அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையில் நடைபெற்று முடிந்த T-20 போட்டியில், தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் பிரதமர் பதினொருவர் அணியை வீழ்த்தி வெற்றியினை சுவீகரித்துள்ளது.

தென்னாபிரிக்காவுடனான சுற்றுப் பயணத்தினை நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி, அவுஸ்ரேலியாவுடன் இடம்பெற இருக்கும் மூன்று T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட கடந்த வாரம் அவுஸ்திரேலியா பயணமாகியிருந்தது.

T-20 தொடரிற்கு முன்னதாக அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணியுடன் இலங்கை அணி மோதிக்கொண்ட இந்தப் போட்டி, கென்பரா நகரின் மனுக்கா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை T-20 குழாத்தின் புதிய தலைவர் உபுல் தரங்க முதலில் பிரதமர் அணியினரை துடுப்பாடப் பணித்தார்.

தோல்வியிலிருந்து தப்பிக் கொண்ட இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி

மொரட்டுவை டைரோன் பெர்னாந்து மைதானத்தில் இன்று நிறைவுற்ற, இலங்கை ஜனாதிபதி…

இதனடிப்படையில், துடுப்பாட களமிறங்கிய அவுஸ்திரேலிய பிரதமர் அணியின் முதல் விக்கெட், போட்டியின் முதல் ஓவரிலேயே இலங்கை அணிக்கு நீண்ட காலத்தின் பின்னர் திரும்பியிருக்கும் லசித் மாலிங்கவின் பந்து வீச்சில் வேட்டையாடப்பட்டது. இதன்போது, போல்ட் செய்யப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டிஆர்சி சோர்ட் ஓட்டம் எதனையும் பெறாமல் ஓய்வறை திரும்பினார்.

அடுத்த ஓவரில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோ பேர்ன்சும் 2 ஓட்டங்களுடன்,   இலங்கை அணியில் புதிதாக இணைக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் விக்கும் சஞ்சயவினால் போல்ட் செய்யப்பட, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இழந்த பிரதமர் அணி போட்டியின் ஆரம்பத்திலேயே நெருக்கடிக்கு உள்ளாகியது.

இதனால், களத்தில் நின்ற புதிய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டக் குவிப்பில்  தமது முழுக் கவனத்தினையும் செலுத்தினர். மூன்றாவது துடுப்பாட்ட வீரராக வந்திருந்த ஷேம் ஹீஸ்லெட் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 பந்துகளிற்கு 58 ஓட்டங்களினை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

இவரின் விக்கெட்டினை தொடர்ந்து, மத்திய வரிசையில் களமிறங்கிய வலது கை துடுப்பாட்ட வீரரான அடம் வொக்ஸ் அதிரடியாய் ஆடி ஆட்டமிழக்காமல் பெற்ற அரைச் சதத்துடன் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி, 20  ஓவர்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.

இறுதி தருணத்தில் சிறப்பாக செயற்பட்ட பிரதமர் அணியின் தலைவர் வொக்ஸ், மொத்தமாக 31 பந்துகளிற்கு ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசி 54 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்ட விக்கும் சஞ்சய 26 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை அபகரித்ததுடன், லசித் மாலிங்க மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் 170 என்ற வெற்றியிலக்கினை 20 ஓவர்களில் அடைவதற்கு, நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க ஆகியோருடன் மைதானத்திற்கு நுழைந்த இலங்கை அணி, 17.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களினைப் பெற்று வெற்றி இலக்கினைத் தொட்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில், ஆரம்பம் முதலே பந்துகளை தனது வியக்கத்தக்க ‘டிக் ஸ்கூப்’ மூலம் எல்லைகளுக்கு விரட்டிய இடது கை துடுப்பாட்ட வீரர் திக்வெல்ல 26 பந்துகளிற்கு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களினைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

மறுமுனையில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்கவும் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளிற்கு 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உள்ளடங்களாக 47 ஓட்டங்களினை விளாசி, அணியின் வெற்றிப் பாதையை மேலும் வலுப்படுத்தினார். இப்போட்டியில் இலங்கை அணிக்கு நான்கு வருடங்களின் பின்னர் திரும்பியிருக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரரான தில்ஷான் முனவீர பெறுமதி மிக்க 32 ஓட்டங்களினை வெறும் 19 பந்துகளில் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அணியின் பந்து வீச்சில், டிஆர்சி சோர்ட் 2 விக்கெட்டுகளை  சாய்த்ததுடன், டேனியல் வொரேல் மற்றும் அர்ஜூன் நாயர் ஆகியோரும் ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி: 169/6 (20) – சேம் ஹீஸ்லெட் 58(37), அடம் வொக்ஸ் 54(31)*, விக்கும் சஞ்சய 26/3 (4), லசித் மலிங்க 26/1 (4), இசுரு உதான 50/1(4)

இலங்கை அணி: 170/5 (17.1) நிரோஷன் திக்வெல்ல 47(26), உபுல் தரங்க 47(33), தில்ஷான் முனவீர 32(19), மிலிந்த சிறிவர்த்தன 25(19), டிஆர்சி சோர்ட் 19/2(3)

போட்டி முடிவுஇலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி