இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 போட்டி சமநிலை அடைந்ததோடு, இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>இந்திய தொடரிலிருந்து வெளியேறும் ஷமார் ஜோசப்<<
இந்திய – இலங்கை அணிகள் இடையில் துபாயில் நேற்று (26) ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி சுப்பர் 4 போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் ஏற்கனவே இறுதிப் போட்டி வாய்ப்பினை இழந்த இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டி வாய்ப்பினை பெற்ற இந்தியாவினை எதிர் கொண்டிருந்தனர்.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில், இந்திய வீரர்களை துடுப்பாடப் பணித்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
இந்திய அணியின் தரப்பில் அபிஷேக் ஷர்மா 31 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுக்க, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கைப் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஸன மற்றும் சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
>>பர்ஹான், ரவூப் தொடர்பில் ஐசிசியிடம் முறையிட்டுள்ள இந்தியா<<
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 203 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது, தொடக்கத்தில் குசல் மெண்டிஸின் விக்கெட்டினை இழந்து தடுமாறியது.
எனினும் பின்னர் பெதும் நிஸ்ஸங்க – குசல் பெரேரா ஜோடியின் அபார அதிரடி காரணமாக போட்டியில் முன்னேறத் தொடங்கியது. இரண்டு வீரர்களும் இந்தியப் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்து, இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 127 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த குசல் பெரேரா 17ஆவது T20I அரைச்சதத்துடன் 32 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் பெதும் நிஸ்ஸங்க T20I போட்டிகளில் தன்னுடைய கன்னி சதத்தினைப் பூர்த்தி செய்ய, இலங்கை அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்கியதோடு இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட 11 ஓட்டங்களை பெற்று 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களுடன் போட்டியினை சமநிலை செய்தது. பின்னர் சுப்பர் ஓவரில் இந்திய அணியானது போட்டியில் வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது.
இலங்கை அணியின் வெற்றிக்காக போரடிய பெதும் நிஸ்ஸங்க 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்கள் பெற்றார். தசுன் ஷானக்க 11 பந்துகளில் இறுதிவரை நின்று ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷிட் ரனா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<