உலகக் கிண்ணம், T-20 உலக சம்பியன்ஷிப், சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய ஐ.சி.சியின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர்கள் மூன்றினையும் இதுவரையில் நான்கு நாடுகளே வெற்றி கொண்டுள்ளன. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களுக்கே சிம்மசொப்பனமான இந்த மூன்று வகை தொடர்களின் கிண்ணங்களையும் கைப்பற்றிய நான்கு நாடுகளில் ஒன்றான இலங்கை, “அடுத்த உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறுமா? “என்கிற வினாவோடு அண்மைய நாட்களில் இக்கட்டான நிலையொன்றில் இருந்தது.
எனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள் இன்றைய நாட்களில் தடைகளை எல்லாம் உடைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இலங்கை அணியும் எதிர்காலத்தில் மீண்டுவர முடியும் என்பதற்கு சிறந்த சான்றாகவே உள்ளது.
புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி
பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு …
அந்த வகையில், இலங்கை வீரர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுடான தொடர் தங்களது அணியினை பழைய நிலைக்கு கொண்டுவரவும், அணியின் கௌரவத்தினை மீட்டுக்கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கடல் கடந்த இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (28) அபுதாபியில் ஆரம்பமாகின்றது.
எனவே, இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் பற்றிய ஒரு முன்னோட்டத்தினை நாம் இக்கட்டுரையின் மூலம் பார்க்கவுள்ளோம்.
இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி வரலாறு
தமக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த 1982ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணி, பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றது. இரண்டு அணிகளும் இதுவரையில் 51 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடனேயே அதிக தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை விஷேட அம்சமாகும்.
இரண்டு அணிகளும் மோதிய போட்டிகளில் 19 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதுடன் 14 போட்டிகளில் இலங்கை வெற்றியாளராக தனது நாமத்தை பதித்துள்ளது. 18 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றுள்ளன.
அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்
2015 ஆம் ஆண்டு இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு தொடரின் போது இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக சந்தித்துக்கொண்டன. மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரினை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியிருந்தது.
இலங்கை அணியின் அண்மைக்காலம் குறித்து குறிப்பிடும்பொழுது, இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வைட் வொஷ் தோல்வியை சந்தித்தது.
எனினும் பின்னர் இடம்பெற்ற ஜீம்பாப்வே அணியுடனான ஒரே ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியை சுவைத்தது.
இந்தியாவின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் இலங்கை தோல்வியினை தழுவி இருப்பினும், அத்தொடர் தோல்விகள் தமது அணியின் வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்க உதவியிருந்ததாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளர் நிக் போத்தஸ் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
டெஸ்ட் தரவரிசையில் 7 ஆம் இடத்தில் காணப்படும் இலங்கை அணியினால் இந்த வருடத்தில் பலம் குறைந்த அணிகளான ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக மாத்திரமே வெற்றிகளை பதிவு செய்ய முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு…
எனினும், இலங்கை வீரர்கள் கடந்த வருடத்தில் சவால் மிக்க அவுஸ்திரேலிய அணியினை தமது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்திருந்தனர். அந்த தொடரில் கிடைத்த அனுபவங்களையும் தமது அண்மைய தவறுகளைத் திருத்தியும் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இலங்கை சரியான விதத்தில் செயற்படுமாயின் நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.
இத் தொடரின் இரண்டாவது போட்டியில் முதற் தடவையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திலும் விளையாடவுள்ள இலங்கை அணி, 2016ஆம் ஆண்டிலிருந்து 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அவற்றில் 7 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை எடுத்துப்பார்க்கும் போது, இலங்கை அணியினைப் போன்ற ஒரு மோசமான பதிவையே அவர்களும் அண்மைய வருடங்களில் வைத்திருக்கின்றனர்.
இறுதியாக மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்த பாகிஸ்தான் அணி, அதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் வைட் வொஷ் தோல்வியை சந்தித்தது.
அதே போன்று, 2016 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், யாராலும் எதிர்வு கூற முடியாத அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அமைவது வழமையான விடயமாகும்.
இலங்கை அணி
இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பதவியினை சனத் ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் இராஜினாமா செய்த பின்னர், கிரஹம் லப்ரோய் தலைமையிலான புதிய தெரிவுக் குழுவினால் பெயரிடப்பட்ட இலங்கை குழாமே ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகியுள்ளது.
இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் கவனம் செலுத்த 6 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக்கொண்ட காரணத்தினால் அவர் இம்முறை குழாத்தில் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் : அதபத்துவின் கருத்து
மார்வன் அதபத்து இலங்கை கிரிக்கெட் கண்டெடுத்த நேர்த்தியான தொழிநுட்ப…
மேலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், மத்திய வரிசை வீரர் அசேல குணரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் காயம் காரணமாக அணியில் உள்வாங்கப்படாமை இலங்கைக்கு பாரிய இழப்பாகும். எனவே, அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் பலருடனேயே இலங்கை பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.
தற்போது அணியில் இருப்பவர்களில், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்னவுடன் இணைந்து குசல் மெண்டிஸ் வலுப்படுத்தலாம் என எதிர்பார்க்க முடியும். இலங்கை அணிக்காக 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (634) குவித்த வீரராக திமுத் கருணாரத்ன காணப்படுகின்றார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் கருணாரத்ன மொத்தமாக 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இன்னும் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலும், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பினை பெற்ற லஹிரு திரிமான்னவும் இலங்கை அணிக்கு பெறுமதி சேர்க்கக் கூடியவர்கள் என்பதில் ஐயமில்லை.
ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப வீரரான நிரோஷன் திக்வெல்ல டெஸ்ட் போட்டிகளில் மத்திய வரிசையில் அணியினை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட வீரராக காணப்படுகின்றார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் திக்வெல்ல 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 227 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் அணியில் வெற்றிடமாகவுள்ள மெதிவ்ஸ் மற்றும் தரங்க ஆகியோரின் இடத்தினை நிரப்ப அறிமுக வீரர்களான ரோஷென் சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை எதிர்பார்க்க முடியும். பத்து வருடங்களுக்கு மேலாக முதல்தரப் போட்டிகளில் அனுபவம் கொண்ட ரோஷென் சில்வா 50 இற்கு அண்மித்த ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார்.
அதோடு வெறும் 22 வயதேயான சதீர சமரவிக்ரம 2016/17 ஆம் ஆண்டிற்கான பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் நடாத்தப்பட்ட முதல்தர அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சு துறையினை எடுத்து நோக்கும் போது இலங்கை அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் நுவான் பிரதீப் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அதோடு, சுரங்க லக்மாலும் மீண்டும் பூரண உடற்தகுதியினை அடைந்துள்ளார்.
இவர்களோடு சேர்த்து அணியின் மூத்த சுழல் வீரர் ரங்கன ஹேரத் மற்றும் லக்ஷன் சந்தகன் ஆகியோரும் இலங்கைக்கு உபயோகமாக காணப்படுவார்கள். இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் 7 போட்டிகளில் ஆடியிருக்கும் ஹேரத், மொத்தமாக 35 விக்கெட்டுக்களை கைப்பற்றி மேம்பட்ட ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி
திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன, ரொஷேன் சில்வா, தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப், சுரங்க லக்மால்
பாகிஸ்தான் அணி
மிஸ்பாஹூல் ஹக் மற்றும் யூனுஸ் கான் போன்ற அனுபவமிக்க வீரர்களின் ஓய்வினை அடுத்து சர்பராஸ் அஹமட் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியினை நோக்கும் போது, அவர்களும் பல இளம் வீரர்களை கொண்ட நிலையிலேயே இலங்கையை எதிர்கொள்கின்றனர்.
டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை நெருங்கியிருக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அசார் அலி பாகிஸ்தானின் துடுப்பாட்ட தூண்களில் ஒருவராக செயற்படலாம். 46 ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினைக் கொண்டிருக்கும் அலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலும் இரண்டு அபார சதங்களை விளாசி தனது அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார். எனவே, இவர் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய முக்கிய வீரர் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.
இன்னும், அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மட், பாபர் அசாம் மற்றும் அசாத் சபீக் ஆகிய வீரர்களையும் பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தக் கூடிய துடுப்பாட்ட வீரர்களாக கருத முடியும். இதில் அசாத் சபீக் 40 இற்கு அண்மித்த டெஸ்ட் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் ஒரு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
31 வயதாகும் சுழல் வீரரான யாசிர் சாஹ் இலங்கை அணிக்கு நெருக்கடி தந்து பாகிஸ்தானை வலுப்படுத்தக் கூடிய முக்கிய சுழல் பந்து வீச்சாளராவார். இலங்கை அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மொத்தமாக 25 விக்கெட்டுக்களை கைப்பற்றிய யாசிர், தொடர் நாயகனாகவும் தெரிவாகியிருந்தார்.
இன்னும், சூதாட்ட புகாரில் இருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த மொஹமட் ஆமீரும் பாகிஸ்தானின் துருப்புச்சீட்டுக்களில் ஒன்றாக காணப்படுகின்றார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆமீர் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 94 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். ஆமீருடன் சேர்த்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி மற்றும் அனுபவமிக்க வஹாப் ரியாஸ் ஆகியோர் பாகிஸ்தானின் பந்துவீச்சு துறையினை மேம்படுத்துவார்கள் என நம்பிக்கை கொள்ள முடியும்.
எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி
அசார் அலி, ஷான் மஸூத், பாபர் அசாம், அசாத் சபீக், சர்பராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), ஹரிஸ் சொஹைல், மொஹமட் ஆமீர், மொஹமட் அப்பாஸ், யாசிர் சாஹ், வஹாப் ரியாஸ், ஹசன் அலி
எனவே, இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுடான தொடரில் இழந்த பெருமைகளை மீட்பார்களா? இல்லை மோசமான ஆட்டத்தை வழமை போன்று தொடருவார்களா? என்பதை தொடர் நிறைவடைந்த பின்னரே நாம் அறிய முடியும்.
மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க