வசீமின் ஹெட்ரிக்குடன் மாலைதீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை

Mahinda Rajapaksa trophy four nations tournament

143

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்கான முதல் போட்டியில் மாலைதீவுகள் கால்பந்து அணிக்கு 60 நிமிடங்களின் பின்னர் அதிர்ச்சி கொடுத்த இலங்கை வீரர்கள் 4-4 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை சமப்படுத்தினர்

இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்துத் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினத்திற்கு (09) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், குதிரைப் பந்தயத் திடலில் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டிக்கு முன்னர், இலங்கையின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடனங்களுடன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை முதல் பதினொருவர்

ஆட்டத்தின் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை வீரர்களிடையே மேற்கொள்ளப்பட்ட பிழையான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற மாலைதீவுகள் வீரர்கள் கோலுக்காக அடுத்தத்த இரண்டு உதைகளைப் பெற்றனர். இந்த இரண்டு முயற்சிகளையும் சுஜான் சிறந்த முறையில் தடுத்தார்.

இதன்போது கிடைத்த கோணர் உதையின்போது இலங்கை வீரர்கள் தடுத்த பந்தைப் பெற்ற மாலைதீவுகள் வீரர் அலி அஷ்பாக்கிற்கு பந்தை பரிமாற்றம் செய்ய, அவர் உள்ளனுப்பிய பந்தை அணித் தலைவர் அப்துல் கானி ஹெடர் செய்து மாலைதீவுகள் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் சக வீரர் மைதானத்தின் மத்தியில் இருந்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற அலி பாசிர் கோல் எல்லைக்குள் வைத்து பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி அடுத்த கோலையும் பெற்றார்.

17வது நிமிடத்தில் இலங்கை வீரர் மொஹமட் பசால் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

மீண்டும் 34ஆவது நிமிடத்தில் மாலைதீவுகள் அணியின் சிரேஷ்ட வீரர் அலி அஷ்பாக் மைதானத்தின் மத்தியில் இருந்து வங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற இப்ராஹிம் ஹுசைன், இலங்கை பின்கள வீரர்கைளைக் கடந்து பந்தை எடுத்துச் சென்று இடது காலால் உருட்டி பந்தை கோலுக்குள் செலுத்தினார்.

40ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து பசால் வழங்கிய பந்தை ஷமோத் டில்ஷான் ஹெடர் செய்ய, பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

எனவே, மாலைதீவுகளின் ஆதிக்கத்துடன் நிறைவுபெற்ற முதல் பாதியில் இலங்கை அணி மூன்று கோல்களால் பின்னிலையடைந்திருந்தது.

முதல் பாதி: மாலைதீவுகள் 3 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கடந்த நிலையில் சக வீரர் ஒரு திசையில் இருந்து வழங்கிய பந்தை அலி அஷ்பாக், இலங்கை பின்கள வீரர்களையும் தாண்டி கோல் எல்லைக்குள் எடுத்துச் சென்று கம்பங்களுக்குள் பந்தை செலுத்தி தனது கோல் கணக்கையும் ஆரம்பித்தார்.

எனினும், 60 நிமிடங்களின் பின்னர் இலங்கை வீரர்களின் ஆட்டம் போட்டியில் மேலோங்கியது.

இதன் விளைவாக, 65ஆவது நிமிடத்தில் மார்வின் ஹமில்டனிடம் பந்தைப் பரிமாற்றம் செய்துவிட்டு முன்னே சென்ற வசீம் ராசிக், மீண்டும் தன்னிடம் வந்த பந்தை கோலுக்குள் செலுத்தி இலங்கைக்கான முதல் கோலைப் பெற்றார்.

அடுத்த 3 நிமிடங்களில் அசிகுர் ரஹ்மான் மைதானத்தின் மத்தியில் இருந்து வழங்கிய பந்தை, டிலன் டி சில்வா வசீமுக்கு வழங்க, அதனையும் வசீம் கோலாக்கினார்.

மீண்டும் எதிரணியின் கோல் எல்லையில் ஆக்கிரமித்த இலங்கை அணி வீரர்கள் மிக வேகமாக பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். அதன் நிறைவில் டிலன் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின் மூலம் வசீம் ராசிக் தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் இலங்கை வீரர்கள் போட்டியை சமப்படுத்தும் நான்காவது கோலுக்காக கடுமையாகப் போராடினர்.

இதன் பலனாக போட்டியின் இறுதி நிமிடத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை சகவீரர் ஹெடர் செய்ய, வசீம் பந்தை கோலுக்குள் செலுத்தி தனது நான்காவது கோலையும் பதிவு செய்து போட்டியை சமப்படுத்தினார்.

இந்த தொடரின் அடுத்த போட்டியாக பங்களாதேஷ் மற்றும் சீசெல்ஸ் அணிகள் நாளை மோதவுள்ளன. அடுத்த போட்டிகள் குறித்த புதிய அட்டவணை இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் இன்னும் வெளியிடப்படவில்லை.

முழு நேரம்: மாலைதீவுகள் 4 – 4 இலங்கை

கோல் பெற்றவர்கள்

  • மாலைதீவுகள் – அப்துல் கானி 8’, அலி பாசிர் 10’, இப்ராஹிம் ஹுசைன் 34’, அலி அஷ்பாக் 58’
  • இலங்கை – வசீம் ராசிக் 65’, 68’, 73’ 90+3’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

மாலைதீவுகள் – சமோஹ் அலி 25’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<