோடு, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் 1-0 என முன்னிலை பெற்றிருப்பதால், தொடரினை பறிகொடுக்காமல் இருக்க, இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது. முன்வரிசை துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க தினேஷ் சந்திமாலின் இடத்தினை அணியில் எடுக்க, கடந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் சாய்த்த அகில தனன்ஞயவுக்குப் பதிலாக சகலதுறை வீரரான தில்ருவான் பெரேரா அழைக்கப்பட்டிருந்தார்.
மறுமுனையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி எந்தவித மாற்றங்களுமின்றி அவர்களுக்கு சாதகமான முடிவு ஒன்றினை எதிர்பார்த்து இப்போட்டியில் களமிறங்கியிருந்தது.
தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை டெவோன் ஸ்மித் மற்றும் கிரைக் ப்ராத்வைட் ஆகியோருடன் தொடங்கியது.
சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு; அணித்தலைவராக சுரங்க லக்மால்
பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில்…
போட்டியின் முதல் ஓவரினை வீசிய இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவரான சுரங்க லக்மால், முதல் ஓவரின் இறுதிப் பந்தில் மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப வீரர்களில் ஒருவரான டெவோன் ஸ்மித்தின் விக்கெட்டினை கைப்பற்றி அட்டகாசமான ஆரம்பத்தினை தனது தரப்புக்கு வழங்கினார். டெவோன் ஸ்மித் வெறும் இரண்டு ஓட்டங்களுடன், மூன்றாவது ஸ்லிப் களத்தடுப்பாளராக இருந்த தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இருந்த கிரைக் ப்ராத்வைட் விக்கெட்டினையும், பொயின்ட் திசையில் இருந்து தனுஷ்க குணத்திலக்க பாய்ந்து எடுத்த அட்டகாசமான பிடியெடுப்புடன் லக்மால் கைப்பற்றி மீண்டும் அசத்தினார். ப்ராத்வைட்டும் தனது சகாவான டெவோன் ஸ்மித் போன்று இரண்டு ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு நடந்தார்.
இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணியினர் 8 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவர்களின் மூன்றாவது விக்கெட் பறிபோனது. மூன்றாவது விக்கெட்டாக புதிய வீரராக களம்நுழைந்திருந்த கெய்ரொன் பொவேல் லஹிரு குமாரவின் வேகத்திற்கு இரையாகியிருந்தார். களத்தில் புதிய துடுப்பாட்ட வீரர்களாக சாய் ஹோப் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் நின்றிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே சரிவுகளை சந்தித்தது இயற்கைக்கு கவலை தந்திருந்ததோ என்னவோ? ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரையில் ஆட்டத்தின் முதலாம் இடைவெளி மழையினால் தடைப்பட்டிருந்தது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், தனது முதல் ஓவரினை வீசிய கசுன் ராஜித 14 ஓட்டங்களுடன் களத்தில் இருந்த ரொஸ்டன் சேஸினை போல்ட் செய்தார். இதனால், ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
தொடர்ந்த ஆட்டத்தில் முதல் நாளின் தேநீர் இடைவேளைவரை மேற்கிந்திய தீவுகள் அணி மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்கவில்லை. தேநீர் இடைவேளையின் பின்னர் மிகவும் பொறுமையாக ஆடிக் கொண்டிருந்த சாய் ஹோப்பின் விக்கெட்டினையும் கசுன் ராஜித 11 ஓட்டங்களுடன் பதம் பார்த்தார்.
இதன்பின்னர், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் சேன் டோவ்ரிச் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மிகவும் பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்க அடித்தளம் ஒன்றை அமைத்தனர். இப்படியான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்த இடைவெளியில் முதல் நாளுக்கான இரவுப் போசனத்தினையும் இரண்டு அணி வீரர்களும் எடுத்துக் கொண்டனர்.
மழையினால் இம்முறை இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த ஆட்டம் நிலைமைகள் சீராகிய பின்னர் தொடர்ந்தது. இதன் போது சேன் டோவ்ரிச் தனது 7 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை தாண்டினார். மறுமுனையில் ஹோல்டரும் பெறுமதிமிக்க ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சேர்த்து தனது தரப்பினை மிகவும் மோசமான சரிவு ஒன்றில் இருந்து மீட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்திமால், சந்திக்க, அசங்க
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்…
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக இரண்டு வீரர்களும் 79 ஓட்டங்களை சேர்த்த நிலையில் மழையின் குறுக்கீடு இன்னுமொரு தடவை ஆட்டத்தில் காணப்பட்டது. இந்த முறை நீண்ட நேரமாகியும் நிலைமை சரியாகாத காரணத்தினால், போட்டியின் நடுவர்கள் முதலாம் நாளுக்கான ஆட்டம் முடிவடைந்ததாக அறிவித்தனர்.
இதன்படி ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில், மேற்கிந்திய தீவுகள் அணி 46.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 132 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக போராடிவரும் ஷேன் டோவ்ரிச் 60 ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 33 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக முதல் நாளில் கைப்பற்றப்பட்ட அனைத்து விக்கெட்டுக்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொந்தமாகவே ஆகியிருந்தது. இதில் அணித்தலைவர் சுரங்க லக்மால் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும், லஹிரு குமார ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
ஸ்கோர் விபரம்
போட்டியின் இரண்டாம் நாள் இன்று (இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு) தொடரும்




















