மூன்று நாட்களுக்குள்ளேயே தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியினை முடித்த இலங்கை

1349

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையில் நடைபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மூன்று நாட்களுக்குள்ளேயே முடிவடைந்திருப்பதுடன், இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியினை 278 ஓட்டங்களால் படுதோல்வியடையச் செய்து தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (13) நடைபெற்றிருந்தது.

நேற்றைய நாளில், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (287) அடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

தென்னாபிரிக்கா அணியினை இவ்வாறு குறைவான ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த உதவிய இலங்கையின் சுழல் வீரர்களான தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களையும் சாய்க்க இப்போட்டியில் இலங்கை அணியின் தலைவரான சுரங்க லக்மாலும் தனது வேகப்பந்து வீச்சு மூலம் 3 விக்கெட்டுக்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர், 161 ஓட்டங்கள் என்கிற முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணியினர் 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதில் இலங்கை அணிக்காக போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் (158*) கடந்த திமுத் கருணாரத்ன  இரண்டாம் இன்னிங்ஸ்காக அரைச்சதம் (60) ஒன்றினை தாண்டி ஆட்டமிழக்க களத்தில் அஞ்சலோ மெதிவ்ஸ் 14 ஓட்டங்களுடனும் ரொஷேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

வெற்றியை நோக்கி முன்னேறுகின்றது இலங்கை அணி

சுழல் வீரர்களின் சாகசம் மற்றும் திமுத் கருணாரத்னவின் சிறப்பாட்டம் என்பவற்றுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் …

இன்று போட்டியின் மூன்றாம் நாளில் தென்னாபிரிக்காவினை விட 272 ஓட்டங்களால் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை தொடர்ந்தது. எனினும், 10 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ரொஷேன் சில்வா மேலும் 3 ஓட்டங்களை பெற்று துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

இந்நிலையில் அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வல்ல (09) ககிஸோ றபாடா வீசிய 45 ஆவது ஓவரில் வெளியேற அதே ஓவரில் நிதானமாக துடுப்பாடி வந்த அஞ்சலோ மெதிவ்ஸூம் போல்டானார். அவர் 86 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார்.

பின்வரிசையில் தில்ருவான் பெரேரா 2 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு, ரங்கன ஹேரத் டக் அவுட் ஆனார். என்றாலும் கடைசி விக்கெட்டுக்காக சுரங்க லக்மால் சற்று வேகமாகவும் சிறப்பாகவும் துடுப்பெடுத்தாடி வலுவான முன்னிலை பெற இலங்கை அணிக்கு தேவைப்படும் ஓட்டங்களை அதிகரித்தார்.

இதன்போது அவர் லக்ஷான் சந்தகனுடன் இணைந்து 27 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றார். 46 பந்துகளுக்கு முகம்கெடுத்த அவர் 5 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றார். எனினும் மறுமுனையில் ஆடிய சந்தகன் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதன்படி இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த போதும் அந்த அணியால் தென்னாபிரக்காவுக்கு 352 ஓட்டங்கள் என்கிற சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் வீரர் கேஷவ் மஹராஜ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு வேகப்புயலான பாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் டேல் ஸ்டெயின் இலங்கையின் இரண்டாம் இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியபோது தென்னாபிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ஷோன் பொலக்கின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தற்போது 421 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

நான் ஒருபோதும் தூஸ்ரா பந்துவீசமாட்டேன் – தில்ருவன் பெரேரா

காலி டெஸ்ட் போட்டியின் முதலிரண்டு நாட்களிலும் இரு அணிகளினதும் முதல் இன்னிங்சுகள் நிறைவுக்கு வந்தாலும், இன்னும் …

தென்னாபிரிக்க அணி 350 இற்கும் அதிக ஓட்ட வெற்றி இலக்கை டெஸ்ட் வரலாற்றில் ஒரே ஒரு தடவையே எட்டியுள்ளது. அது சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 414 ஓட்டங்களையும் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியதாகும்.

எனவே, 352 ஓட்டங்கள் என்கிற சவாலான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை கவனமான முறையில் எய்டன் மார்க்ரம், டீன் எல்கார் ஆகியோருடன் ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி மூன்றாவது நாள் ஆட்டம் கல் போச இடைவேளைக்காக நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பின்றி 3 ஓவர்களில் 5 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பகல் போசனத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை சுழல் ஜோடிகளான ரங்கன ஹேரத் – தில்ருவான் பெரேரா ஆகியோரினால் தென்னாபிரிக்க அணியின் அஸ்தமனம் ஆரம்பமானது. தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் அவர்களின் முதல் விக்கெட்டாக நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரரான டீன் எல்கார் தில்ருவானின் பந்துவீச்சுக்கு வித்தியாசமான முயற்சி ஒன்றினை மேற்கொள்ளப் போய் முதல் நிரோஷன் திக்வெல்லவினால் ஸ்டம்ப் செய்யப்பட்டார். இதனால், 4 ஓட்டங்களுடன் மாத்திரம் எல்காரின் இன்னிங்ஸ் முடிந்தது.

எல்காரினை அடுத்து களம் வந்த ஹஷிம் அம்லாவும் வெறும் இரண்டு பந்துகளினை மாத்திரம் தாக்குப்பிடித்து தில்ருவானின் சுழலில் ஓட்டம் எதனையும் பெறாமல் மைதானத்தினை விட்டு நகர்ந்தார்.

தொடர்ச்சியாக களம் நுழைந்த டெம்பா பெவுமா, அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் ஆகியோருக்கும் இலங்கையின் சுழல் வீரர்கள் புதிராகவே காணப்பட அவர்கள் இரண்டு ஓட்டங்களைக் கூட தாண்ட முடியாமல் ஓய்வறை நடந்தனர்.

இவர்களை அடுத்து தென்னாபிரிக்க அணியின் இறுதி நம்பிக்கைகளாக காணப்பட்ட எய்டன் மார்க்ரம், விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் ஆகியோரது விக்கெட்டுக்களும் முறையே 19,10 ஆகிய ஓட்டங்களுடன் சரிக்கப்பட்டது.

இப்படியாக தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் அவ்வணி ஒரு கட்டத்தில் 36 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பரிதாப நிலையை அடைந்தது. எனினும், மீண்டும் கருணை காட்டாத இலங்கையின் சுழல் வீரர்கள் அவ்வணியின் எஞ்சிய நான்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி 73 ஓட்டங்களோடு அவர்களின் இரண்டாம் இன்னிங்ஸினை முடிவுக்கு கொண்டு வந்து மிகப்பெரிய வெற்றி ஒன்றுக்கு சொந்தக்காரர்களாக மாறினர்.

தென்னாபிரிக்க அணி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் குவித்த 126 ஓட்டங்களே அவர்கள் இலங்கை அணிக்கெதிராக இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற குறைவான ஓட்டங்களாக இருந்தது. ஆனால், அவர்கள் இரண்டாம் இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுடன் சுருண்டு ஒரு போட்டியிலேயே இரண்டு குறைவான ஓட்டங்களை தற்போது பதிவு செய்திருக்கின்றனர். அதோடு இந்த 73 ஓட்டங்கள் அவர்கள் ஆசிய நாடு ஒன்றில் டெஸ்ட் போட்டியொன்றில் பெற்ற மிகக் குறைவான இன்னிங்ஸ் மொத்த ஓட்டங்களாகவும் இருந்தது.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் அதிகபட்சமான ஓட்டங்களை பெற்ற வீரராக 22 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காது நின்ற வெர்னோன் பிலாந்தர் மாறியிருந்தார்.

இதேவேளை, இலங்கை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பு வழங்கிய தில்ருவான் பெரேரா வெறும் 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டியொன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார். பெரேராவோடு ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றி அவர்களும்  அணியின் வெற்றிக்கு தங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்களோடு இப்போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்த ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மொத்தமாக 423 விக்கெட்டுக்களுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது. தமது விருந்தினர்களை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்கடித்திருக்கும் இலங்கை, கொழும்பில் நடைபெறவுள்ள தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில்  வரும் வெள்ளிக்கிழமை (20) மோதுகின்றது.

ஸ்கோர் சுருக்கம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<