உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதை புறக்கணித்த சாரங்கி

World Athletics Championship 2022

92

பெண்களுக்கான நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான சாரங்கி சில்வா, இம்மாதம் 15ஆம் திகதி அமெரிக்காவின் ஒரிகனில் ஆரம்பமாகவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிற்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நீளம் பாய்தல் போட்டி நிகழ்ச்சிக்கு தகுதி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக பெண்களுக்கான நீளம் பாய்தல் உலக தரவரிசையின்படி உலக சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறும் வாய்ப்பை ஒருசில புள்ளிகளால் அவர் தவறவிட்டார், ஆனால், அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பின்னர் முதல் 32 வீராங்கனைகளுக்குள் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இதனையடுத்தே அவருக்கு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பிற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருப்பினும், இம்மாத இறுதியில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் நோக்கில் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

எனவே, பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ள சாரங்கி, குறித்த விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு மேலதிக பயிற்சிகளுக்காக இந்த வார இறுதியில் துருக்கி செல்ல உள்ளார். இதன்போது அவரது தனிப்பட்ட பயிற்சியாளரும் அவருடன் துருக்கி செல்லவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கை அடுத்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்ற வேண்டும் என்பது தான் அனைத்து மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்களின் கனவாகும்.

ஆனால், அவ்வாறு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்ற பின்னர், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கமொன்றை வென்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சாரங்கி சில்வா எடுத்த இந்த முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.

இதேவேளை, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையில் இருந்து மூன்று வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். இதில் ஆண்களுக்கான 100 மீட்டரில் யுபுன் அபேகோன், பெண்களுக்கான 800 மீட்டரில் கயன்திகா அபேரட்ன மற்றும் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்நாயக்க ஆகியோர் இலங்கை சார்பில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<