பபுவா நியூ கினியா அணியுடன் இலகு வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை

3914

இலங்கை மற்றும் பபுவா நியூ கினியா ஆகியவை இடையே நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 39 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

முன்னதாக அபுதாபி நகரில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

பயிற்சிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க, 58 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், அரைச்சதம் விளாசிய அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பபுவா நியூ கினியா அணியின் பந்துவீச்சு சார்பில் கபுவா மொரியா 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பபுவா நியூ கினியா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

T20 உலகக் கிண்ண இந்திய அணியில் மாற்றம்

பபவுா நியூ கினியா அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் அணித்தலைவர் அஸ்ஸாத் வாலா 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் பெற்று அணிக்காக போராடிய போதும் அவரின் துடுப்பாட்டம் வீணாகியது.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் வெற்றி பெற்ற வண்ணம், T20 உலகக் கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி நமீபியாவினை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 162/5 (20) பெதும் நிஸ்ஸங்க 76, கபுவா மொரியா 4/25

பபுவா நியூ கினியா – 123/7 (20) அஸ்ஸாட் வாலா 51, வனிது ஹஸரங்க 2/16, துஷ்மந்த சமீர 2/21

முடிவு – இலங்கை அணி 39 ஓட்டங்களால் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…