இவ்வருடத்தில் பெற்றுக்கொண்ட தொடர்ச்சியான பல அதிர்ச்சி தோல்விகளால் “இலங்கை கிரிக்கெட் அணியின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது.” என சமூக வலைத்தளங்களில் இரசிகர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் ஏன் அரசியல் வாதிகளாலும் கூட விமர்சனங்கள் ஏற்படுத்தப்பட்டு  வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் இத் தருணத்தில் சொந்த மண்ணில் வைத்து தம்மை டெஸ்ட் தொடரில் 3-0 என வைட் வொஷ் செய்த அயல் நாட்டுக்காரர்களை இலங்கை அணி எவ்வாறு ஒரு நாள் தொடரில் எதிர்கொள்ளப்போகின்றது? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பல தோல்விகளை சந்திருந்த போதிலும் இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்று முடிந்த சம்பியன் கிண்ணத்தொடரில் இந்தியாவை இறுதியாக ஒரு நாள் போட்டிகளில் சந்தித்திருந்த இலங்கை அணி அந்த மோதலில் எதிரணியினை 7 விக்கெட்டுக்களால் அபாரமாக வெற்றிகொண்டு தம்மால் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்பதனையும் கிரிக்கெட் உலகிற்கு நிரூபிக்க தவறியிருக்கவில்லை.

இது இவ்வாறாக இருக்க, தம்மீது அதிகரித்துவரும் விமர்சனங்களிற்கு சரியான பதிலை இலங்கை வழங்குமா? என்பதை அறிந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் ஆரம்பமாகும் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நிறைவுறும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இலங்கைஇந்தியா ஒரு நாள் போட்டிகள்  வரலாறு

தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, இரண்டு அணிகளிற்குமிடையிலான 151 ஆவது மோதலாக அமையவுள்ளது. டெஸ்ட் போட்டிகள் போன்று, வரலாற்றில் 1979 ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணியுடனேயே தமது முதல் வெற்றியினை இலங்கை அணி பதிவு செய்திருந்தது.

இதுவரையில் அயல் நாடுகள் இரண்டிற்கும் இடையில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளில் 83 போட்டிகளினை இந்தியா கைப்பற்றியுள்ளதோடு, 55 போட்டிகளில் வெற்றியாளராக இலங்கை தமது நாமத்தை பதிவு செய்திருந்தது. இரு அணிகளுமிடையிலான ஒரு போட்டி சமநிலை அடைந்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2014 ஆம் ஆண்டு நவம்பரில் இரு அணிகளும் ஒரு இறுதியாக ஒரு நாள் தொடர் ஒன்றில் சந்தித்து இருந்தன, இந்தியாவில் இடம்பெற்றிருந்த அந்த தொடரினை, அப்போதைய மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி 5-0 என பறிகொடுத்திருந்தது.

அதே போன்று, 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் இறுதியாக இலங்கை அணியின் சொந்த மண்ணில், ஒரு நாள் தொடரொன்றில் விளையாடியிருந்த இந்தியா அதனையும் 4-1 என கைப்பற்றியிருந்தது.

ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளதும் அண்மைய கள நிலவரங்கள்

முன்னணி வீரர்களின் ஓய்விற்கு பின்னர், 2017 ஆம் ஆண்டே இலங்கை கிரிக்கெட்டிற்கு “இருண்ட  காலம்” எனக் கூறும் அளவிற்கு மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் 5-0 என வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை, அதனை அடுத்து பலம் குறைந்த பங்களாதேஷ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரிலும் பெரிதாக சாதித்திருக்கவில்லை.

சம்பியன் கிண்ணத்தொடரில், உலகின் முதல் நிலை அணிகளில் ஒன்றான இந்தியாவினை இலங்கை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சாதனை படைத்திருந்த போதும், அத்தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உடனான போட்டிகளில் மோசமான ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்து இலங்கை அணி தோல்வியையே சந்தித்திருந்தது.

ஒரு காலத்தில் உலகின் இரண்டாம் நிலை ஒரு நாள் அணியாக காணப்பட்டு தொடர் தோல்விகளின் காரணமாக, ஒரு நாள் தரவரிசையிலும் தற்போது 8 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கும் இலங்கை, அண்மையில் ஜிம்பாப்வே உடன் ஒரு நாள் தொடரினை பறிகொடுத்த காரணத்தினால் இரசிகர்கள் இலங்கை மீதான நம்பிக்கையை படிப்படியாக இழந்து வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

அதோடு, தற்போது தமது அண்டை நாட்டு அணியுடன் டெஸ்ட் தொடரினையும் இலங்கை கோட்டைவிட்டிருப்பது, இலங்கை அணியிற்கு மேலும் அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து மொத்தமாக 16 ஒரு நாள் போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அணி, அவற்றில் வெறும் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. (நான்கு வெற்றிகளில் இந்திய அணிக்கெதிரானது தவிர ஏனைய மூன்றும் சவால் குறைந்த ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் பெறப்பட்டதாகும்.) இது, இலங்கை அணி மிகவும் பின்னடைவான நிலையில் இருக்கின்றது என்பதற்கு தகுந்த சான்றாகும்.

இவ்வருடத்தின் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியில், ஒரு நாள் தரவரிசைப்பட்டியலில் இங்கிலாந்தோடு சேர்த்து முதல் 7 இடங்களில் காணப்படும் அணிகள் மாத்திரமே 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறும் என்பதாலும் ஒரு நாள் தரவரிசையில் இலங்கை அணி தமது தற்போதைய நிலையை விட்டு மேலும் பின்தள்ளப்படாது அதனையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டியுள்ளது.

எனவே, பலமிக்க இந்திய அணியுடனான இந்த ஒரு நாள் தொடரினை இலங்கை அணி பொன் போன்று பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.

இந்திய அணியினை எடுத்துப் பார்க்கும் போது, இவ்வருடத்தில் அவர்கள் சம்பியன் கிண்ணத் தொடரை தவிர தாம் பங்குபற்றிய ஏனைய ஒரு நாள் தொடர்கள் அனைத்தினையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சொந்த மண்ணில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில், இளம் வீரர்களை கொண்டிருந்த  இந்திய வீரர்கள் அதிக ஓட்டங்கள் எதிரணியினால் இலக்காக நிச்சயிக்கப்பட்டிருந்தும், அவற்றை மிகவும் இலகுவாக எட்டி தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருந்தனர்.

இங்கிலாந்து அணியுடனான தொடரினை அடுத்து, சம்பியன் கிண்ணத் தொடரிலேயே இந்தியா மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தது. அத்தொடரில் குழு  நிலை ஆட்டங்களில் இலங்கை அணியுடனான போட்டியில் தோற்றிருப்பினும் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளிற்கு எதிரான போட்டிகளில் மலைக்க வைக்கும் விதமான வெற்றிகளை இந்தியா சுவீகரித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து, சம்பியன் கிண்ண அரையிறுதியிற்கும் முன்னேறி அதில்பங்களாதேஷ் அணியினை வீழ்த்தி இறுதிப் போட்டியிற்கு தெரிவாகியிருந்த இந்திய அணியே, சம்பியன் கிண்ண வெற்றியாளர்களாக மாறும் எனஅனைவராலும் எதிர்பார்க்கப்படிருந்தும், அபாரம் காட்டியிருந்த பாகிஸ்தான்அணியிடம் துரதிர்ஷ்டவசமாக தோல்வியினை தழுவி கிண்ணத்தைபறிகொடுத்தது.

ஒரு நாள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா இறுதியாக மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவ்வணியுடனான ஒரு நாள் தொடரினையும் இளம் வீரர்களுடன் 3-1 எனக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வருடத்தில், மொத்தமாக 13 போட்டிகளில் ஆடியிருக்கும் விருந்தாளிகளான இந்திய அணியினர் அவற்றில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒரு போட்டி மழை காரணமாக கை விடப்பட்டிருந்தது.

எனவே, இந்திய அணியின் அண்மைய வெற்றிகளை எடுத்து நோக்குகின்ற போது, இந்த ஒரு நாள் தொடரிலும் டெஸ்ட் தொடர் போன்று இலங்கையிற்கு அதிக அழுத்தம் தரக்கூடிய ஒரு அணியாக இந்தியா இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது.

இலங்கை அணி

பல அனுபவம் குறைந்த வீரர்களையே, இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரிற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை கொண்டுள்ளது. அணியில் அண்மைய காலங்களில் சிறப்பாட்டத்தை வெளிக்காட்டிய வீரர்களான சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன மற்றும் வலது கை வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் ஆகியோர் உபாதையின் காரணமாக அணியில் உள்வாங்கப்படாது போனது, இலங்கையிற்கு பாரிய பின்னடைவாகும்.

Photo Caption - அஞ்சலோ மெதிவ்ஸ்
அஞ்சலோ மெதிவ்ஸ்

2013 இல் இலங்கையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்த அஞ்சலோ மெதிவ்ஸ், ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரின் தோல்வியினை அடுத்து தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் சாதாரண அணி வீரராக பங்கேற்கும் முதல் ஒரு நாள் தொடர் இதுவாகும். தற்போது, குழாத்தில் இருக்கும் வீரர்களில் இந்திய அணிக்கெதிராக 31 போட்டிகளில் விளையாடி 46.75 என்கிற சிறப்பான ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் ஒரே வீரர் மெதிவ்ஸ் மாத்திரமே ஆவார்.

அவரோடு சேர்த்து இந்திய அணிக்கெதிராக இதுவரை 1007 ஓட்டங்களினை குவித்திருக்கும் இலங்கை அணியின் புதிய ஒரு நாள் மற்றும் T-20 அணியின் தலைவர் உப்புல் தரங்க இன் அனுபவமும் அணியின் துடுப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருடத்தில், மொத்தமாக 14 ஒரு நாள் போட்டிகளில் ஆடியிருக்கும் தரங்க 53.72 என்கிற சராசரியுடன் 591 ஓட்டங்களினை குவித்து இலங்கை சார்பாக இவ்வருடத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக காணப்படுகின்றார்.

உப்புல் தரங்க
உப்புல் தரங்க

மேலும், ஜிம்பாப்வே அணியுடான ஒரு நாள் தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்த தனுஷ்க குணத்திலக்க (323), நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரினது துடுப்பாட்ட பங்களிப்பினையும் இலங்கை அணி வேண்டி நிற்கின்றது

தலைமை பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் பதவி விலகிய பின்னர், ஒரு நிரந்தர பயிற்றுவிப்பாளர் இன்றி தற்போது காணப்படும் இலங்கை அணியில், இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் காயத்திற்கு உள்ளாகிய அதிரடி ஆட்டக்காரர் குசல் ஜனித் பெரேரா மீண்டும் கிரிக்கெட்டில் மறுபிரவேசத்தினை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும் அவரிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னும், இலங்கை அணியின் டெஸ்ட் தலைவர்  தினேஷ் சந்திமால் இந்தியாவிற்கு எதிராக 30 கிட்டவான ஓட்ட சராசரியினைக் கொண்டிருந்தும், ஒரு நாள் போட்டிகளில் அவரது அண்மைய மோசமான ஆட்டங்களின் காரணமாக அவரும் அணியில் உள்வாங்கப்படவில்லை.

பந்து வீச்சினை எடுத்து நோக்கும் போது, இலங்கை அணியில் அனுபவமிக்க பந்து வீச்சாளராக, லசித் மாலிங்க காணப்படுகின்றார். இதுவரையில் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக 16 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருக்கும் மாலிங்க, (காயம் காரணமாக எடுத்துக்கொண்ட) நீண்ட கால ஓய்விற்கு பின்னர் இலங்கை அணியிற்கு திரும்பி தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருக்கின்றார். இவ்வருடத்தில் 8 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வெறும் 7 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கும் மாலிங்க தனது பழைய அனுபவங்களை கொண்டே இந்த ஒரு நாள் தொடரில், சாதிக்க வேண்டும்.

லசித் மாலிங்க
லசித் மாலிங்க

மாலிங்கவோடு சேர்த்து, இங்கிலாந்து உள்ளூர் T-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதற்காக அணியில் இணைக்கப்பட்டுள்ள பகுதி நேர வேகப் பந்துவீச்சாளரான திசர பெரேரா,வனிது ஹஸரங்க மற்றும் முதற்தடவையாக இலங்கையின் ஒரு நாள் குழாத்தில் வாய்ப்பினை பெற்றிருக்கும் உள்ளூர் சுழல் ஜாம்பவான் மலிந்த புஷ்பகுமார மற்றும் சைனமன் சுழல் வீரர் லக்ஷன் சந்தகன் ஆகியோர் இலங்கை அணியின் பந்து வீச்சினை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியும்.

இந்த ஒரு நாள் தொடரிற்கு முன்பாக கருத்து தெரிவித்திருக்கும், இலங்கை அணியின் தலைவர் உப்புல் தரங்க தமது அணியில் தமக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும், பொறுமையுடன் நாம் சாதிக்கும் வரை இரசிகர்கள் தமக்கு ஆதரவு வழங்கவும்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி 

தனுஷ்க  குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், உப்புல் தரங்க (தலைவர்), அஞ்சலோ மெதிவ்ஸ், சாமர கப்புகெதர, திசர பெரேரா, வனிது ஹஸரங்க/மலிந்த புஷ்பகுமார, லசித் மாலிங்க, அகில தனன்ஞய


இந்திய அணி

இந்திய அணி, அவர்களது அண்மைய ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்த முக்கிய வீரர்களான யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா, மொஹமெட் சமி,  உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிற்கு இலங்கை உடனான ஒரு நாள் தொடரில் ஓய்வினை வழங்கியிருப்பினும் இளம் வீரர்களுடன் கூடிய பலமான குழாம் ஒன்றினையே வைத்துள்ளது.

விராத் கோலி
விராத் கோலி

அவ்வணியின் துடுப்பாட்டத்தினை எடுத்து பார்க்கும் போது, அணித்தலைவர் விராத் கோலி இலங்கையிற்கு எப்போதும் அச்சுறுத்தல் தரும் வீரர், ஒரு நாள் போட்டிகளில் 54.28 என்கிற ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் கோலி அணியின் துடுப்பாட்டத்திற்கு முதுகெலும்பாக காணப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

அதோடு, சம்பியன் கிண்ணத் தொடரில் இலங்கையிற்கு எதிராக சதம் விளாசிய சிக்கர் தவான், இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ஓட்டங்கள் (336) சேர்த்த அஜிங்கயா ரஹானே  மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் அபாயகரமான வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அஜிங்கயா ரஹானே  
அஜிங்கயா ரஹானே

இன்னும், அவ்வணியின் மத்திய வரிசை வீரர்களான மஹேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் இலங்கை பந்து வீச்சாளர்களை சிதைத்து மிகவும் விரைவாக தங்களது இரும்புக்கரம் மூலம் ஓட்டங்களை சேர்க்க கூடியவர்கள்.

இளம் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணியில் ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சுத்துறையினை முன்னெடுக்கவுள்ளனர். சைனமன் சுழல் வீரராக காணப்படும் 22  வயதேயான குல்தீப் யாதவ் இந்திய அணியின் இறுதி ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட்டுக்களை (8) கைப்பற்றிய வீரராக காணப்படுகின்றார். அதோடு, இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கையை  யாதவ் அச்சுறுத்தியிருந்தார். எனவே, இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்களை சரியான முறையில் முகம்கொடுக்காவிடில் இலங்கை வீரர்கள் வீழ்த்தப்படும் நிலையில் காணப்படுகின்றனர்.

எனக்கு கிடைத்திருக்கும் பாத்திரத்தினைக் கொண்டு, ஒகஸ்ட் 20 இல் இடம்பெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியின் ஒவ்வொரு தருணங்களினையும், இரசித்து ஆடப்போகின்றேன்.“

என இந்திய அணியின் உபதலைவராக நியமிக்கப்பட்டிருக்கும், ரோஹித் சர்மா நடைபெறப்போகும் ஒரு நாள் தொடர் முன்பாக பேசியிருந்தார்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி 

ரோஹித் சர்மா, சிக்கர் தவான், விராத் கோலி (அணித்தலைவர்), அஜிங்கியா ரஹானே, KL ராகுல், மஹேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ்


இறுதியாக

வரலாற்றில் பல சாதனைகளை படைத்திருந்த இலங்கை அணியானது, தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் காணப்படுகின்றது. தமது அண்மைய  மோசமான வீழ்ச்சிகளில் இருந்து மீண்டெழுவதற்கும், உலக கிண்ண வாய்ப்பிற்காக கத்துக்குட்டி அணிகளுடன் போட்டியிடாமல் இருக்கவும் சவால் மிக்க இந்திய அணியுடனான இந்த ஒரு நாள் தொடரினை சரியான முறையில் வெற்றிகொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ள தம்புள்ளை, கண்டி, கொழும்பு ஆகியவற்றின் மைதானங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதமாகவே அமையும் என்கிற காரணத்தினால், அதிக ஓட்டங்கள் பெறப்படப்போகும் ஒரு தொடராகவே இந்த ஒரு நாள் தொடரை பார்க்க முடியும்.

எனவே, இத்தொடரில் சாதித்து மீண்டும் உலகின் சவால் மிக்க அணிகளில் ஒன்றாக மாற இலங்கை அணியிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.